Category Archives: சிவ ஆலயங்கள்

தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், பேளூர்

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், பேளூர், சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தான்தோன்றீஸ்வரர்
அம்மன் அறம்வளர்ர்த்தஅம்மை
தல விருட்சம் மா, பலா, இலுப்பை மூன்றும் ஒரேமரம்
தீர்த்தம் வசிஷ்ட நதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வேள்வியூர்
ஊர் பேளூர்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

அர்ச்சுனன் தமிழகத்தில் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு, இங்குள்ள தீர்த்த மலைக்கு வந்துள்ளான். சிவபெருமான் மீது பக்தி கொண்டு சிவபூஜை செய்தான். பின்னர், திருமாலும் சிவபெருமானை நினைத்து,”உனது பாணத்தை இப்பகுதியில் செலுத்துவாயாகஎன்றார். சிவனை நினைத்து அர்ச்சுனனும் பிறைவடிவமானதொரு பாணத்தை மலையடிவாரத்தில் செலுத்த, சிவன் மகிழ்ச்சி அடைந்து தன் கட்டுப்பாட்டில் உள்ள கங்கை நதியின் பத்தில் ஒரு பகுதி அந்த அம்பு பாய்ந்த இடத்திலிருந்து பெருகுமாறு செய்தார். சிவன் தனது சடைக்கற்றையிலிருந்து கங்கையை வெளிப்படச்செய்தார். அந்த நீர் வெண்மை பிரவாகமாக தோன்றியது. இந்நதியே வெள்ளாறு எனப் பெயர் பெற்றது. இத்தலத்துக்கு பெருமை சேர்க்கும் வசிஷ்ட மாமுனி, சிவனருள் பெற்று இங்கு தங்கி வேள்வி செய்தார் என்று வரலாறு கூறுகிறது.

மா, பலா, இலுப்பை மரங்கள் மூன்றும் ஒரே மரமாக இருப்பது இத்தலத்தின் அதிசயம். தான்தோன்றீசுவரர் வழிபாட்டிற்காக அவ்வாலயத்தில் பலாமரம் ஒன்றை வசிட்டர் உண்டாக்கினார். இம்மரத்திற்காக கோயில் கட்டப்படும் காலத்திலேயே மூடுகற்களில் வளைவுகள் வெட்டி ஒதுக்கப்பட்டிருப்பதை பார்க்கையில் இம்மரம் ஆலயத்திற்கு முற்பட்டதெனத் தெரியவரும். வசிஷ்ட மாமுனி யாகம் செய்ய வேண்டி பரமசிவனை வேண்ட, சிவன் விரும்பிய வண்ணம் இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் தங்கினார். வசிஷ்டர் செய்த யாக பூமியில் உள்ள திருமண்ணே இன்றும் கோயிலில் திருநீறாக வழங்கப்படுகிறது. வசிஷ்ட முனிவரது யாகசாலையில் உண்டாக்கிய விபூதியானது மேனியில் பட்டால் செல்வம் பெருகும்.

தாண்டேஸ்வரர் திருக்கோயில், கொழுமம்

அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4252 – 278 827

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தாண்டேஸ்வரர், சோழீஸ்வரர்
உற்சவர் தாண்டேஸ்வரர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் அமராவதி
ஆகமம் காமீகம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சங்கரராம நல்லூர்
ஊர் கொழுமம்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த வீரசோழீஸ்வர மன்னர், சூரியதோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், நாடு, வீடு, பேறு என அனைத்தும் செழிப்பின்றி இருந்தது. அச்சம்கொண்ட மன்னர் தனது குருவிடம் ஆலோசனை கேட்டபோது, அவர் சிவனுக்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்யும்படி கூறினார். அதன்படி, வில்வ வனமாக இருந்த பகுதியை சீரமைத்து கோயில் எழுப்பினார். மன்னர், இங்கு நடராஜரை உற்சவராக வைக்க விரும்பி, அவரை சிலையாக வடித்த போது இரண்டு முறை சரியாக அமையவில்லை. கோபமடைந்த அவர், அடுத்த சிலை சரியாக அமையவில்லை எனில் சிற்பிக்கு மரணதண்டனை கொடுக்கும்படி உத்தரவிட்டார். வருந்திய சிற்பி இறைவனிடம், “மன்னர் கையால் உயிர் போவதை விட நீயே எனது உயிரை எடுத்துக் கொள்என முறையிட்டார். மனமிரங்கிய நடராஜர், அவருக்கு அருட்காட்சி தந்து, அழகிய அம்சத்துடன் தானாகவே சிலைவடிவில் அமைந்தார். தாண்டேஸ்வரர் எனும் திருப்பெயரில் அழைக்கப்படும் இவரது பெயரிலேயே கோயில் அழைக்கப்படுகிறது.