அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி

அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364-270 235, +91- 94430 53195 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சட்டநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் பெரியநாயகி, திருநிலைநாயகி
தல விருட்சம் பாரிஜாதம், பவளமல்லி
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள்
ஆகமம் பஞ்சரத்திரம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பிரம்மபுரம், சீர்காழி
ஊர் சீர்காழி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர்

சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர் பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும், இளைய பிள்ளையார் என்றும் வழங்குவர். இவர் தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் இத்தலத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்தார். தந்தை இவரைக் குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, “அம்மா; அப்பாஎன அழுதார். இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி அம்பிகை, சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள். பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து விட்டார்.

குளித்து விட்டு வந்த தந்தை, “பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா?” எனச்சொல்லி கையில் உள்ள குச்சியால் சம்பந்தரை அடிக்க ஓங்கினார். அப்போது சம்பந்தர், சிவனும் பார்வதியும் தரிசனம் தந்த திசையை காட்டி, “தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றேஎன்று பாடினார். தந்தை அசந்து போனார். தன் குழந்தைக்கு இறைவனே காட்சி தந்து பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார். இத்தலத்தைபற்றி சம்பந்தர் 67 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

ஊழிக்காலத்தில் உலகம் அழிந்த பின் சிவபெருமான் 64 கலைகளையும் ஆடையாகத் தரித்து, “ஓம்என்ற பிரணவமந்திரத்தை தோணியாக்கி, உமா மகேசுவரராக வருகையில், ஊழிக்காலத்திலும் அழியாத இந்த சீர்காழி தலத்தைப் பார்த்தார். இதுவே எல்லாவற்றிற்கும் மூல சேத்திரம் என்று தோணியுடன் இத்தலத்தில் எழுந்தருளினார். அதனால் தோணியப்பர்எனப் பெயர் பெற்றார். அம்பாள் திருநிலை நாயகிஎனப்பட்டாள். இங்கு சிவனை பிரம்மா பூஜித்ததால் பிரம்மபுரீசுவரராக இலிங்க வடிவிலும், ஆணவங் களை அழிப்பவராக சட்டை நாதராகவும், பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளாக அருள்பாலிக்கிறார். இவர்கள் தான் சம்பந்தருக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்தவர்கள். இது குரு மூர்த்தம் எனப்படும். உச்சியில் உள்ள அடுக்கில் சட்டைநாதர் அருள்பாலிக்கிறார். இவர் சிவனின் அம்சங்களில் பைரவ அம்சமாகத் திகழ்கிறார்.

மகாபலி சக்கரவர்த்தியை அழித்த தோஷம் விஷ்ணுவிற்கு பிடித்து கொண்டது. விஷ்ணு வேறு, தான் வேறு இல்லை என்பதால் அவரது தோலை, சிவன் சட்டையாக அணிந்து கொண்டார். ஆனால், விஷ்ணுவை சிவன் அழித்து விட்டதாக நினைத்து மகாலட்சுமி தலையில் பூ வைத்து கொள்ளாமல் ஆழ்ந்த கவலையில் இருந்தாள். இப்போதும் கூட இவரது சன்னதிக்கு வரும் பெண்களை பூ வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. ஆண்கள் சட்டை அணியக்கூடாது. சட்டங்களுக்கெல்லாம் இவரே அதிபதி என்பதால், வழக்குகளில் பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.

பிரம்மனுக்கு ஏற்பட்ட அகங்காரம் நீக்கிய தலம். பிரளய காலத்தில் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம். இத்தல அம்மன் மகாலட்சுமி சொரூபமாக சக்தி பீடத்தில் 11வது பீடமாக அமர்ந்துள்ளார். இங்கு வந்து வணங்கினால் தான்என்ற அகங்காரம் நீங்கி ஞானம் கிடைக்கும். பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான். காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ சேத்திரம்.

இங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உன்மத்த பைரவர், சம்கார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர். எனவே தான் காழியில் பாதி காசி என்பர். இவர்களது சன்னதிக்குள் சட்டை அணிய அனுமதியில்லை. அஷ்டமி திதிகளில் சிறப்பு பூஜை உண்டு.

18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தர் இங்கு ஜீவ சமாதி ஆகி உள்ளார். சிவன் கோயில் பிரகாரத்தில் இவரது ஜீவ சமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது. இங்கிருந்தபடியே உச்சியிலிருக்கும் சட்டைநாதரை தரிசிக்க முடியும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 12 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சாத்தி, வடை மாலை அணிவித்து, பாசிப் பருப்பு பாயசம் நைவேத்யம் செய்யப் படுகிறது.

உரோமச முனிவர் கயிலை சென்று, சிவனை நோக்கித் தவம் செய்து, “இறைவா. பக்தர்களின் குறை தீர்க்க தென்திசையில் தேவியுடன் எழுந்தருளி, கயிலை தரிசனம் தரவேண்டும்என வேண்டினார்.

ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது. இதில் ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் கயிலையை மூடிக்கொண்டார். வாயுவால் மலையை அசைக்கக்கூட முடியவில்லை. தேவர்களின் வேண்டுகோளின் படி ஆதிசேஷன் ஒரு தலையை மட்டும் தூக்க, வாயுவின் வேகத்தினால் சிறு பகுதி பெயர்ந்தது. இறைவனின் அருளால் இந்த சிறு மலையை 20 பறவைகள் சீர்காழிக்கு கொண்டு வந்து சேர்த்தன. காலவித்து என்னும் மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. கயிலை சென்று இறைவனை வணங்கினால் தான் புத்திர பாக்கியம் கிடைக்கும் எனப் பெரியவர்கள் கூறினர். அவன் சின்னக் கயிலையான சீர்காழிக்கு வந்து இறைவனை வணங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்றான்.

இக்கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது இலிங்க மூர்த்தம் எனப்படும். இவருக்கு 6 கால பூஜை நடக்கிறது. படைக்கும் தொழிலைச் செய்த பிரம்மா, தானே உலகில் பெரியவன் என அகங்காரம் கொண்டார். இந்த அகங்காரத்தைப் போக்குவதற்காக சிவபெருமான், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு மறக்க செய்தார். இதனால் வருந்திய பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார்.

நடு அடுக்கில், உமாமகேஸ்வரர் உள்ளனர். இவரை தோணியப்பர்என அழைக்கிறார்கள். இவருக்கு 4 கால பூஜை நடக்கிறது. இந்தக் குன்றையும் தோணிமலைஎன்கின்றனர்.

இக்கோயிலுக்குள்ளேயே திருஞானசம்பந்தருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சம்பந்தர் மூலவராக உள்ளார். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், வெளியே தனியாக உள்ளனர்.

சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் நடுவே சம்பந்தர் சன்னதி உள்ளது. இதனை சோமாஸ்கந்த அமைப்பு என்று கூறுவார்கள். இத்தலத்தில் 22 தீர்த்தங்கள் உள்ளன. அதில் பிரம்மதீர்த்தம், காளி, பராசர, புறவநதி, கழுமலநதி, விநாயகநதி ஆகியவை முக்கிய தீர்த்தங்கள் ஆகும். இந்திரனுக்காக, இத்தல இறைவன் மூங்கில் மரமாக காட்சி கொடுத்ததால் மூங்கில் தல விருட்சமாக உள்ளது. மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இத்தல விநாயகர் ரொணம் தீர்த்த விநாயகர்என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்துக்கு பல பெயர்கள் உண்டு. அவற்றில் சில

1. பிரம்மபுரம் (பிரம்மன் வழிபட்டது)

2. வேணுபுரம் (வேணு மூங்கில் வடிவமாக இறைவன் தோன்றியதால் )

3. சிரபுரம் (தலை பிளவுபட்ட இராகு பூசித்தமையால்)

4. ஸ்ரீகாழி ( தில்லை ஈசனுடன் வாதாடிய குற்றம் போக காளி வழிபட்ட தலம் )

5. கழுமலம் ( உரோமச முனி மலக்கூறு நீங்க வழிபட்டதால் )

6. புறவம் ( புறா வடிவங்கொன்ட அக்கினியால் சிபிச்சக்கரவர்த்தி நற்கதி அடைந்ததால் )

ஆகியன.

அருணகிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர் ஆகியோரும் இத்தலம்பற்றிப் பாடியுள்ளனர்.
தேவாரப்பதிகம்:

1 தோடுடைய செவியன்விடை யேறியோர்
2 முற்றல்ஆமையிள நாகமோடுஏனம்
3 நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர்நிலாவெண்
4 விண்மகிழ்ந்தமதில் எய்ததும்அன்றி
5 ஒருமைபெண்மைஉடை யன்சடையன்விடை
6 மறைகலந்தஒலி பாடலோடு ஆடலர்ஆகிமழு
7 சடைமுயங்குபுன லன்அனலன்எரிவீசிச்சதிர்
8 வியர்இலங்குவரை உந்திய தோள்களைவீரம்
9 தாள்நுதல் செய்துஇறை காணியமாலொடுதண்
10 புத்தரோடுபொறி யில்சமணும்புறம்கூறநெறி
11 அருநெறியமறை வல்லமுனியகன்பொய்கையலர்

திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 14வது தலம்.

திருவிழா:

சித்திரை திருவாதிரையில் பிரம்மோத்சவம் தொடங்கும். இதில் 2ம் நாள் சம்பந்தருக்கு அம்பாள் பால் தந்த உற்சவம் பிரம்ம தீர்த்தத்தின் கரையில் நடக்கிறது. அன்றைய தினம் ஞானசம்பந்தருக்கு நைவேத்யம் செய்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால் மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். மலைக் கோயிலில் அருள்பாலிக்கும் உமாமகேஸ்வரருக்கு சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதப்பிறப்புகளிலும், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை மற்றும் சிவராத்திரி நாட்களிலும் தைலாபிஷேகம் நடைபெறும். ஆடிப்பூரம், நவராத்திரி, தை அமாவாசை, வைகாசி மூலம், ஆனி ரோகிணி, ஐப்பசி சதயம் ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜை உண்டு.

பிரார்த்தனை:

வழக்குகளில் பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. குழந்தை இல்லாதவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

பல சிவாலயங்கள் இத்தலத்தைச் சுற்றி அமைந்துள்ளன. அவையாவன

1. கிழக்கே 2 கீ மீ தொலைவில் திருக்கோலக்காவும்

2. மேற்கே 6 கீ மீ தொலைவில் தலைஞாயிறும்

3. தென்மேற்கே 15 கீ மீ தொலைவில் வைத்தீஸ்வரன் கோயிலும்

4. தென்கிழக்கே 6 கீ மீ தொலைவில் கீழைத் திருக்காட்டுப்பள்ளியும்

5. அது தாண்டி 4 கீ மீ தொலைவில் திருவெண்காடும்

6. திருவெண்காட்டிலிருந்து 6 கீ மீ தொலைவில் சாயாவனமும்

7. சாயாவனத்திலிருந்து 2 கீ மீ தொலைவில் பூம்பகார் பல்லவனீஸ்வரமும் உள்ளன.

2 Responses to அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி

  1. ஐயா தகவல்களுக்கு சிறம் தாழ்ந்த நன்றி

  2. சிரம் தாழ்ந்த நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *