அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருவெறும்பூர்

அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருவெறும்பூர், திருச்சி மாவட்டம்.

+91-431 – 6574 738, +91-98429 – 57568 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் எறும்பீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் நறுங்குழல் நாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவெறும்பியூர், திருவெறும்பூர்
ஊர் திருவெறும்பூர்
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

தாரகாசுரன் எனும் அசுரன் இந்திரலோகத்தை கைப்பற்றி இந்திரனையும், தேவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டனர். அவர் பூலோகத்தில் இத்தலத்தில் குன்றின் மீது சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருப்பதாகவும், இலிங்கத்திற்கு மலர் வைத்து பூஜை செய்து வழிபட்டால் அவர் அசுரனை அழிப்பார் என்றும் கூறினார். அதன்படி தேவர்கள் இத்தலம் வந்தனர். அசுரனின் கண்ணில் படாமல் இருப்பதற்காக சிறிய எறும்பின் வடிவம் எடுத்து சிவனை வழிபட்டனர். சிவனின் உச்சியில் (தலையில்) மலர் வைக்க பாணத்தின் மீது ஏறியபோது, இலிங்கம் வழவழப்பாகவும், செங்குத்தாக இருந்ததால் அவர்களால் மேலே செல்ல முடியவில்லை. தேவர்கள் படும் துயரத்தை கண்ட சிவன், அவர்கள் எளிதாக ஏறிவர, மண்புற்று போல தன் உருவத்தை மாற்றிக் கொண்டதோடு, சற்றே இடப்புறமாக சாய்ந்தும் கொண்டார். பின், தேவர்கள் எளிதாக ஏறிச்சென்று சிவன் தலையில் மலர் வைத்து வழிபட்டனர்.

அவர்களுக்கு அருள் புரிந்த சிவன், தாரகாசுரனை அழித்து தேவர்களைக் காத்தார். “எறும்பீஸ்வரர்என்ற பெயரும் பெற்றார். கருவறையில் சிவலிங்கம் புற்று வடிவில் மேடும், பள்ளமுமாக ஒரு முழுமையான அமைப்பு இல்லாமல் மணல் இலிங்கமாக இருக்கிறது. எனவே, இலிங்கத்திற்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் காப்பு மட்டுமே செய்கின்றனர். இலிங்கம் இடப்புறத்தில் சாய்ந்தபடி இருக்க, மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது. பார்வைக்கு இலிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பது போல இருக்கிறது. இதில் வலப்புறம் உள்ள பகுதியை சிவன் அம்சம் என்றும், இடப்புறத்தை அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர். இந்த இலிங்கத்திற்கு சிவசக்தி இலிங்கம்என்ற பெயரும் உண்டு. சிவமும், சக்தியும் ஒன்று என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது. தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சுவாமியை வழிபடுவது மிகவும் விசேஷம்.

அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி

அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி, திருச்சி மாவட்டம்.

+91- 431 – 270 4621, 271 0484, 270 0971

காலை 6 – மதியம் 12 மணி, மாலை 4 – இரவு 8.30 மணி வரையில் கோயில் திறந்திருக்கும். உச்சிப்பிள்ளையார் கோயில் காலை 6 – இரவு 8மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தாயுமானவர்
அம்மன் மட்டுவார்குழலி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
ஆகமம்/பூஜை காரணம், காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சிரபுரம், மலைக்கோட்டை
ஊர் திருச்சி
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், அப்பர்

வாயுபகவான், ஆதிசேஷனுக்கிடைய தங்களில் யார் பெரியவர் எனப் போட்டி வந்தது. ஆதிசேஷனை மீறி, கைலாய மலையை வாயு பகவான் பெயர்ப்பது என அவர்களுக்குள் போட்டி வைத்துக்கொண்டனர். அப்போது கைலாயத்தின் ஒரு பகுதி இத்தலத்தில் விழுந்தது. இம்மலையில், மூன்று தலைகளுடைய திரிசிரன்என்னும் அசுரன், சிவனை வேண்டித் தவமிருந்தான். பல்லாண்டுகள் தவமிருந்தும் சிவன், அவனை சோதிப்பதற்காக காட்சி தரவில்லை. எனவே, அசுரன் தனது இரண்டு தலைகளை அக்னியில் போட்டுவிட்டு, மூன்றாவது தலையையும் போடத்துணிந்தான். அப்போது அவனுக்குக் காட்சி தந்த சிவன், இழந்த இரு தலைகளை மீண்டும் பெற அருள் செய்தார். பின்பு, அசுரனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.

அசுரனின் பெயராலேயே, “திரிசிரநாதர்என்று பெயர் பெற்றார். தலம் திரிச்சிராமலைஎன்று அழைக்கப்பட்டு, திருச்சி என மருவியது.