Category Archives: சிவ ஆலயங்கள்

அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி

அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364-270 235, +91- 94430 53195 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சட்டநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் பெரியநாயகி, திருநிலைநாயகி
தல விருட்சம் பாரிஜாதம், பவளமல்லி
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள்
ஆகமம் பஞ்சரத்திரம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பிரம்மபுரம், சீர்காழி
ஊர் சீர்காழி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர்

சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர் பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும், இளைய பிள்ளையார் என்றும் வழங்குவர். இவர் தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் இத்தலத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்தார். தந்தை இவரைக் குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, “அம்மா; அப்பாஎன அழுதார். இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி அம்பிகை, சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள். பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து விட்டார்.

குளித்து விட்டு வந்த தந்தை, “பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா?” எனச்சொல்லி கையில் உள்ள குச்சியால் சம்பந்தரை அடிக்க ஓங்கினார். அப்போது சம்பந்தர், சிவனும் பார்வதியும் தரிசனம் தந்த திசையை காட்டி, “தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றேஎன்று பாடினார். தந்தை அசந்து போனார். தன் குழந்தைக்கு இறைவனே காட்சி தந்து பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார். இத்தலத்தைபற்றி சம்பந்தர் 67 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

ஊழிக்காலத்தில் உலகம் அழிந்த பின் சிவபெருமான் 64 கலைகளையும் ஆடையாகத் தரித்து, “ஓம்என்ற பிரணவமந்திரத்தை தோணியாக்கி, உமா மகேசுவரராக வருகையில், ஊழிக்காலத்திலும் அழியாத இந்த சீர்காழி தலத்தைப் பார்த்தார். இதுவே எல்லாவற்றிற்கும் மூல சேத்திரம் என்று தோணியுடன் இத்தலத்தில் எழுந்தருளினார். அதனால் தோணியப்பர்எனப் பெயர் பெற்றார். அம்பாள் திருநிலை நாயகிஎனப்பட்டாள். இங்கு சிவனை பிரம்மா பூஜித்ததால் பிரம்மபுரீசுவரராக இலிங்க வடிவிலும், ஆணவங் களை அழிப்பவராக சட்டை நாதராகவும், பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார். இவர்கள் தான் சம்பந்தருக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்தவர்கள். இது குரு மூர்த்தம் எனப்படும். உச்சியில் உள்ள அடுக்கில் சட்டைநாதர் அருள்பாலிக்கிறார். இவர் சிவனின் அம்சங்களில் பைரவ அம்சமாகத் திகழ்கிறார்.

அருள்மிகு வெள்ளடைநாத சுவாமி திருக்கோயில், திருக்குருகாவூர்

அருள்மிகு வெள்ளடைநாத சுவாமி திருக்கோயில், திருக்குருகாவூர், வடகால் போஸ்ட், சீர்காழி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 9245 612 705 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வெள்ளடைநாதர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் காவியங்கண்ணி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் பால்கிணறு
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்குருகாவூர், வெள்ளடை
ஊர் திருக்குருகாவூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், சுந்தரர்

சைவ சமயம் தழைக்கப் பாடுபட்ட சம்பந்தர், மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். இவ்வாறு சமணர்களை கழுவேற்றிய பாவம் நீங்க, சம்பந்தர், காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட விரும்பினார். காசிக்கு செல்ல உத்திரவு அருளும்படி சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார். சம்பந்தருக்கு காட்சி தந்த சிவன், அவரை சீர்காழிக்கு செல்ல வேண்டாமென்றும், இத்தலத்தில் அவருக்கு கங்கையை வரவழைத்துக் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி இங்கு வந்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், இங்கிருந்த கிணற்றில் கங்கையை பொங்கச் செய்தார். அதில் நீராடிய சம்பந்தர், பாவம் நீங்கப்பெற்றார். பிற்காலத்தில் இத்தலத்தில் கோயில் எழுப்பப்பட்டது.