அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு, கொடிமாடச் செங்குன்றூர், நாமக்கல் மாவட்டம்.
+91-4288-255 925, 93642 29181 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அர்த்தநாரீஸ்வரர் | |
அம்மன் | – | பாகம்பிரியாள் | |
தல விருட்சம் | – | இலுப்பை | |
தீர்த்தம் | – | தேவதீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்கொடிமாடச் செங்குன்றூர் | |
ஊர் | – | திருச்செங்கோடு | |
மாவட்டம் | – | நாமக்கல் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார். அவரது அருகில் இருக்கும் உமாதேவியைக் கண்டு கொள்ளமாட்டார். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி, “முனிவரே. சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர்” என சாபமிட்டாள். இதையறிந்த சிவன், “நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை” எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். இடப்பாகத்தில் தான் இதயம் இருக்கிறது. மனைவி என்பவள் இதயத்தில் இருக்க வேண்டியவள் என்பதற்கேற்ப இந்த சம்பவம் நிகழ்ந்தது. இருவரும் இணைந்த வடிவம் “அர்த்தநாரீஸ்வரர்” எனப்பட்டது. “அர்த்தநாரீ” என்றால் “இணைந்த வடிவம்” எனப் பொருள். இந்த வடிவத்துடன் அவர் பூலோகத்திற்கும் வந்து சில தலங்களில் குடிகொண்டார். அதில் ஒன்றே திருச்செங்கோடு. திருச்செங்கோடு என்பதற்கு “அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை” என்றும், “செங்குத்தான மலை” என்றும் பொருள். மலையின் பெயரே ஊருக்கு அமைந்து விட்டது.
இந்த மலை உருவானதற்கு புராணக்கதை உண்டு. ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதற்காக ஒரு பந்தயம் கட்டப்பட்டது. ஆதிசேஷன் தன் படங்களால் மேரு மலையை அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும். வாயு தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்பதே பந்தயம். இதன்படி வாயு வேகமாக வீச, மலையின் முகட்டுப்பகுதிகள் பறந்து சென்று பூமியின் பல இடங்களிலும் விழுந்தன. அதில் ஒன்றே திருச்செங்கோட்டு மலை. ஆதிசேஷ பாம்பு மலையைப் பிடித்த போது, ஏற்பட்ட காயத்தில் இருந்து இரத்தம் கொட்டி, மலை செந்நிறமானதாலும் இப்பெயர் வந்ததாகச் சொல்வர்.
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர்
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர், கரூர் மாவட்டம்.
+91- 4324 – 262 010 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பசுபதீஸ்வரர்( பசுபதிநாதர், பசுபதி, ஆனிலையப்பர்) | |
அம்மன் | – | அலங்காரவல்லி , சௌந்தரநாயகி, கிருபா நாயகி | |
தல விருட்சம் | – | வஞ்சி | |
தீர்த்தம் | – | தடாகைதீர்த்தம், ஆம்பிரவதி (அமராவதி) நதி | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கருவூர், திருக்கருவூர் ஆனிலை | |
ஊர் | – | கரூர் | |
மாவட்டம் | – | கரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
பிரம்மனுக்கு, தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவைக் கொண்டு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி காமதேனு, நாரதர் கூறியபடி பூமிக்கு வந்து, வஞ்சி வனமாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தது. அப்போது, “புற்று ஒன்றிற்குள் பாதாளத்தில் ஆதிலிங்கம் இருக்கும். அதை வழிபடு” என்று அசரீரி கேட்டது. அதன்படி காமதேனுவும் தன் மடியிலிருந்த பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்தது. ஒரு நாள் இறைவன் திருமுடியில் காமதேனுவின் குளம்பு பட்டுவிடவே, இலிங்கத்தில் ரத்தம் வந்தது. இதனால் காமதேனு மனம் வருந்தியது. இதனைக்கண்ட இறைவன், காமதேனுவிடம், “நீ என்னை வழிபட்ட காரணத்தினால் இந்த உலகம் என்னை ‘பசுபதிநாதர்‘ என்ற பெயரால் அழைக்கும். அத்துடன் நீயும் பிரம்மனைப்போல் படைப்பு தொழில் செய்வாய்” என்று வரம் தந்தார். அதன்படி காமதேனுவும் படைப்பு தொழில் செய்ய, பிரம்மனுக்கு கர்வம் நீங்கியது. இதையடுத்து இறைவன் படைப்புத் தொழிலை பிரம்மனிடம் ஒப்படைத்து விட்டு காமதேனுவை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொண்டார் என்று இத்தல வரலாறு கூறுகிறது.