அருள்மிகு முனியப்பன் திருக்கோயில், வெண்ணங்கொடி

அருள்மிகு முனியப்பன் திருக்கோயில், வெண்ணங்கொடி, சேலம் மாவட்டம்.

+91 98650 75344 (மாற்றங்களுக்குட்பட்டது)

24 மணிநேரமும் திறந்திருக்கும்.

மூலவர் முனியப்பன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வெண்ணங்கொடி
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

அந்தகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டினர். அவள் அவர்களைக் காப்பதற்காக காத்தாயம்மன் என்ற பெயரில் தோன்றினாள். அவள் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி. சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கினாள். அவர்கள் அந்தகாசுரனை அடக்கினர். பின்னர் முனிகள் அனைவரும் ஒரே வடிவாகி கலியுகத்தில் மக்களைக் காப்பதற்காக பூமிக்கு வந்தனர். இவர்களது அம்சமாக விளங்குபவர் தான் இந்த முனியப்பன். இவர் கனல் கக்கும் வீரக் கண்களும், அருள் ஒளிரும் மேனியழகும், அஞ்சேல் என அபயம் காட்டும் அருளழகும் பொங்க விளங்குகிறார். நீண்டதூர பயணம் புறப்படுபவர்கள் தங்கள் வாகனங்களுடன் இங்கு வந்து முனியப்பனை வணங்கிய பிறகு பயணம் செல்கின்றனர். தங்களுடன் பாதுகாப்பாக அந்த முனியப்பனே வருவதாக நம்புகின்றனர். 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் இது. சேலத்தின் காவல் தெய்வமாக விளங்கும் இவர், இரவில் சேலம் நகரின் காவல் பணிக்கு செல்வதாக நம்பப்படுகிறது. கன்னியாகுமரியிலிருந்து டில்லிக்கு செல்லும் லாரி டிரைவர்கள் விபத்தின்றி சென்று வர முனியப்பனை வேண்டிக் கொள்கின்றனர். இரவு நேரங்களில் லாரிகள் அதிகம் வரும் என்பதால் கோயில் 24 மணிநேரமும் திறந்திருக்கிறது.

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இயற்கையாகவே பயஉணர்வு உள்ளவர்கள் முனியப்பனுக்கு பொங்கல் வைப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். வேல்விலங்கு என்னும் சிறிய இரும்பு கம்பி இங்கு இருக்கிறது. இதைக் கொண்டு சுவாமிக்கு பூஜை செய்தால் தீய சக்திகள் விலகி பயஉணர்வு நீங்குவதாக நம்பிக்கை. இந்த வழிபாட்டுக்கு கட்டுவர்த்தனம் என்று பெயர். திருஷ்டி கழிய எலுமிச்சைபழத்தில் குங்குமம் தடவி கழிக்கப்படுகிறது.

மூலவர் முனியப்பன் வெண்ணங்கொடி என்ற ஒருவகை மரக்கொடி படர்ந்த பகுதியில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டுள்ளார். வலது கையில் வேலும், இடது கையில் வாளும் வைத்துள்ளார்.

திருவிழா:

பொங்கல் முடிந்ததும் ஜாகீர் அம்மாபாளையம் மாரியம்மன் கோயிலிலிருந்து எல்லைகாவல் தெய்வமான முனியப்பன் கோயிலுக்கு பக்தர்கள் அலகுகுத்தியும், அக்னிசட்டி ஏந்தியும்வருகின்றனர். ஞாயிறுதோறும் பொங்கல் வைக்கப்படுகிறது.

வேண்டுகோள்:

குழந்தை வரம், திருமணத்தடை நீங்குவதற்காக இங்குள்ள முனியப்பனிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

குழந்தை பாக்கியம் கிடைத்தவுடன் தொட்டில் போடுவதுடன், பொங்கல் வைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *