மாயூரநாதர் சுவாமி திருக்கோயில், பெத்தவநல்லூர்

அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயில், பெத்தவநல்லூர், ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.

+91 4563 222 203

காலை 6 மணி முதல் 11 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மாயூரநாதர்
அம்மன் அஞ்சல் நாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் காயல்குடி நதி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் பெத்தவநல்லூர், ராஜபாளையம்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் சிவநேசி என்ற பெண் சிவன் கோயில் வழியாகத் தன் தாய் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தாள். சிவநேசிக்கு அது பேறுகால சமயம். நடந்து சென்று கொண்டிருக்கும் போதே அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். அங்கிருந்த சிவன் கோயில் வாசலில் அமர்ந்து அழுது புரண்டாள். இந்த துன்பத்தை கண்ட கருணை வடிவான சிவன் தானே அந்த பெண்ணின் தாய் உருவில் வந்து மகப்பேறு பார்த்தார். அத்துடன் குழந்தையை பெற்ற பெண்ணின் தாகம் தீர காயல்குடி நதியை வரவழைத்து, அதன் நீரை மருந்தாக பருகவும் உதவினார். (இந்த நதியே தற்போது இந்தக் கோயிலின் தீர்த்தமாக உள்ளது)

தன் பெண்ணின் பிரசவச் செய்தியை கேள்விப் பட்ட தாய், சிவனே தன் உருவில் தாயாக வந்து பிரசவம் பார்த்ததை அறிந்து இறைவனை நினைத்து வழிபட்ட போது, சிவன் உமையவள் சமேதராய் காட்சி கொடுத்து அருள்பாலித்தார்.

இந்த சிவாலயத்தின் உள்ளே நுழைந்ததுமே விநாயகர், முருகன், பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என அனைவருமே நம்மை ஆசிர்வதிப்பது போன்ற அமைப்பு. ஸ்தல விநாயகர் கன்னி முலையில் இருந்தபடியே அருள்பாலிக்கிறார்.

கிழக்கு பார்த்து அமைந்த இந்த சிவலாயத்தில் நந்தி தேவரை வணங்கி விட்டு மாயூர நாதர்டம் செல்லவேண்டும். மாயூர நாதரைத் தரிசித்த கணத்தில் திருப்தி ஏற்படுகிறது. அருகிலுள்ளது அன்னை அஞ்சல் நாயகி. அம்மை, அப்பன் இருவரின் சன்னதிக்கு நடுவில் சோமஸ்கந்தர் சன்னதி. நவகிரகங்கள், கொடி மரம், சிவனை சேவித்தபடி காட்சி தரும் நாயன்மார்கள் ஆகியோர் உள்ளனர். இவர்களையெல்லாம் தரிசித்த பின் கொடிமரத்தின் கீழ் வடக்கு நோக்கி நமஸ்காரம் செய்தால், நமக்கு மேல் குருபகவான் 12 ராசிகளுடன் நமது எதிர்காலத்தை வளமுள்ளதாக அமைக்க தாயாராக இருக்கிறார். நாம் கொடிமரத்தின் முன் உள்ள ஆமை மீது கைவைத்து தான் இறைவனை நமஸ்காரம் செய்கிறோம். ஆமையானது சிவனின் ஆபரணத்தில் ஒன்று. மேலும் தண்ணீரில் இருக்கும் வரை ஆமை நன்றாக சுற்றித்திரியும். ஆனால் கரைக்கு வந்தவுடன் தன் உடலை ஓட்டிற்குள் அடக்கி அமைதியாகி விடும். அதுபோலவே நாமும் வெளியில் இருக்கும் வரை நமது எண்ணங்களை அலைபாய விட்டாலும், சிவ சன்னதி உள்ளே வந்தவுடன் மனதை அடக்கி இறைவனை வழிபட்டு அவனருள் பெற வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்த வழிபாடு. வில்வமே இக்கோயில் தல விருட்சமாகும்.

திருவிழா:

கார்த்திகை, பவுர்ணமி, சிவராத்திரி, சங்கடகர சதுர்த்தி, பிரதோஷம், பிரம்மோற்சவம், நவராத்திரி விழா, சோம வார பூஜை, தனுர் பூஜை, ஆருத்ரா தரிசம், 1008 திருவிளக்கு பூஜை, மகா சிவராத்திரி விழா, பங்குனி உத்திரத் திருவிழா.

கோரிக்கைகள்:

பிரிந்து வாழும் தம்பதியினர், குழந்தைப் பெறப்போகும் தாய்மார்கள் இக்கோயிலுக்கு வந்து மாயூர நாதரை வேண்டிக் கொண்டால், புத்திரப்பேறு பெற தாய்மார்களுக்கு தானே உதவிடுவார் என்பது நம்பிக்கை. தம்பதியினர் இக்கோயிலுக்கு வந்து 48 நாட்கள் சுவாமி அம்மனுக்குரிய பள்ளியறை பூஜையின் போது ஏலக்காய் போட்ட தித்திப்பான பால் நைவேத்தியம் செய்து வழிபட்டால் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *