அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், கும்பகோணம்

அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், மகாமகம் குளம் வடகரை, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

மூலவர் அகோர வீரபத்திரர்
அம்மன் பத்திரகாளி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் மகாமகம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் குடந்தை
ஊர் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய ஒன்பது நதிகளில், பக்தர்கள் மூழ்கிக் கழித்த பாவங்கள் அதிகமாக சேரவே, அவை வருத்தப்பட்டன. கயிலாயம் சென்று சிவபெருமானிடம் தங்களது பாவச்சுமையைக் குறைக்குமாறு முறையிட்டன. இதை ஏற்ற சிவன், மகாமகத்தன்று மகாமக தீர்த்தத்தில் நீராடி, பாவங்களைப் போக்கிக் கொள்ளுமாறு கூறினார். அதன்படி நவநதிகளும் இத்தலம் வந்தன. சிவன், அவர்களுக்கு காவலராக, வீரபத்திரரை அனுப்பி வைத்தார். அவரே குளக்கரையில் வீற்றிருக்கிறார்.

இராஜகோபுரத்துடன் அமைந்த இக்கோயிலில், சுவாமி கோரைப்பற்களுடன் உள்ளார். கைகளில் வில், அம்பு, கத்தி, தண்டம் உள்ளன. அருகில் தட்சன் வணங்கியபடி இருக்கிறான். தலைக்கு மேல் ஜலதாரை (நீர் பாத்திரம்) இருக்கிறது. பத்திரகாளி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இத்தல வீரபத்திரருக்கு கங்கை வீரன், கங்கை வீரேஸ்வரர்என்ற பெயர்களும் உண்டு. நவநதிகளில் பிரதானமனாது கங்கை. கங்கையின் தலைமையில், இங்கு வந்து பாவம் போக்கிக்கொண்ட நதிகளுக்கு, காவலராக இருந்தவர் என்பதால் இப்பெயர். சுவாமி சன்னதி எதிரில் உள்ள நந்திக்கு பிரதோஷ பூஜை சிறப்பாக நடக்கிறது.

அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், வீராவாடி

அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், வீராவாடி, ருத்ரகங்கை, பூந்தோட்டம் போஸ்ட், திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 – 239 105 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 9- 11 மணி. பிற நேரங்களில் அர்ச்சகருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து சுவாமியை தரிசிக்கலாம்.

மூலவர் அகோர வீரபத்திர்
அம்மன் பத்ரகாளி
தீர்த்தம் அரசலாறு
ஆகமம் சிவாகமம்
புராணப் பெயர் வீராவடி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் வீராவாடி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

அம்பன், அம்பாசுரன் என்னும் இரு அசுர சகோதரர்களின் தொந்தரவிற்கு ஆளான தேவர்கள், தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன் அசுரர்களை அழிக்க, பார்வதி, மகாவிஷ்ணு இருவரையும் அனுப்பினார். மகாவிஷ்ணு வயோதிகர் வடிவம் எடுத்தும், பார்வதி அவரது மகள் போலவும் அசுரர்களின் இருப்பிடம் வந்தனர். அம்பன் பார்வதியின் அழகில் மயங்கி, அவளை மணந்து கொள்ள விரும்பி, முதியவரிடம் பெண் கேட்டான். அம்பாசுரனும் அவளை மணக்க விரும்பினான். இதைப் பயன்படுத்திக் கொண்ட மகாவிஷ்ணு, “உங்களில் யார் சக்தி மிக்கவரோ அவரே என் பெண்ணை மணந்து கொள்ளட்டும்என்றார். இதனால் சகோதரர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அம்பாசுரனை அம்பன் கொன்று விட்டான். அப்போது பார்வதி காளியாக உருவெடுத்து அம்பனையும் வதம் செய்தாள். இதனால் அவளுக்கு பிரம்மகத்தி தோஷம் (கொலை பாவம்) ஏற்பட்டது. இதனால் சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி, பிரம்மகத்தியை விரட்டியடித்தார். அவர் அகோர வீரபத்திரர்என்று பெயர் பெற்றார். இந்த நிகழ்வின் அடிப்படையில், இத்தலத்தில் வீரபத்திரருக்கு கோயில் எழுப்பப்பட்டது. சிவபெருமானும் மகாகாளர் என்ற பெயரில் இங்கு தங்கியுள்ளார்.