அஞ்சலி வரத ஆஞ்சநேயர், மேட்டுப்பட்டி, சின்னாளபட்டி

அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர், மேட்டுப்பட்டி, சின்னாளபட்டி, திண்டுக்கல் மாவட்டம்.

+91 – 451-245 2477, 94432 26861

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அஞ்சலி வரத ஆஞ்சநேயர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மேட்டுப்பட்டி, சின்னாளபட்டி
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

இராமாயண காலத்தில் அனுமனின் பாதம் இத்தலத்தில் பதிந்ததாகவும், அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து செல்லும் போது அதிலிருந்து விழுந்த சிறுபகுதியே கோயிலின் எதிரில் உள்ள சிறுமலை என்றும் கூறுவதுண்டு. ஒரு முறை கனகராஜ் என்பவரின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, தான் இவ்விடத்தில் தியானக் கோலத்தில் வீற்றிருப்பதாகவும் எனவே இங்கு கோயில் ஒன்று அமைக்கும்படியும் கூறினார். அதன்பிறகே இந்த கோயில் கட்டப்பட்டது. அனுமனை வணங்குபவர்களை சனிபகவானும் அண்டமாட்டான்என்பது நம்பிக்கை. “ஓ ராமா! உன் நாமத்தையோ, இந்த அனுமன் நாமத்தையோ யார் கூறுகிறார்களோ, அவர்களிடம் நான் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன்என்று இராமனிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாகக் கூறுவர். இராமாயண கதாநாயகன் இராமனின் வலதுகரமான ஆஞ்சநேயர் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமனை சிவனின் அவதாரம் என கூறுவதுண்டு. வாயுபகவானுக்கும், அஞ்சனாதேவிக்கும் மகனாக பிறந்த அனுமனுக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்ற பெயர்களும் உண்டு. இராமநாமத்தை தவிர வேறு எதையும் அறியாத அவர் தன்னலமில்லாத வீரனாக திகழ்ந்தார். அவர் மிகச்சிறந்த இராம பக்தன். இராமனுக்குப் பணிவிடை செய்வதற்காகவே வாழ்ந்தவர். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தவர். எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன. பிறரால் செய்யமுடியாத செயல்களை இவர் இராமநாமத்தை உச்சரித்துக் கொண்டே செய்து முடித்தவர். சாதாரண செயல்களை செய்து விட்டு தங்களை தாங்களே தற்பெருமையாக புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் தன் அறிவைப் பற்றியோ, தனது தொண்டைப் பற்றியோ பிறரிடம் கூறியது கிடையாது. அத்துடன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாக ஒரு வார்த்தை கூட சொன்னதும் கிடையாது.

அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல்

அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம்.

+91-99767 90768 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். வியாழக்கிழமைகளில் காலை 11 மணி வரையும், இரவில் 9 மணி வரையும் திறந்திருக்கும்.

மூலவர் அபயவரத ஆஞ்சநேயர்
தல விருட்சம் பலா
தீர்த்தம் அனுமன் தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் திண்டுக்கல்
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியை ஆண்ட ஆஞ்சநேய பக்தரான சிற்றரசர், போருக்குச் செல்லும்போது, ஆஞ்சநேயரை வழிபட்டே செல்வார். அவருக்கு ஆஞ்சநேயர் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை எழுந்தது. ஆனால், எங்கு கோயில் கட்டுவதென அவருக்குத் தெரியவில்லை. மன்னரின் கனவில் தோன்றிய ஆஞ்சயநேர், அப்பகுதியில் இருந்த மலைக் கோட்டையை சுட்டிக்காட்டினார். மன்னர் ஆஞ்சநேயருக்கு சிலை வடித்து, கோட்டையில் பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்தார். இவர், “அபய வரத ஆஞ்சநேயர்எனப் பெயர் பெற்றார்.

திண்டுக்கல்லில் உள்ள மலைக்கோட்டையின் ஒரு பகுதியாக அமைந்த கோயில் இது. கோயிலுக்கு கீழே அனுமன் தீர்த்தம் உள்ளது.

பெருமாள், இராமாவதாரம் எடுத்தபோது, சிவனே ஆஞ்சநேயராக தோன்றி சேவை செய்ததாகச் சொல்வர். இதை உணர்த்தும்விதமாக இக்கோயிலில், ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம். பொதுவாக, ஆஞ்சநேயருக்கு பெருமாளுக்குரிய சனிக்கிழமையே உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆனால், இங்கு சிவ அம்சமாக வணங்கப்படுவதால், வியாழக்கிழமைகளில் வடை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். சிவ வடிவமான தட்சிணாமூர்த்திக்கு வியாழன் உகந்தது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.