அருள்மிகு கன்யாகுமரி ஜய அனுமன் திருக்கோயில், தாம்பரம்

அருள்மிகு கன்யாகுமரி ஜய அனுமன் திருக்கோயில், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் வழியில் மகாரண்யம் கிராமம், மதுரபுரி ஆசிரமம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91 44-2489 5875, 3710 4183 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

இராமாயண காவியத்திலே நடுநாயகனாக இருந்து பல அசுர சாதனைகளைப் புரிந்தவர் ஸ்ரீஆஞ்சநேயர். ஸ்ரீஆஞ்சநேயர் ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால், கொஞ்சமும் மன சஞ்சலமில்லாமல் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதைச் சிறப்பாகச் செய்து போய்க்கொண்டே இருப்பார். சாதனை புரிவதில் இவருக்கு நிகரானவர் இவரே! சமுத்திரம் எவ்வளவு பெரியது. அதைத் தாண்டி இருக்கிறார். சஞ்சீவி மலையை அடியோடு பெயர்த்தெடுத்திருக்கிறார். அந்த மலையை ஆகாயத்திலே தூக்கிக்கொண்டு பறந்து வந்திருக்கிறார். இலங்காபுரியையே எரித்துச் சாம்பலாக்கினார். ஸ்ரீராமபிரானையும் அன்னை சீதாதேவியையும் சேர்த்து வைத்திருக்கிறார். ஸ்ரீராம சேவை என்றால், ஸ்ரீஆஞ்சநேயரைப் போல பயபக்தியுடன் அந்த பகவானுக்கு வேறு எவரும் அப்படிச் சேவை செய்திருக்க முடியாது. இவர் புத்திமான் மட்டுமல்ல. சிறந்த பக்திமான். சாந்த குணம் இருந்தது. கோபம் கிடையாது. இந்திரியங்களை அடக்கும் சக்தி இருந்தது. அதனால் எதனிடமும் மோகமில்லை. கூர்மையான அறிவு இருந்தது. அது நல்ல காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மனதைக் கட்டுப்படுத்தி ஒரு வைராக்கியமுடன் எந்த நேரமும் ஸ்ரீராம நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தவர்.

அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில், தாராபுரம்

அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில், தாராபுரம், ஈரோடு மாவட்டம்.

+91 4258 220 749, 98423 70761

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காடு ஹனுமந்தராய சுவாமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தாராபுரம்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

ஆஞ்சநேய பக்தரான ஸ்ரீவியாஸராயர் சுவாமி 1460லிருந்து 1530ம் ஆண்டு வரை வாழ்ந்தார். இவர் நாடு முழுவதும் 732 ஆஞ்சநேயர் கோயில்களைக் கட்டினார். அதில் 89வதாகக் கட்டப்பட்டது தாராபுரம் கோயில். அந்தக் கோயில் கட்டிய இடம் காட்டுப்பகுதியாக இருந்ததால் சுவாமிக்கு காடு ஹனுமந்தராய சுவாமி என்ற பெயர் ஏற்பட்டது. 1810ல், கோவை கலெக்டராக இருந்தவர் ஆங்கிலேயரான டீலன்துரை. இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. அப்போது சிலர் நோய் நீங்க காடு ஹனுமந்தராய சுவாமியை வழிபடுமாறு கூறினர். கலெக்டரும் அவ்வாறே செய்ய நோய் நிவர்த்தியானது. இதற்கு நன்றிக்கடனாக கோயிலில் கர்ப்பக்கிரகத்தை பெரிதாகக் கட்டினார். கோபுரம் கட்ட முயன்ற போது, பக்தர் ஒருவரின் கனவில் சுவாமி தோன்றி, கோபுரம் தேவையில்லை என்று கூறியதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.

மத்வாச்சாரியரின் நூல்களுக்கு விளக்கவுரை (டீகா) எழுதியவர் ஜெயதீர்த்த சுவாமிகள். இதனால் இவருக்கு டீகாசார்யா என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது. இவருடைய மூல பிருந்தாவனம் மைசூரு அருகிலுள்ள மல்கேடாவில் உள்ளது. இங்கிருந்து மிருத்திகை (புனிதமண்) கொண்டு வந்து, இந்தக் கோயிலிலுள்ள இலட்சுமி நரசிம்மன் சந்நிதியில் இவருக்கு பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்வ மத மடாதிபதிகளில் முக்கியமானவரான இராகவேந்திர சுவாமிகளின் மந்திராலயத்தில் இருந்து மிருத்திகை கொண்டு வரபட்டடு இராமர் சந்நிதியில் அவரது பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிருந்தாவனங்களில் அமர்ந்து வழிபடுவதன் மூலம் ஞானசக்தியும், கல்வியும் மேம்படும் என்பது நம்பிக்கை.