அருள்மிகு சூடிக்கொடுத்த பெருமாள் கோயில், திருக்கண்ணபுரம்
அருள்மிகு சூடிக்கொடுத்த பெருமாள் கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர் மாவட்டம்
04366 270 557, 270 374, 99426 56580 (மாற்றங்களுக்குட்பட்டவை)
கோயில்களில் நடை சாத்தப்பட்டிருந்தாலும் கூட, உயர்ந்து நிற்கும் கோபுரத்திற்கோ, கோபுரம் இல்லாத கோயில்களில் கருவறை விமானத்திற்கோ ஒரு கும்பிடு போட்டுவிட்டு செல்வோம். ஆனால், திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணபுரம் சூடிக்கொடுத்த பெருமாள் கோயிலில் சுவாமி விமானத்தை வெளியில் இருந்தபடி மட்டுமல்ல! கோயிலுக்குள் நின்றாலும் தரிசிக்க முடியாதபடி மதில் சுவர் எழுப்பப்பட்டிருக்கும்.
இதன் இரகசியம்:
கருவறைக்கு மேல் உத்பலாவதக விமானம் உள்ளது. இதில் முனிவர்கள் வணங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, இந்த விமானத்தை தரிசிப்பதற்கு மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது. இதற்காக விமானத்தை சுற்றிலும் மதில் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது.
பல முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி. உணவின்றித் தவம் செய்தனர். இதனால் நெற்கதிர் என்ன அளவோ அந்த அளவுக்கு மெலிந்து விட்டனர். மகாவிஷ்ணுவிடம் “அஷ்டாட்சர மந்திரம்” கற்ற உபரிசிரவசு எனும் மன்னன் ஒருசமயம் தன் படையுடன் இவ்வழியாக சென்றான். அந்த வீரர்கள், அங்கிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்து வாளால் வெட்ட ஆரம்பித்தனர். அவர்களது அலறல் கேட்ட மகாவிஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார். மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, மன்னன், அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான். அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து, மன்னிப்பு கேட்டான். விஷ்ணு அவனை மன்னித்து சுயரூபம் காட்டி, அங்கேயே எழுந்தருளினார். பின், மன்னன் இங்கு கோயில் எழுப்பினான்.
ஒருசமயம் இக்கோயில் அர்ச்சகர் சுவாமிக்கு சாத்திய மாலையைத் தன் காதலிக்கு சூட்டிவிட்டார். அந்நேரத்தில் மன்னர் கோயிலுக்கு வந்தார். மன்னருக்கு மரியாதை செய்ய அர்ச்சகரிடம் மாலை இல்லை. எனவே, தன் காதலிக்கு சூட்டிய மாலையையே மன்னருக்கு அணிவித்தார். அதில் முடி இருந்ததைக்கண்ட மன்னர் அர்ச்சகரிடம், “மாலையில் முடி எப்படி வந்தது?” என கேட்டார். அர்ச்சகர், “பெருமாளின் ஜடையில் இருந்த முடிதான் அது” என்று சொன்னார். மன்னனுக்கு சந்தேகம் வரவே,”ஆண்தெய்வத்துக்கு ஜடையா?” என கேட்க, கலங்கிய அர்ச்சகர், பெருமாளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்ட, பெருமாள் திருமுடியுடன் காட்சி தந்தார். எனவே இவர் “சவுரிராஜப் பெருமாள்” எனப் பெயர் பெற்றார். அமாவாசையன்று மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். “சவுரி” என்ற சொல்லுக்கு “முடி” என்றும், “அழகு” என்றும் பொருள்.
இங்குள்ள தீர்த்தத்தில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜை செய்கிறார்கள். தோஷத்தால் பாதிக்கப்பட்ட இந்திரன் இங்கு வந்து, நவக்கிரகப் பிரதிஷ்டை செய்து சுவாமியை வணங்கித் தோஷம் நீங்கப்பெற்றான். இந்திரன் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் கோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்கு பார்த்தபடி இருக்கிறது. இந்த நவக்கிரகங்களைச் சுற்றிலும் 12 ராசிகளின் சின்னங்களும் இருப்பது வித்தியாசமான அமைப்பு. பொதுவாக பெருமாள் கோயில்களில் நவக்கிரக தரிசனம் கிடைப்பது அரிது.
திருவிழா:
வைகாசி, மாசியில் பிரம்மோற்ஸவம்.
வழிகாட்டி:
மயிலாடுதுறையில் இருந்து (30 கி.மீ.,) திருப்புகலூர் சென்று (சன்னாநல்லூர் வழி) அங்கிருந்து ஆட்டோவில் 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
Leave a Reply