அருள்மிகு முனியப்பன் திருக்கோயில், வெண்ணங்கொடி

அருள்மிகு முனியப்பன் திருக்கோயில், வெண்ணங்கொடி, சேலம் மாவட்டம்.

+91 98650 75344 (மாற்றங்களுக்குட்பட்டது)

24 மணிநேரமும் திறந்திருக்கும்.

மூலவர் முனியப்பன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வெண்ணங்கொடி
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

அந்தகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டினர். அவள் அவர்களைக் காப்பதற்காக காத்தாயம்மன் என்ற பெயரில் தோன்றினாள். அவள் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி. சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கினாள். அவர்கள் அந்தகாசுரனை அடக்கினர். பின்னர் முனிகள் அனைவரும் ஒரே வடிவாகி கலியுகத்தில் மக்களைக் காப்பதற்காக பூமிக்கு வந்தனர். இவர்களது அம்சமாக விளங்குபவர் தான் இந்த முனியப்பன். இவர் கனல் கக்கும் வீரக் கண்களும், அருள் ஒளிரும் மேனியழகும், அஞ்சேல் என அபயம் காட்டும் அருளழகும் பொங்க விளங்குகிறார். நீண்டதூர பயணம் புறப்படுபவர்கள் தங்கள் வாகனங்களுடன் இங்கு வந்து முனியப்பனை வணங்கிய பிறகு பயணம் செல்கின்றனர். தங்களுடன் பாதுகாப்பாக அந்த முனியப்பனே வருவதாக நம்புகின்றனர். 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் இது. சேலத்தின் காவல் தெய்வமாக விளங்கும் இவர், இரவில் சேலம் நகரின் காவல் பணிக்கு செல்வதாக நம்பப்படுகிறது. கன்னியாகுமரியிலிருந்து டில்லிக்கு செல்லும் லாரி டிரைவர்கள் விபத்தின்றி சென்று வர முனியப்பனை வேண்டிக் கொள்கின்றனர். இரவு நேரங்களில் லாரிகள் அதிகம் வரும் என்பதால் கோயில் 24 மணிநேரமும் திறந்திருக்கிறது.

அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில், பெருந்துறை

அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில், பெருந்துறை, ஈரோடு மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கோட்டை முனீஸ்வரர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் பெருந்துறை
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

மைசூர் மகாராஜாவின் அரசாங்கப் பிரதிநிதி ஒருவன், கோயம்புத்தூர் பகுதியில் கோட்டை கட்டி ஆட்சி செய்து வந்தான். எதிரிகள் தேச எல்லைக்குள் வராமலும், அப்படி யாரேனும் வந்து போரிட்டாலும் இவனுக்கே வெற்றி கிடைக்குமாறும் காத்தருளினார் முனீஸ்வர சுவாமி. இதனால் கோட்டை முனீஸ்வரர் என்ற திருநாமம் உண்டானது என்கின்றனர் பக்தர்கள்.

மாவிளக்கேற்றி அம்மனை வழிபட்டால், குடும்பமும் அந்தக் குடும்பத்தின் நிலமும் செழிக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், கரும்பு படைத்து முனீஸ்வரரை வணங்கினால், எதிரிகள் தொல்லை விலகும். புதிதாக வாகனம் வாங்குபவர்கள் கோட்டை முனீஸ்வரருக்கு முன் வண்டியை நிறுத்தி தீபாராதனை காட்டி, தேங்காய் உடைத்து வழிபட்ட பின்பே ஓட்டிச் செல்வார்கள். இதனால் கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்கலாம் என்பது ஐதீகம்.