அருள்மிகு வெள்ளடைநாத சுவாமி திருக்கோயில், திருக்குருகாவூர்

அருள்மிகு வெள்ளடைநாத சுவாமி திருக்கோயில், திருக்குருகாவூர், வடகால் போஸ்ட், சீர்காழி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 9245 612 705 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வெள்ளடைநாதர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் காவியங்கண்ணி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் பால்கிணறு
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்குருகாவூர், வெள்ளடை
ஊர் திருக்குருகாவூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், சுந்தரர்

சைவ சமயம் தழைக்கப் பாடுபட்ட சம்பந்தர், மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். இவ்வாறு சமணர்களை கழுவேற்றிய பாவம் நீங்க, சம்பந்தர், காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட விரும்பினார். காசிக்கு செல்ல உத்திரவு அருளும்படி சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார். சம்பந்தருக்கு காட்சி தந்த சிவன், அவரை சீர்காழிக்கு செல்ல வேண்டாமென்றும், இத்தலத்தில் அவருக்கு கங்கையை வரவழைத்துக் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி இங்கு வந்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், இங்கிருந்த கிணற்றில் கங்கையை பொங்கச் செய்தார். அதில் நீராடிய சம்பந்தர், பாவம் நீங்கப்பெற்றார். பிற்காலத்தில் இத்தலத்தில் கோயில் எழுப்பப்பட்டது.


மூலஸ்தானத்தில் வெள்ளடைநாதர் சதுர பீடத்தில், சிறிய பாணலிங்கமாக காட்சி தருகிறார். அன்று காலையில் சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து திருஞானசம்பந்தரின் உற்சவ மூர்த்தி இந்த தீர்த்தத்திற்கு வருகிறார். அப்போது இக்கோயிலிலுள்ள சிவனும், அம்பாளும் அவருக்கு காட்சி தந்து தீர்த்தம் கொடுக்கின்றனர். அதன்பின்பு மாலையில் சம்பந்தர் மீண்டும் சீர்காழி திரும்புகிறார். இந்த வைபவம் வெகு விமரிசையாக இங்கு நடக்கிறது.

சிவத்தல யாத்திரை சென்ற சுந்தரர், இத்தலத்திற்கு வந்தார். அப்போது இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. எனவே, அவரால் இக்கோயிலை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இத்தலத்து சிவனை தரிசிக்காமல் சென்றுவிட்டார். வழியில் அவருக்கு பசியெடுத்தது. அப்போது ஒரு முதியவர் அவர் முன்பு வந்து, சுந்தரரிடம், அருகில் ஓரிடத்தை சுட்டிக்காட்டி, தான் அவ்விடத்தில் சிவனடியார்களுக்கு அன்னம் பரிமாறுவதாகவும், அங்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்படியும் கூறினார். அதன்படி சுந்தரரும், அவருடன் சென்ற அடியார்களும் சாப்பிடச் சென்றனர். அவர்களை முதியவர் உபசரித்தார். அதன்பின்பு சாப்பிட்ட களைப்பில் அன்னப்பந்தலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார் சுந்தரர். சற்றுநேரம் கழித்து அவர் விழித்தபோது, அங்கு அன்னதானப் பந்தலோ, சாப்பாடு பரிமாறியதற்கான தடமோ தெரியவில்லை. வியந்த சுந்தரர், தனக்கு அன்னம் பரிமாற வந்தது சிவன்தான் என அறிந்து கொண்டார். பின்பு சிவனை வேண்டவே, அவர் இத்தலத்தை அடையாளம் காட்டினார். அதன்பின்பு இங்கு வந்த சுந்தரர், சிவனை வேண்டி பதிகம் பாடினார். சுந்தரருக்கு, சிவன் அன்னம் பறிமாறிய விழா சித்ராபவுர்ணமியன்று நடக்கிறது. இங்கு சிவனிடம் வேண்டிக்கொள்ள, அன்னத்திற்கு குறையில்லாத நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள காவியங்கண்ணி அம்பிகைக்கு, “சுகப்பிரசவ நாயகிஎன்ற பெயரும் உண்டு. இவளுக்கு நல்லெண்ணெய் திருமுழுக்காட்டு செய்து, அதையே பிரசாதமாக எடுத்துச் செல்கிறார்கள். இதனால், சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

பிரகாரத்தில் துர்வாசர், சாந்த கோலத்தில் சிரித்தபடி காட்சி தருகிறார். இவர் இடது கையில் ஏடு வைத்து, வலக்கையில் அருள் செய்தபடி காட்சி தருவது விசேஷம். சிவலோக நாதர், பூலோகநாதர், பைரவர், சூரியன், சந்திரன், மாவடி விநாயகர் ஆகியோரும் உள்ளனர். இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

சிவன் சன்னதி கோஷ்டத்தில் உள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் இவருக்கு மேலே குடையும், இரண்டு சாமரங்களும் இருக்கிறது. பொதுவாக முருகன் கிழக்கு திசை நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்குள்ள முருகன், தெற்கு திசை நோக்கி வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.

தென் திசையை பார்த்திருப்பதால், இவரை, குரு அம்சமாக கருதி வழிபடுகிறார்கள். இவருக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோஷ்டத்தில், சட்டைநாதர், துர்க்கையம்மன் உள்ளனர். இந்த துர்க்கை, எட்டு கைகளுடன் காட்சி தருவது விசேஷம். நவக்கிரக சன்னதி கிடையாது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக காட்சிதருகிறார்.

திருஞானசம்பந்தருக்காக இங்கு தை மாத அமாவாசையன்று கங்கை நதி கிணற்றில் பொங்கியது. இதன் அடிப்படையில் தற்போதும் தை அமாவாசையன்று ஒருநாள் மட்டும் இந்த தீர்த்தம் திறக்கப்படுகிறது. அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கிறார்கள். மற்ற நாட்களில் இந்த தீர்த்தத்தை திறப்பது கிடையாது.

தேவாரப்பதிகம்

பண்ணிடைத் தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவையொப்பாய் கண்ணிடை மணியொப்பாய் கடுஇருள் சுடரொப்பாய் மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே

சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 13வது தலம்.

திருவிழா:

சித்ராபவுர்ணமியில் கட்டமுது படைப்பு விழா, தை அமாவாசை.

பிரார்த்தனை:

தெரியாமல் செய்த பாவத்தால் வருந்துபவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு சிவனிடம் வேண்டிக்கொள்ள, அன்னத்திற்கு குறையில்லாத நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:

சீர்காழி தென் திருமுல்லைவாயில் சாலையில், வடகால் என்னும் ஊரில், சாலையில் குருகாவூருக்கு பிரிந்து செல்லும் சாலையில் 1 கி. மீ. சென்றால் குருகாவூரை அடையலாம். தற்போது மக்கள் வழக்கில் திருக்கடாவூர் என்று வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *