அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், திருப்பாண்டிக் கொடுமுடி, கொடுமுடி, ஈரோடு மாவட்டம்.

+91- 4204-222 375 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மகுடேஸ்வரர்
அம்மன் திரிபுர சுந்தரி, மதுரபாஷினி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பாண்டிக்கொடுமுடி
ஊர் கொடுமுடி
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யார் வலிமை மிக்கவர் என்பதில் போட்டி எழுந்தது. அவர்கள் மேரு மலையை நடுவில் வைத்தனர். ஆதிசேஷன் மேருவை கட்டி அணைத்துக்கொண்டான். வாயு பகவான் தனது வேகத்தால் ஆதிசேஷனை மேருவிலிருந்து தள்ள முயன்றார். காற்று படுவேகமாக வீசியபோது மேருமலை சிதறி ஏழு துண்டுகளாக விழுந்தது. ஒவ்வொன்றும் இரத்தினமாக மாறி இலிங்கமாக ஆனது. கொடுமுடி தலத்தில் வைரக்கல்லால் ஆன இலிங்கமாக இறைவன் குடியிருந்ததாக ஐதீகம். இது ஒரு நாகர் ஸ்தலம். நாகதோஷம் நீங்க இங்கு பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர். இங்கே மூன்று முகம் கொண்ட பிரம்மனை தரிசிக்கலாம். வன்னி மரத்தடியில் இவர் அருள்பாலிக்கிறார். வன்னி மரத்தை இன்னொரு முகமாக பாவித்துக் கொள்ள வேண்டும். அகத்தியர், பரத்வாஜர் ஆகிய முனிவர்களுக்கு இங்கு இறைவன் திருமண கோலத்தில் காட்சிதந்தார். ஆதிசேஷனால் உருவான கோயில் என்பதால், இங்கு நாகர்வழிபாடு விசேஷம். ஆஞ்சநேயர் கோரமான பல்லுடன் இங்கே காட்சி தருகிறார். சஞ்சீவி மலையை கொண்டு வருவதற்காக வடக்கு நோக்கி செல்வது போன்ற தோற்றத்தில் உள்ளார். வாலில்மணி கட்டப்பட்டுள்ளது. பெருமாள் சன்னதியின் உட்புறத்தில் ஒரு தூணில் வியாக்ரபாத விநாயகரின்சிற்பம் உள்ளது. புலியின் காலும், யானையின் முகமும் கொண்ட இந்த விநாயகர் மிகவும் அபூர்வமானவர். இங்கே ஈசன், “மகுடேஸ்வரர், மலைக் கொளுந்தீஸ்வரர்என்றும், அம்பாள்,”சவுந்தரநாயகி, வடிவுடைய நாயகிஎன்றும் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகின்றனர். அமாவாசை நாட்களில் பிதுர் தர்ப்பணம் செய்ய காவிரிக்கரையில் ஏராளமானோர் கூடுகிறார்கள். அறுபதாம் கல்யாணம், ஆயுள்ஹோமம் ஆகியவை நடத்த இத்தலம் விசேஷமானது. இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்தமரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும்போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுத்தான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள்.

தேவாரப்பதிகம்:

இட்டனும்மடி ஏத்துவார் இகழ்ந்து இட்ட நாள் மறந்திட்ட நாள் கெட்டநாள் இவை என்றலாற் கரு தேன் கிளர் புனல்காவிரி வட்ட வாசிகை கொண்டடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது 6வது தலம்.

திருவிழா:

சித்திரை திருவிழா 11 நாள் நடக்கிறது. ஆடிப்பெருக்கன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களிலும் விசேஷ பூஜை உண்டு.

பிரார்த்தனை:

இராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்து திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு ஆகியவை அடையப்பெறுகிறார்கள். ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்ற வேண்டும். நாகதோஷம் நீங்க வன்னி மரத்தடியில் கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும். நவக்கிரக பூஜைசெய்து, வாழை மரத்திற்கு தாலிகட்டும் பழக்கமும் இங்கு உள்ளது.

நேர்த்திக்கடன்:

வேப்பமரமும், அரசமரமும் இணைந்துள்ள மரத்தடியில் உள்ள விநாயகருக்கு காவிரியிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து ஊற்றினால் திருமண வரமும், குழந்தைவரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோயிலைச்சுற்றி எங்கும் நாகர் பிரதிஷ்டை நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *