Category Archives: சிவ ஆலயங்கள்

அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் (கருக்குடிநாதர்) திருக்கோயில், கருக்குடி

அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் (கருக்குடிநாதர்) திருக்கோயில், கருக்குடி, மருதாநல்லூர், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 99435 23852 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர்
அம்மன் அத்வைதநாயகி, கல்யாணி அம்பிகை, சர்வாலங்காரநாயகி
தீர்த்தம் எம தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மருதாநல்லூர், மருதாந்த நல்லூர்
ஊர் கருக்குடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர்

இராமாயண காலத்தில் இராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டு வரத் தாமதமானதால், இராமன் தன் அருகிலிருந்த மணலிலேயே இரண்டு கைகளாலும் இலிங்கம் பிடித்து வழிபட்டார் என்றும் அதுவே தற்போதைய பிருதிவி லிங்கமாகும். அனுமன் கொண்டு வந்த இலிங்கம் கோயிலின் இடப்புறம் உள்ள அனுமந்த லிங்கம் என்ற பெயரில் உள்ளது. இத்தலத்திற்கு மற்றொரு வரலாறும் உண்டு.

தனஞ்சயன் என்ற வணிகன் ஒருவன் தன் சிற்றன்னையை அறியாது புனர்ந்தமையால் தொழுநோய் ஏற்படுகிறது. மனம் வருந்திய அவன் இத்தல இறைவனை வேண்டி தொழுநோய் நீங்கப்பெற்றான்.

அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயில், சாக்கோட்டை

அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயில், சாக்கோட்டை (திருக்கலயநல்லூர்), கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435-2414 453, 98653 06840 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அமிர்தகடேஸ்வரர், அமிர்தகலசநாதர்
உற்சவர் அமிர்தகலசநாதர்
அம்மன் அமிர்தவல்லி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் நால்வேத தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கலயநல்லூர்
ஊர் சிவபுரம், சாக்கோட்டை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

காஞ்சிபுரம் அருகே சங்கமங்கையில் மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர் சாக்கியநாயனார். இவர் சிவனிடமும் அவரது அடியார்களிடமும் மிகவும் அன்பு கொண்டிருந்தார். பிறவிப்பெருங்கடலை கடக்க சிவநெறியே உயர்ந்தது என்பதை உணர்ந்தார். சாக்கியர் கோலத்தில் இருந்தாலும் எப்போதும் மனதில் சிவ சிந்தனையுடன், யாரும் அறியாமல் சிவபூஜையும் செய்து வந்தார். எப்போதும் சிவபூஜை முடித்த பின்பு தான் சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த இவர், ஒரு நாள் வெளியே சென்றார். வழியில் ஒரு இலிங்கம் வழிபாடு ஏதும் இன்றி இருப்பதைக்கண்டு மனம் வருந்தினார். இலிங்கத்தை நீராட்டி, மலர் போட்டு, பூஜை செய்ய ஆசைப்பட்டார். ஆனால் அந்த இடத்தில் எதுவும் இல்லை. இவரது நல்ல மனம் மட்டுமே இருந்தது. சிவனின் மீது கொண்ட அன்பால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து நமசிவாயமந்திரத்தை உச்சரித்து இலிங்கத்தின் மீது போட்டார். இவரது அன்பால் கட்டுப்பட்ட இறைவன், வீசிய கல்லை மலராக ஏற்றுக்கொண்டார். இதே போல் தினமும் இலிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபாடு செய்து அதன் பின் உணவருந்தி வந்தார். இவர் சாக்கியர் கோலத்தில் இருந்ததால், பார்ப்பவர்களுக்கு இவர் சிவன் மீது கோபத்தில் கல் எறிகிறார் என நினைத்தார்கள். ஆனால் சிவன் ஒருவருக்கு மட்டும்தான் அன்பால் செய்கிறார் என்பது புரியும். இந்நிலையில் ஒருநாள் சாக்கியநாயனார், சிவ சிந்தனையிலேயே மூழ்கியிருந்ததால், சிவபூஜை செய்யாமல் சாப்பிட அமர்ந்தார். திடீரென நினைவு வந்ததும், தான் எவ்வளவு பெரிய சிவத்துரோகம் செய்துவிட்டோம் என வருந்தி ஓடி சென்று, கல் எறிந்து சிவபூஜை செய்தார். சிவபக்தியுடன் இவர் எறிந்த கல் கயிலையில் பார்வதியுடன் அமர்ந்திருந்த சிவனின் பாதத்தில் பொன்மலராக விழுந்தது. மகிழ்ந்த இறைவன் பார்வதிதேவியுடன் இவருக்கு காட்சி கொடுத்து நாயன்மார்களில் ஒருவராக்கினார். சாக்கிய நாயனார் வழிபட்ட தலமாதலால் சாக்கோட்டை எனப்பட்டது.