மகாதேவர் (இரட்டையப்பன்) கோயில், பெருவனம்

அருள்மிகு மகாதேவர் (இரட்டையப்பன்) கோயில், பெருவனம், திருச்சூர், கேரளா.

+91- 487 – 234 8109

காலை 5 மணி முதல்10.30 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் மகாதேவர், இரட்டையப்பன்
அம்மன் பார்வதி
தல விருட்சம் ஆல மரம்
தீர்த்தம் தொடுகுளம்
பழமை 2000-3000 வருடங்களுக்கு முன்
ஊர் பெருவனம்
மாவட்டம் திருச்சூர்
மாநிலம் கேரளா

பூரு மகரிஷி வனமாக இருந்த இப்பகுதியில் சிவனை நோக்கிக் கடும் தவம் இருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் பார்வதியுடன் அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி தந்து, இலிங்கம் ஒன்றை கொடுத்தார். அந்த இலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்குரிய தீர்த்தத்தை தனது கையாலேயே உருவாக்கினார் மகரிஷி. விரல்களால் மூன்று கோடு போட்டு ஒரு குளத்தை உருவாக்கினார். எனவே அது தொடுகுளம்எனப்பட்டது. இந்த குளத்தில் நீர் வற்றும் போது மகரிஷி போட்ட மூன்று கோடுகளை இப்போதும் காணலாம். ஒருமுறை மகரிஷி குளிக்க செல்லும் போது சிவலிங்கத்தை அருகிலிருந்த ஒரு ஆலமரத்தின் மேல் வைத்து சென்றார். திரும்ப வந்து இலிங்கத்தை எடுத்தபோது இலிங்கம் வரவில்லை. எனவே 24 படிகள் அமைத்து அதன் மீது ஏறி இலிங்கத்தை பூஜித்து வந்தார். இதைக் குறிக்கும் வகையில் இக்கோயிலில் 24படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிகளில் ஏறிச்சென்றே மூலவரை தரிசிக்க முடியும். பூரு மகரிஷி தவம் செய்ததால் இத்தலம் பூரு வனம்என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் பெருவனம்ஆனது.

மாயூரநாதர் சுவாமி திருக்கோயில், பெத்தவநல்லூர்

அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயில், பெத்தவநல்லூர், ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.

+91 4563 222 203

காலை 6 மணி முதல் 11 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மாயூரநாதர்
அம்மன் அஞ்சல் நாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் காயல்குடி நதி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் பெத்தவநல்லூர், ராஜபாளையம்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் சிவநேசி என்ற பெண் சிவன் கோயில் வழியாகத் தன் தாய் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தாள். சிவநேசிக்கு அது பேறுகால சமயம். நடந்து சென்று கொண்டிருக்கும் போதே அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். அங்கிருந்த சிவன் கோயில் வாசலில் அமர்ந்து அழுது புரண்டாள். இந்த துன்பத்தை கண்ட கருணை வடிவான சிவன் தானே அந்த பெண்ணின் தாய் உருவில் வந்து மகப்பேறு பார்த்தார். அத்துடன் குழந்தையை பெற்ற பெண்ணின் தாகம் தீர காயல்குடி நதியை வரவழைத்து, அதன் நீரை மருந்தாக பருகவும் உதவினார். (இந்த நதியே தற்போது இந்தக் கோயிலின் தீர்த்தமாக உள்ளது)

தன் பெண்ணின் பிரசவச் செய்தியை கேள்விப் பட்ட தாய், சிவனே தன் உருவில் தாயாக வந்து பிரசவம் பார்த்ததை அறிந்து இறைவனை நினைத்து வழிபட்ட போது, சிவன் உமையவள் சமேதராய் காட்சி கொடுத்து அருள்பாலித்தார்.