காசி விஸ்வநாதர் திருக்கோயில், காசி(வாரணாசி)

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் ,காசி, வாரணாசி, உத்தரப்பிரதேசம் மாநிலம்.

காலை 2.30 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காசி விஸ்வநாதர்
அம்மன் விசாலாட்சி
தீர்த்தம் கங்கை நதி (64 தீர்த்தக்கட்டங்கள்)
பழமை 3000 வருடங்களுக்கு முன்
ஊர் காசி
மாவட்டம் வாரணாசி
மாநிலம் உத்திரப்பிரதேசம்

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி. இத்தலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. மிகவும் பழமை வாய்ந்த நகரம். வாரணா, ஹசி என்ற நதிகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. இவ்வூரை பனாரஸ் என்றும் சொல்வார்கள். கல்வியை வழங்கும் கிரகமான புதன், காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக கிரகபதவி பெற்றார். கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும். காசி என்றால் ஒளிநகரம் என்பது பொருள்.

காசி விஸ்வநாதர் திருக்கோயில், இரும்பாடி

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், இரும்பாடி, சோழவந்தான், மதுரை.

காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 6 மணி முதல் 7 மணி வரை திறந்திருக்கும்.விசேஷ நாட்களில் அதிகாலையிலும் நடை திறந்திருக்கும்.

மூலவர் காசி விஸ்வநாதர்
அம்மன் விசாலாட்சி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் கிணற்று தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் இரும்பாடி, சோழவந்தான்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

பாண்டிய மன்னர்கள் மதுரையை ஆண்டு வந்த போது, தற்போது இரும்பாடி என்றழைக்கப்படும் இவ்வூரில் அவர்களின் படை பலத்திற்கு தேவையான ஆயுதங்களைத் தயாரிக்கும் பணியினைச் செய்து வந்தனர். அப்போது, கவனக் குறைவு காரணமாக சில வீரர்கள் தம் உடல் உறுப்புக்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வீரர்கள் போரில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ஆயுதங்கள் தயாரிப்பின் போது வீரர்களின் உடல் உறுப்பு இழப்புகளைத் தவிர்க்கவும், அவர்கள் போர் புரியும் போதும் வேட்டையாடும் போதும் வெற்றி மட்டுமே கிட்டவேண்டும் என்பதற்காகவும் சிவனிடம் முறையிடுவதற்காக, இத்தலத்தில் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர்.