தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், பேளூர்

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், பேளூர், சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தான்தோன்றீஸ்வரர்
அம்மன் அறம்வளர்ர்த்தஅம்மை
தல விருட்சம் மா, பலா, இலுப்பை மூன்றும் ஒரேமரம்
தீர்த்தம் வசிஷ்ட நதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வேள்வியூர்
ஊர் பேளூர்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

அர்ச்சுனன் தமிழகத்தில் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு, இங்குள்ள தீர்த்த மலைக்கு வந்துள்ளான். சிவபெருமான் மீது பக்தி கொண்டு சிவபூஜை செய்தான். பின்னர், திருமாலும் சிவபெருமானை நினைத்து,”உனது பாணத்தை இப்பகுதியில் செலுத்துவாயாகஎன்றார். சிவனை நினைத்து அர்ச்சுனனும் பிறைவடிவமானதொரு பாணத்தை மலையடிவாரத்தில் செலுத்த, சிவன் மகிழ்ச்சி அடைந்து தன் கட்டுப்பாட்டில் உள்ள கங்கை நதியின் பத்தில் ஒரு பகுதி அந்த அம்பு பாய்ந்த இடத்திலிருந்து பெருகுமாறு செய்தார். சிவன் தனது சடைக்கற்றையிலிருந்து கங்கையை வெளிப்படச்செய்தார். அந்த நீர் வெண்மை பிரவாகமாக தோன்றியது. இந்நதியே வெள்ளாறு எனப் பெயர் பெற்றது. இத்தலத்துக்கு பெருமை சேர்க்கும் வசிஷ்ட மாமுனி, சிவனருள் பெற்று இங்கு தங்கி வேள்வி செய்தார் என்று வரலாறு கூறுகிறது.

மா, பலா, இலுப்பை மரங்கள் மூன்றும் ஒரே மரமாக இருப்பது இத்தலத்தின் அதிசயம். தான்தோன்றீசுவரர் வழிபாட்டிற்காக அவ்வாலயத்தில் பலாமரம் ஒன்றை வசிட்டர் உண்டாக்கினார். இம்மரத்திற்காக கோயில் கட்டப்படும் காலத்திலேயே மூடுகற்களில் வளைவுகள் வெட்டி ஒதுக்கப்பட்டிருப்பதை பார்க்கையில் இம்மரம் ஆலயத்திற்கு முற்பட்டதெனத் தெரியவரும். வசிஷ்ட மாமுனி யாகம் செய்ய வேண்டி பரமசிவனை வேண்ட, சிவன் விரும்பிய வண்ணம் இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் தங்கினார். வசிஷ்டர் செய்த யாக பூமியில் உள்ள திருமண்ணே இன்றும் கோயிலில் திருநீறாக வழங்கப்படுகிறது. வசிஷ்ட முனிவரது யாகசாலையில் உண்டாக்கிய விபூதியானது மேனியில் பட்டால் செல்வம் பெருகும்.

சுவாமி உளி படாத இலிங்கம்(சுயம்பு).

சித்திரை 3ம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை சுவாமி மீது சூரியன் ஒளி படுவது சிறப்பு. ஒரே கல்லிலான குதிரை வாகனம் இத்தலத்தில் உள்ளது. 3 சூலாயுதம் போல் சுவாமி, அம்பாள் இருவரும் சேர்ந்து இருப்பது சிறப்பு. யாழி வாய்க்குள் உருண்டைக்கல் உருள்வது போல் உள்ள சிற்பம் இங்கு உள்ளது, வன்னி மரத்தடியில் சனீஸ்வர பகவான் உள்ளார்.

திருவிழா:

ஆடி பதினெட்டு, கார்த்திகை, அமாவாசை, பிரதோஷம்.

கோரிக்கைகள்:

இத்தலத்தில் உள்ள கல்யாண விநாயகருக்கு மாலை, தேங்காய், பழம், கடலை, சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்து மாலையைக் கழுத்தில் போட்டால் கல்யாண பாக்கியம் கைகூடும். மனமுருக வேண்டிக்கொண்டால் கல்யாணபாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை கைகூடுகின்றன. தவிர உத்தியோக உயர்வு, விவசாயச் செழிப்பு , கல்வி, செல்வம், ஞானம் ஆகியவை இத்தலத்து இறைவனை வணங்கினால் கிடைக்கும் என்று பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமி அம்பாள் ஆகியோருக்கு புத்தாடை சேலை படைக்கின்றனர். சுவாமிக்கு பால், எண்ணெய், இளநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். விரதம் இருத்தல், தானதருமம் செய்தல் ஆகியவை இத்தலத்தில் செய்தால் புண்ணியம் கிடைக்கும். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பிரசாதம் கொடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *