Category Archives: சிவ ஆலயங்கள்

இராஜேந்திர சோழீஸ்வரர் (பாலசுப்ரமணியர்) திருக்கோயில், பெரியகுளம்

அருள்மிகு இராஜேந்திர சோழீஸ்வரர் (பாலசுப்ரமணியர்) திருக்கோயில், பெரியகுளம், தேனி மாவட்டம்.

+91-94885 53077

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ராஜேந்திர சோழீஸ்வரர்
அம்மன் அறம் வளர்த்த நாயகி
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் பெரியகுளம்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

தேனி மாவட்டத்திலேயே பெரிய கோயில் இது. இங்கு மூலவர் சிவனாக இருந்தாலும் முருகன்தான் பிரசித்தி. எனவே இக்கோயிலை பாலசுப்பிரமணியர் கோயில் என்றால் தான் தெரியும்.

பெரியகுளம் உள்ளிட்ட பகுதியை கொண்ட நாட்டை இராஜேந்திரசோழன் ஆட்சி செய்து வந்த காலத்தில், ஓர் நாள் வராக நதிக்கரையில் உள்ள அகமலைக்கு வேட்டைக்குச் சென்றான். அப்போது, அங்கு ஒரு பன்றி தனது குட்டிகளுக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தது. மன்னன் அம்பினால் தாய்ப்பன்றியை வீழ்த்தினான். தாயின் நிலைகண்டு கதறிய குட்டிகள் முன்பு தோன்றிய முருகக்கடவுள், அவற்றிற்கு பால் புகட்டி பசியைப் போக்கி அருளினார். தாயைக் கொன்று குட்டிகளைப் பசியால் துடிக்கவைத்த பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கும் அருளிய முருகனின் பெருமையை உணர்த்தவும் ராஜேந்திரசோழன் அவருக்காக இக்கோயிலைக் கட்டினான். இக்கோயில் காசியில் ஓடும் புண்ணிய கங்கைக்குச் சமமாக கருதப்படும் வராகநதியின் கரையில் அமைந்துள்ளது. வராக நதியின் இருகரையிலும் நேரெதிராக ஆண் மற்றும் பெண் மருத மரங்கள் அமைந்திருக்கின்றன. இந்நதியை பிரம்ம தீர்த்தம் என்றும் கூறுவர்.

இராஜராஜேஸ்வரர் திருக்கோயில், தளிப்பரம்பா

அருள்மிகு இராஜராஜேஸ்வரர் திருக்கோயில், தளிப்பரம்பா, கன்னூர் மாவட்டம், கேரளா மாநிலம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை; மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் இராஜராஜேஸ்வரர்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் தளிப்பரம்பா
மாவட்டம் கன்னூர்
மாநிலம் கேரளா

சிவனுக்குரிய அனைத்து பெயர்களிலும் உயர்ந்ததது இராஜராஜேஸ்வரர். கேரளாவின் 108 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள சிவலிங்கம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மகரிஷி மாந்தாடா என்பவர் சிவனை குறித்து தவம் செய்து சிவனிடமிருந்து ஒரு சிவலிங்கத்தைப் பெற்றார். மயானம் இல்லாத இடத்தில் பிரதிஷ்டை செய்யும்படி சிவன் உபதேசிக்கவே, எல்லா இடங்களிலும் தேடி, கடைசியாகத் தளிபரம்பா என்ற இந்த புனித தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். மகரிஷியின் மறைவுக்கு பின் அந்த சிவலிங்கம் பூமியில் மறைந்துவிட்டது. மகரிஷியின் மகன் முசுகுந்தன் என்பவன், தன் தந்தையை போன்று சிவனை குறித்து தவம் செய்து சிவனது அருளால் மற்றொரு சிவலிங்கம் கிடைக்கப்பெற்று, அதனை வழிபட்டு வந்தான். அவனது காலத்திற்கு பிறகு, அந்த இலிங்கமும் பூமியில் மறைந்துவிட்டது. சில நூற்றாண்டுகளுக்கு பிறகு, சதசோமன் என்னும் அரசன் அகத்திய முனிவர் உபதேசப்படி சிவனைக்குறித்து தவம் செய்தான். அவனுடைய பக்திக்கு இரங்கி, சிவன் தந்த சிவலிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆலயமும் கட்டப்பட்டது. இந்த கோயிலில் சிறிய சட்டியில் நெய் ஊற்றி தருகின்றனர். பக்தர்கள் அதனை கருவறைப் படிக்கட்டில் வைத்து வழிபடுகின்றனர். சமோரிய அரசர் ஒருவர் இங்குள்ள சிவனை வழிபட்டு அப்படியே மூலவருடன் ஒன்றிவிட்டார். எனவே, அவரது வம்சாவளியினர் எவர் மரணமடைந்தாலும், முதலில் இந்த மரணச் செய்தியை இராஜராஜேஸ்வரர் கோயிலுக்கு அறிவிக்கும் பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. மூலவரான சிவலிங்கம் மூன்றடி உயரம் உள்ளது. மூன்று பெரிய கண்கள் இருக்கின்றன. தங்க கவசம் சார்த்தப்பட்டுள்ளது.