அருள்மிகு ஜகன்னாதர் கோவில், பூரி

ஸ்கந்த புராணம், புருஷ உத்தமர் புரியிலுள்ள மூர்த்தங்களை, இந்திரத்யும்னன் என்ற மன்னன் நிறுவினான் என்கிறது.

அதாவது கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திரத்யும்னன் ஜகந்நாதரின் மீது அதிக அளவு கடந்த பற்று வைத்தவன் என விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது.

ஜகந்நாதர் முதலில்,”நீலமாதவர்என அழைக்கப்பட்டு சவாரா எனப்படும் பழங்குடி மக்களால் வணங்கப்பட்டு வந்தார். சவாரா இனத்தவர்கள் ஆரிய, திராவிடர்களுக்கு முன்பே இருந்தவர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. நீலாச்சலக் குன்று என அழைக்கப்படும் (இப்போதைய கோவில் அமைந்திருக்கும் இடம்) புருஷோத்தம ஷேத்திரத்தில் அது அமைந்திருந்தது. கல்ப பாதாவின் கீழ் அமைந்திருந்த ஜகந்நாதரின் உருவம் நீலமணிக் கற்களால் ஆனதால் அந்தப் பெயர் பெற்றிருந்தது. கல்ப என்ற சொல்லுக்கு ஆயிரம் நூற்றாண்டுகள் எனவும் பாதா என்ற சொல்லுக்கு ஆலமரம் என்பதும் பொருள். காலங்கள் பல கடந்து நிற்கின்ற விருட்சம் அது. காடுகளாலும் சூழப்பட்ட அந்த இடத்தை சௌரா என்று சொல்லப்படும் பழங்குடியினர் ரகசியமாகப் பாதுகாத்து வந்தனர்.

மகாபாரதத்தின் முடிவில் ஜாரா என்ற வேடன், மானின் காலாக நினைத்து அம்பு எய்ய அந்த அம்பு, வனத்தில் உறங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணரின் உயிரைக் குடிக்கிறது. துக்கத்துடன் பாண்டவர்களை அழைத்து வந்து உயிர் பிரிந்த கிருஷ்ணர் உடலைக் காண்பிக்கிறான் ஜாரா. கிருஷ்ணரின் உடல் தகிக்கப்படுகிறது. முழுதும் எரியாத ஒரு சிறு பகுதி, அந்தப் பழங்குடி மக்களுக்குக் கிடைக்கிறது. நாளடைவில் அதே பகுதி நீலமணியாகி கடவுளாக வணங்கப்பட்டது என்பது ஒரு நம்பிக்கை (இன்றும் எரிக்கப்பட்ட சடலத்தில் ஒரு சிறு எலும்பின் பகுதியாவது முழுவதும் சாம்பலாகாமல் கிடைக்கும் என்பது பெரும்பாலோரின் கருத்து).

இந்திரத்யும்னன், மால்வா (இன்றைய மத்திய பிரதேசம்) தேசத்து அரசன். அவந்தியை (இன்றைய உஜ்ஜைன்) தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். நாரதரின் யோசனைப்படி கடவுள், குறிப்பாக விஷ்ணு எழுந்தருளியிருக்கும் இடங்களைக் கண்டறிய நாலாபுறமும் தன் தேசத்து அந்தணர்களை அனுப்புகிறான். வித்யாபதி என்கின்ற அந்தண வாலிபன் உத்கல தேசத்தை அடைந்து சவாரா பழங்குடியினரையும் நீலமாதவரைப் பற்றியும் அறிகிறான். விஸ்வாவசு என்ற அந்த பழங்குடியினர் இனத்தின் தலைவன் (வேடன் ஜாராவின் வழித்தோன்றல்), வித்யாபதியை தன்னுடன் விருந்தாளியாகத் தங்கியிருக்க அனுமதிக்கிறான். விஸ்வாவசுவின் நடத்தைகளும் அவனது இறைப்பற்றும் வித்யாபதியை வெகுவாகக் கவர்கின்றன.

நாளடைவில் வித்யாபதிக்கும் விஸ்வாவசுவின் புத்திரி லலிதாவிற்கும் காதல் அரும்பி திருமணத்திலும் முடிகிறது. விஸ்வாவசு வழிபடும் இறைவனைக் காண நீண்ட நாட்கள் தன் மனதில் ஒளிந்திருந்த ஆவலை வித்யாபதி தெரிவிக்கிறான். விஸ்வவாசு, வித்யாபதியின் கண்களைக் கட்டி அழைத்துச் சென்று நீலாச்சல குன்றில் நீலமாதவரைக் காண்பிக்கின்றான்.

விஸ்வாவசு கடவுளுடன் பேசுவது மட்டுமல்லாமல், பக்தியுடன் அவன் தந்த பழங்களைக் கடவுள் கரம் நீட்டி வாங்கி உண்டதாகவும் சொல்லப்படுகிறது.

கண்கள் மூடப்பட்டிருந்தாலும் போகும் வழியிலே கடுகு விதைகளைத் தூவியவண்ணம் சென்ற வித்யாபதிக்கு, சில நாட்கள் பின்னர் முளைவிட்ட கடுகுச் செடிகள் மூலம் தனியே சென்று பாதையை அறிவதில் சிரமம் இருக்கவில்லை. வழியைக் கண்டுகொண்டு, மாதவரையும் தரிசித்துவிட்டு கடவுளது மாலை ஒன்றுடன் அவந்திக்கு வித்யாபதி விரைகிறான்.

செய்தியைக் கேட்டறிந்ததும் இந்திரத்யும்னன், புருஷோத்தம ஷேத்திரத்திற்கு தன் ராஜகுரு, மந்திரிகள், நாரதர் என அனைவருடன் செல்கிறான். ஆனால் அவன் அந்த இடத்தை அடையும்போதே அந்த இடத்தைவிட்டு இறைவன் அகன்றுவிடுகிறான். மனம் தளர்ந்த அரசன் கனவில் தோன்றி, அசுவமேத யாகத்தைச் செய்து தன்னை தாரு பிரம்ம வடிவில் பெறுமாறு சொல்கிறார்.

அரசன் நடத்திய யாகத்தின் முடிவில், ஒரு மரம் நன்கு கிளைகளுடன் கடலில் மிதந்து வருவது தெரிகிறது. ஆனால், எந்தத் தச்சர்களாலும் அதை விக்ரமாகச் செதுக்க முடியவில்லை. உளியின் முனை மரத்தில் பட்டதுமே மழுங்குகிறது.

இறுதியில், மஹாவிஷ்ணுவே வயதான தச்சர் வடிவில் வந்து அதை இருபத்தொரு நாட்களில் செய்து முடிப்பதாக உறுதி அளிக்கிறார்.

மனமகிழ்ந்த அரசன், தச்சரது நிபந்தனையின் பேரில், மூடப்பட்ட அறை ஒன்றில் யாரும் அவர் செய்வதைக் காணமுடியாமல் அவர் சிலை வடிக்கத் தொடங்க ஏற்பாடு செய்கிறான். இரவு பகல் என்று இடைவெளியே இல்லாமல் உளியின் சத்தம் கேட்கத் தொடங்குகிறது. பதினைந்தாம் நாள் அந்த உளியின் சத்தம் திடீரென நிற்கிறது. தச்சரது வயதையும் கழிந்த நாட்களையும் மனதில்கொண்ட அரசன், தன்பட்டத்து ராணி குண்டி(ச்)சாவின் வேண்டுகோளுக்கு இணங்கி கதவைத் திறக்கச் செய்கிறான்; பாதி முடிந்த நிலையில் நான்கு மரச் சிலைகள் கிடைக்கின்றன. தச்சர் மறைந்துவிடுகிறார்.

இச்சிலைகள், வடிவே அற்றவரை எப்படி ஒரு வடிவில் பிரதிபலிக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. வருணிக்கவே முடியாத ஒருவரை, ஒரு விவரிப்பில் கொணர முடியும் என்பதை விளக்குகிறது. மனித பரிணாம வளர்ச்சிக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை.

இந்த யக்ஞ வேதியில் இருந்த நான்கு பிம்பங்களையும் (இப்போதைய குண்டி(ச்)சா தேவி கோவில்) பிரம்ம தேவரே வந்து ரத்ன வேதிக்கு (இப்போதைய ஜகன்னாதர் கோவில்) மாற்றிக் கோவிலையும் ஸ்தாபித்தார் என்பதும், வேத மந்திரங்களுடன் ஆகமச் சடங்குகளை ரிஷி பரத்வாஜர் முடித்தார் என்பதும், வரலாறு. இன்றும் பூரியின் ரத யாத்திரையின்போது மூன்று ரதங்களும் ஜகன்னாதர் கோவிலிலிருந்து குண்டி(ச்)சா தேவி கோவிலுக்கு வருகை புரிகின்றன. குண்டி(ச்)சா கோவில், இந்திரத்யும்னனின் ராணியை நினைவில் வைத்து நிறுவப்பட்ட கோவில்.

சடங்குகள் முடிந்தபோது இருந்த உருவங்களின் உக்கிரப் பார்வை, பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்க கருணைப் பார்வையாக மாறியதாகச் சொல்லப்படுகிறது. இறைவரின் விருப்பப்படி அவ் உருவங்களுக்கு இந்திரத்யும்னன் ஆடை அணிவித்ததாகவும் ஒரு குறிப்பிருக்கிறது.

இந்திரத்யும்னனின் இறையுணர்வு கடவுளை மகிழ்விக்க, அவர் அவனுக்கு வரம்தர விரும்புகிறார். இந்திரத்யும்னனோ மக்களுக்குச் சேரவேண்டிய பொதுச் சொத்து, வாரிசுரிமையில் மூழ்கிவிடக்கூடாது என்ற கவலையில், சந்ததிகளே வேண்டாம் என இறைஞ்சுகிறான். இன்றும் (மார்கழி_நவம்பர்_டிசம்பர்) மார்கசிரா மாதத்தில் அமாவாசை நாளன்று ஜகன்னாதர், தானே ஒரு புத்திரனாக இந்திரத்யும்னனுக்கு பிண்டம் வழங்குகிறார்.

ஜகந்நாத தர்மம்

ஜகநாதர் தாரு பிரம்மமாக துதிக்கப்படுகிறார். வேப்ப மரத்தால் உருவம் ஆக்கப்பட்டது. அந்தப் புனிதம் வெறும் மரத்தால் மட்டும் வந்ததல்ல. யாரும் கண்டிராத பொருள் அந்த உருவத்தின் குழி ஒன்றில் புதைக்கப்பட்டிருக்கிறது. அதுவே பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது. (உருவங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. அப்போது கண்கள் கட்டப்பட்ட சேவகர்கள் இந்தப் பொருளைப் புது உருவத்தில் புதைக்கின்றனர்.) இந்த பிரம்மத்தை தன்னகத்தே வைத்திருப்பதால் இது தாரு பிரம்மம் என அழைக்கப்படுகிறது. வரலாற்றில் பல படையெடுப்புகளில் பூரி கோவிலுக்கு இடையூறுகள் நேர்ந்திருந்தாலும், இந்தப் பொருள் எவரும் தொட்டதுமில்லை, இந்தப் பொருள் அழிந்ததுமில்லை.

அருள்மிகு அழகுராயப்பெருமான், இருகாலூர்

அருள்மிகு அழகுராயப்பெருமான், இருகாலூர், ஈரோடு மாவட்டம்

கொங்கு வள நாட்டின் ஒரு பகுதியான, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் வட்டத்தில் உள்ளது இருகாலூர் கிராமம். இங்கு கோயில்கொண்டு எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ அழகுராயப்பெருமான்.

இருகாலூரின் சிறப்பு

புராண காலத்திலிருந்தே இவ்வூர் இருந்ததாக செவிவழிச் செய்தி. கரிகாற் சோழனால் ஆரையநாடு என்று அழைக்கப்பட்டு வந்த நாட்டின் வடபகுதியாகும் இது.

இவ்வூர் நான்கு மாடங்களுடன் இருந்ததாகவும், பல சமூக மக்களும் வாழ்ந்து வந்ததாகவும், பெரிய வர்த்தக தலமாகவும் விளங்கியதாகவும், இவ்வூரைச் சுற்றிலும் பழைமைவாய்ந்த அம்மன் கோயில், புராதனச் சிவன்கோயில், பிரசித்திபெற்ற பொன்காத்த ஐயன் கோயில் ஆகியவை அமைந்திருந்தனவாம்.

பெயர்க் காரணம்:

இராமரும் இலட்சுமணரும் சீதாதேவியைத் தேடிவரும்போது, நீலகிரி வழியாக கோத்தகிரி, கீழ்க் கோத்தகிரியைத் தாண்டி சோளுர் மட்டம் வந்ததாகவும் தலவரலாறு தெரிவிக்கிறது. அங்கு ஸ்ரீராமர் பாதம் இருப்பதால் தற்போது (ஸ்ரீ சருகுரங்கர்) கோயிலுக்குப் புரட்டாசி 1, 3, 5வது வாரங்களில் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர். ஸ்ரீராமபிரானின் இரு திருப்பாதங்கள் (கால்கள்) பதிந்ததால் இருகாலூர் என இக்கிராமம் அழைக்கப்பட்டு வந்ததாம்.

மேலும், இத்திருத்தலம் இரண்டு கால்வாய்களால் சூழப்பட்டு இருப்பதால் இருகாலூர் என அழைக்கப்படுவதாகப் பல விளக்கங்கள் கூறப்பட்டாலும், ஸ்ரீமந் நாராயணனின் இரு திருப்பாதங்கள் இவ்வூரில் பட்டுப் புனிதமாக விளங்கியதாலேயே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இத்தலம், இயற்கையின் சீற்றத்தால் தற்போது வறட்சி மிகுந்த குக்கிராமமாகத் உள்ளது.