அருள்மிகு சூடிக்கொடுத்த பெருமாள் கோயில், திருக்கண்ணபுரம்

அருள்மிகு சூடிக்கொடுத்த பெருமாள் கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர் மாவட்டம்

04366 270 557, 270 374, 99426 56580 (மாற்றங்களுக்குட்பட்டவை)

 

கோயில்களில் நடை சாத்தப்பட்டிருந்தாலும் கூட, உயர்ந்து நிற்கும் கோபுரத்திற்கோ, கோபுரம் இல்லாத கோயில்களில் கருவறை விமானத்திற்கோ ஒரு கும்பிடு போட்டுவிட்டு செல்வோம். ஆனால், திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணபுரம் சூடிக்கொடுத்த பெருமாள் கோயிலில் சுவாமி விமானத்தை வெளியில் இருந்தபடி மட்டுமல்ல! கோயிலுக்குள் நின்றாலும் தரிசிக்க முடியாதபடி மதில் சுவர் எழுப்பப்பட்டிருக்கும்.

இதன் இரகசியம்:

கருவறைக்கு மேல் உத்பலாவதக விமானம் உள்ளது. இதில் முனிவர்கள் வணங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, இந்த விமானத்தை தரிசிப்பதற்கு மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது. இதற்காக விமானத்தை சுற்றிலும் மதில் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது.

அருள்மிகு சிங்கிரி கோயில், காவலூர்

அருள்மிகு சிங்கிரி கோயில், காவலூர், வேலூர் மாவட்டம்.

வேலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் 20 km தொலைவில் கண்ணமங்கலம் என்ற மலைகள் சூழ்ந்த அழகிய ஊர் உள்ளது. கண்ணமங்கலத்தில் இருந்து காட்டுக்கானல்லூர் சாலையில் சென்றால் 5 km தொலைவில் இந்த சிங்கிரிகோயில் உள்ளது. ஊரின் பெயரும், கோயிலின் பெயரும் ஒன்றே. இந்த கோயில் பல மலைகள் சூழ நடுவே சிறிய குன்றின் மேல் உள்ளது.

இங்கே எழுந்தருளியுள்ள ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் நான்கு கரங்களுடன் பக்தர்களுக்கு கருணையோடு அருள் பாலிக்கிறார். மற்ற கோயில்களில் லக்ஷ்மி தேவி, நரசிம்மரின் இடது மடியில் அமர்ந்திருப்பார். இத்திருக்கோயிலில் ஸ்ரீலக்ஷ்மி தேவி நரசிம்மரின் வலது மடியில் அமர்ந்து பக்தர்களின் கோரிக்கைகளை நரசிம்மரிடம் கூறி நிறைவேற்றி வைக்கிறார். ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் சன்னதியின் இடப் பக்கம், என் இதயத்தை திறந்து பார்த்தால் அதில் என் தாய் தந்தை வடிவில் இராமரும் சீதா தேவியும் இருப்பார்கள் என்று இதயத்தை பிளந்து காட்டி பக்திக்கு இலக்கணம் வகுத்த அனுமனின் சன்னதி உள்ளது.