Category Archives: திருவண்ணாமலை

கனககிரீசுவரர் திருக்கோயில், தேவிகாபுரம்

அருள்மிகு கனககிரீசுவரர் திருக்கோயில், தேவிகாபுரம், திருவண்ணாமலை மாவட்டம்.

+91- 4173-247 482, 247 796.

மலைமீதுள்ள கோயில் காலை 8 முதல் 10 மணிவரை மட்டுமே திறந்திருக்கும். கீழே உள்ள அம்மன் கோயில் காலை 6 முதல் 12மணி, மாலை 5 முதல் 8 மணிவரை திறந்திருக்கும்.

மூலவர் கனககிரீசுவரர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சிவதீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தேவக்காபுரம்
ஊர் தேவிகாபுரம்
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

ஒரு சமயம் அம்மையும் அப்பனும் கயிலையில் வீற்றிருக்கும்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் சக்தியை நீக்கி சிவனை மட்டும் வணங்கிச் சென்றார். அதுகண்டு வருத்தமடைந்த அன்னை, இறைவனை நோக்கி வணங்கி,”அய்யனே. தங்களுடலில் சரி பாதியை எனக்கு வழங்கியருள வேண்டும்என்று வேண்டினாள்.

இறைவனும் சக்தியை நோக்கி, “உமையே! நீ பூவுலகம் சென்று கச்சியம்பதியில்(காஞ்சிபுரம்) காமாட்சி என்ற பெயருடன் தவமிருந்து என்னை பூஜித்து வா. உரிய காலத்தில் உன்னை மணந்து கொள்வேன். பின்னர் திருவருணைக்கு (திருவண்ணாமலை) வந்து வழிபாடு செய்யும்போது உமக்கு இடப்பாகம் தருவேன்என்று உறுதியளித்தார். அவ்வண்ணமே அன்னை கச்சியம்பதி வந்து தவமிருந்தார். பின்னர் திருவருணைக்கு செல்லும்போது வழியில் தேவிகாபுரத்தில் ஒரு மண்டலம் தங்கி இங்குள்ள கனககிரி நாதரை வணங்கித் தவமிருந்தார். அதனால் இத்தலம் தேவிகாபுரம் என்று பெயர் பெற்றது என்பர். பின்னர் திருவருணைக்கு சென்று ஏகாம்பரநாதரை மணந்து இடப்பாகம் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.

கைலாசநாதர் திருக்கோயில், நார்த்தம்பூண்டி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், நார்த்தம்பூண்டி, திருவண்ணாமலை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
அம்மன் பெரியநாயகி, உமையம்மை
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் நாரத பூண்டி
ஊர் நார்த்தம்பூண்டி
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

சிவபெருமானிடம் இடப்பாகத்தைப் பெறவேண்டி காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்ட உமையம்மை திருவண்ணாமலை நோக்கி செல்லும் போது வாழைப்பந்தல் என்ற இடத்தில் தங்கினாள். அங்கு சிவலிங்க வழிபாடு செய்வதற்காக இலிங்கத்தை தேடி அலைந்தாள். இலிங்கம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே மணலால் ஆன இலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய தீர்மானித்தாள்.

இலிங்கத்தை வடிப்பதற்கு தண்ணீர் தேவைப்பட்டது. எனவே முருகனை வரவழைத்து தண்ணீருக்கு ஏற்பாடு செய்யும்படி சொன்னாள். முருகன் தனது வேலாயுதத்தை மேல் திசைநோக்கி வீசினார். அங்கிருந்த மலைகுன்றுகளை பிளந்த வேல் செந்நீரை கொண்டு வந்தது. அந்த மலையில் புத்திராண்டன், புருகூதன், பாண்டுரங்கன், போதவான், போதன், கோமன், வாமன் ஆகிய ஏழு முனிவர்கள் தவமிருந்து வந்தனர். முருகன் வீசியவேல் அந்த ஏழு முனிவர்களையும் ஊடுருவிச் சென்றதால் ரத்தம் கொட்டி செந்நீராக வந்தது.