காசி விஸ்வநாதர் திருக்கோயில், காசி(வாரணாசி)

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் ,காசி, வாரணாசி, உத்தரப்பிரதேசம் மாநிலம்.

காலை 2.30 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காசி விஸ்வநாதர்
அம்மன் விசாலாட்சி
தீர்த்தம் கங்கை நதி (64 தீர்த்தக்கட்டங்கள்)
பழமை 3000 வருடங்களுக்கு முன்
ஊர் காசி
மாவட்டம் வாரணாசி
மாநிலம் உத்திரப்பிரதேசம்

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி. இத்தலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. மிகவும் பழமை வாய்ந்த நகரம். வாரணா, ஹசி என்ற நதிகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. இவ்வூரை பனாரஸ் என்றும் சொல்வார்கள். கல்வியை வழங்கும் கிரகமான புதன், காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக கிரகபதவி பெற்றார். கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும். காசி என்றால் ஒளிநகரம் என்பது பொருள்.

காசியில் இறந்து போவது சொர்க்கத்தைத் தரும் என்று சொல்வார்கள். இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம். ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.

இங்கு விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளி உள்ளார். எனவே, இவ்வூரை ஆனந்த பவனம் என்கின்றனர். வெள்ளித்தகடு பதித்த தொட்டியில், தங்க ஆவுடையார் மீது இவர் காட்சியளிக்கிறார். சிவபெருமானின் அடியையும் முடியையும் காண பிரம்மாவும் திருமாலும் முயன்றபோது, அவர்களை எரித்து அழித்த இடம் இவ்வூரே என்று கூறுவதுண்டு. எனவே, இவ்வூருக்கு மகாமயானம் என பெயர் வந்தது. விசாலாட்சி அம்மைக்குத் தனி சன்னதி உள்ளது. கங்கை நதியின் மேற்குக்கரையில் காசி அமைந்துள்ளது. காசியிலிருந்து வடக்காக 30கி.மீ. தொலைவு வரை கங்கைநதி ஓடுகிறது. இங்கே வடமுகமாக கங்கை ஓடுவதால் உத்தர வாகினி என்று அழைக்கின்றனர்.

தீர்த்தக் கட்டங்கள்: கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இத்தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமல்ல. எனவே, அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடி மகிழ்வது மிகவும் புனிதமானதாகும். இதற்கு பஞ்சதீர்த்த யாத்திரை என்று பெயராகும். அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதியில் அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது.

இக்கட்டத்தை காசியின் நுழைவுவாயில் என்று சொல்வர். இக்கரையில் அமைந்துள்ள சிவலிங்கம் அஸ்சங்கமேஸ்வரர் எனப்படுகிறார். முதலில் அஸ்சங்கமத்தில் நீராடி சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும். துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த கட்டத்தில் இறங்கி கங்கையில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

இதையடுத்து தசாஸ்வமேத கட்டத்தில் நீராட வேண்டும். இங்கு பிரம்மன் பத்து அசுவமேத யாகங்களை செய்ததால் தசாஸ்வமேத கட்டம் என பெயர் பெற்றது. இந்த தீர்த்தக்கரையில் சூலடங்கேஸ்வரர் என்ற சிவலிங்கம் உள்ளது. இதையடுத்து வரணசங்கம கட்டத்தில் நீராடச் செல்ல வேண்டும். இங்கு வருண நதி கங்கையில் கலக்கிறது. இந்த கரையில் உள்ள ஆதிகேஸ்வரரை வணங்கிவிட்டு, யமுனை, சரஸ்வதி, சிரணா, தூதபாய் ஆகிய நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி விட்டு கரையிலுள்ள பிந்துமாதவர் மற்றும் கங்கேஸ்வரரை வணங்க வேண்டும்.

பஞ்ச தீர்த்தக்கட்டங்களில் ஐந்தாவதாக அமைந்துள்ள மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி பித்ருக்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த கரையிலுள்ள மணிகர்ணிகேஸ்வரரையும், அம்பாளையும் வழிபட வேண்டும்.

இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோயில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தூர் ராணி அகல்யாபாய் இக்கோயிலைக் கட்டினார். இந்தக் கோயில் மிகவும் சிறிய கோயில் தான். குறுகலான பாதையில் சென்று கோயிலை அடைய வேண்டும். பூஜைப் பொருட்களைக் கொண்டு பக்தர்களே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம். அர்ச்சகரிடம் கொடுத்து பூஜிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. விஸ்வநாதர் கோயிலின் அருகிலேயே அன்னபூரணி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாள்.

இந்தியாவில் 12ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது.

திருவிழா:

மகா சிவராத்திரி, தை அமாவாசை, ஆடி அமாவாசை, தீபாவளி(அன்னக்கொடி உற்ஸவம்)

வேண்டுகோள்:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *