அருள்மிகு கன்யாகுமரி ஜய அனுமன் திருக்கோயில், தாம்பரம்
அருள்மிகு கன்யாகுமரி ஜய அனுமன் திருக்கோயில், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் வழியில் மகாரண்யம் கிராமம், மதுரபுரி ஆசிரமம், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91 44-2489 5875, 3710 4183 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
இராமாயண காவியத்திலே நடுநாயகனாக இருந்து பல அசுர சாதனைகளைப் புரிந்தவர் ஸ்ரீஆஞ்சநேயர். ஸ்ரீஆஞ்சநேயர் ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால், கொஞ்சமும் மன சஞ்சலமில்லாமல் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதைச் சிறப்பாகச் செய்து போய்க்கொண்டே இருப்பார். சாதனை புரிவதில் இவருக்கு நிகரானவர் இவரே! சமுத்திரம் எவ்வளவு பெரியது. அதைத் தாண்டி இருக்கிறார். சஞ்சீவி மலையை அடியோடு பெயர்த்தெடுத்திருக்கிறார். அந்த மலையை ஆகாயத்திலே தூக்கிக்கொண்டு பறந்து வந்திருக்கிறார். இலங்காபுரியையே எரித்துச் சாம்பலாக்கினார். ஸ்ரீராமபிரானையும் அன்னை சீதாதேவியையும் சேர்த்து வைத்திருக்கிறார். ஸ்ரீராம சேவை என்றால், ஸ்ரீஆஞ்சநேயரைப் போல பயபக்தியுடன் அந்த பகவானுக்கு வேறு எவரும் அப்படிச் சேவை செய்திருக்க முடியாது. இவர் புத்திமான் மட்டுமல்ல. சிறந்த பக்திமான். சாந்த குணம் இருந்தது. கோபம் கிடையாது. இந்திரியங்களை அடக்கும் சக்தி இருந்தது. அதனால் எதனிடமும் மோகமில்லை. கூர்மையான அறிவு இருந்தது. அது நல்ல காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மனதைக் கட்டுப்படுத்தி ஒரு வைராக்கியமுடன் எந்த நேரமும் ஸ்ரீராம நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தவர்.
2009 – ஆம் ஆண்டு மஹா சிவராத்திரி தினத்தன்றுதான் இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். பரந்த வெளியில் இருபத்துநான்கு படிகள் ஏறினால் அவர் பாதத்தை அடையலாம். அதற்குமேல் 24 அடி உயர ஸ்ரீ ஆஞ்சநேயர் கம்பீரமாக உள்ளார். வால்மீகியின் ஆதி காவியமான ஸ்ரீமத் இராமாயணம் 24 ஆயிரம் செய்யுட்களால் எழுதப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் இந்த ஜய அனுமன் 24 அடி உயரம் உள்ளது. காயத்ரி மந்திரம் 24 அக்ஷரங்களைக் கொண்டது. அதைக் குறிக்கும் வகையில் 24 படிகளைக் கொண்டுள்ளது. இந்த கன்யாகுமரி ஸ்ரீ ஜய அனுமனைப் பிரதிஷ்டை செய்தபோது, அதன் அடியில் ஒரு விசேஷமான இயந்திரத்தை வைத்துள்ளார்கள். நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள், தொல்லைகள், ஏழரைநாட்டுச் சனி, அஷ்டமச் சனியால் ஏற்படும் கஷ்டங்கள் விலகவும், கால சர்ப்ப தோஷம் விலகவும் சங்கல்பம் செய்து இந்த இயந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்கள். குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள், பில்லி சூன்யங்களால் பாதிக்கப்பட்டு படும் அவதிகள், தாங்கமுடியாத குடும்பத் தொல்லைகள் இருந்தால், இந்த ஜய அனுமாரை வாரத்தில் ஒரு நாள் தொடர்ந்து ஏழு முறை அதே கிழமையில் வந்து வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டுச் சென்றால், கன்யாகுமரி ஸ்ரீ ஜய அனுமன் நமக்கு அருள்பாலித்து துன்பத்திலிருந்து நம்மை விடுவிப்பதுடன், நம் தேவைகளையும் பூர்த்தி செய்கிறார். நமது பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன. திருமணமாகதவர்களுக்கு திருமணத் தடையை நீக்கி திருமணம் ஆக அருள்புரிகிறார். வேலை இல்லாதவர்கள் வேண்டிக்கொண்டால், வேலை கிடைத்து நல்ல பதவி கிடைக்கிறது. பதவியிலும் உயர்வு கிடைக்கிறது. குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.
இயற்கை சூழல் நிறைந்த மலை அடிவாரத்தில் மலைப்பட்டு அருகில் மகாரண்யம் கிராமத்தில் மதுரபுரி ஆசிரமத்தில் வானத்தையே தொடும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார். சுற்றிலும் சோலைகள் நிறைந்த குளிர்ச்சியான இடத்தில், அரசமர நிழலில் இருந்து நம்மை காத்தருள்கிறார் இந்த ஜய அனுமன்.
திருவிழா:
ஏகாதசி, மஹா சிவராத்திரி, அனுமான் ஜயந்தி.
கோரிக்கைகள்:
நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள், சர்ப்ப தோஷம், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள அனுமனை வேண்டிக் கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் அனுமனுக்கு அபிஷேகம் செய்தும், வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply