அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் (கருக்குடிநாதர்) திருக்கோயில், கருக்குடி

அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் (கருக்குடிநாதர்) திருக்கோயில், கருக்குடி, மருதாநல்லூர், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 99435 23852 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர்
அம்மன் அத்வைதநாயகி, கல்யாணி அம்பிகை, சர்வாலங்காரநாயகி
தீர்த்தம் எம தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மருதாநல்லூர், மருதாந்த நல்லூர்
ஊர் கருக்குடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர்

இராமாயண காலத்தில் இராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டு வரத் தாமதமானதால், இராமன் தன் அருகிலிருந்த மணலிலேயே இரண்டு கைகளாலும் இலிங்கம் பிடித்து வழிபட்டார் என்றும் அதுவே தற்போதைய பிருதிவி லிங்கமாகும். அனுமன் கொண்டு வந்த இலிங்கம் கோயிலின் இடப்புறம் உள்ள அனுமந்த லிங்கம் என்ற பெயரில் உள்ளது. இத்தலத்திற்கு மற்றொரு வரலாறும் உண்டு.

தனஞ்சயன் என்ற வணிகன் ஒருவன் தன் சிற்றன்னையை அறியாது புனர்ந்தமையால் தொழுநோய் ஏற்படுகிறது. மனம் வருந்திய அவன் இத்தல இறைவனை வேண்டி தொழுநோய் நீங்கப்பெற்றான்.

சிவன், அம்மன் இருவரும் கிழக்கு பார்த்து திருமண கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். இவ்வூரின் அருகே ஏனாதிநாயனார் அவதரித்த ஏனநல்லூர் உள்ளது. வீணா தட்சிணாமூர்த்தி உள்ளார். பிரம்மா, சற்குணன் என்ற அரசன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். இதனால் இறைவன் சற்குணலிங்கேஸ்வரர்என அழைக்கப்படுகிறார்.

இத்தல விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கிய கோயில். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியது. மண்ணால் செய்யப்பட்டது. மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் தெரிகிறது. அரையடி உயர சிறிய ஆவுடையார். பீடம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், நவகிரகம், சூரியன், சந்திரன், இலிங்கோத்பவர், முருகன் உள்ளனர். அம்மன் சன்னதி எதிரே தனஞ்சய வணிகனின் வணங்கிய சிலை உள்ளது.

தேவாரப்பதிகம்:

ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர் கானிடை ஆடலான் பயில் கருக்குடிக் கோனுயர் கோயிலை வணங்கி வைகலும் வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.

திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 69வது தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை.

பிரார்த்தனை:

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்னதானம் செய்கின்றனர்.

வழிகாட்டி:

கும்பகோணம் மன்னார்குடி சாலையில் சாக்கோட்டைக்கு அடுத்து உள்ள தலம். கும்பகோணத்திலிருந்து நகரப்பேருந்துகள் செல்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *