அருள்மிகு அழகுராயப்பெருமான், இருகாலூர்

அருள்மிகு அழகுராயப்பெருமான், இருகாலூர், ஈரோடு மாவட்டம்

கொங்கு வள நாட்டின் ஒரு பகுதியான, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் வட்டத்தில் உள்ளது இருகாலூர் கிராமம். இங்கு கோயில்கொண்டு எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ அழகுராயப்பெருமான்.

இருகாலூரின் சிறப்பு

புராண காலத்திலிருந்தே இவ்வூர் இருந்ததாக செவிவழிச் செய்தி. கரிகாற் சோழனால் ஆரையநாடு என்று அழைக்கப்பட்டு வந்த நாட்டின் வடபகுதியாகும் இது.

இவ்வூர் நான்கு மாடங்களுடன் இருந்ததாகவும், பல சமூக மக்களும் வாழ்ந்து வந்ததாகவும், பெரிய வர்த்தக தலமாகவும் விளங்கியதாகவும், இவ்வூரைச் சுற்றிலும் பழைமைவாய்ந்த அம்மன் கோயில், புராதனச் சிவன்கோயில், பிரசித்திபெற்ற பொன்காத்த ஐயன் கோயில் ஆகியவை அமைந்திருந்தனவாம்.

பெயர்க் காரணம்:

இராமரும் இலட்சுமணரும் சீதாதேவியைத் தேடிவரும்போது, நீலகிரி வழியாக கோத்தகிரி, கீழ்க் கோத்தகிரியைத் தாண்டி சோளுர் மட்டம் வந்ததாகவும் தலவரலாறு தெரிவிக்கிறது. அங்கு ஸ்ரீராமர் பாதம் இருப்பதால் தற்போது (ஸ்ரீ சருகுரங்கர்) கோயிலுக்குப் புரட்டாசி 1, 3, 5வது வாரங்களில் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர். ஸ்ரீராமபிரானின் இரு திருப்பாதங்கள் (கால்கள்) பதிந்ததால் இருகாலூர் என இக்கிராமம் அழைக்கப்பட்டு வந்ததாம்.

மேலும், இத்திருத்தலம் இரண்டு கால்வாய்களால் சூழப்பட்டு இருப்பதால் இருகாலூர் என அழைக்கப்படுவதாகப் பல விளக்கங்கள் கூறப்பட்டாலும், ஸ்ரீமந் நாராயணனின் இரு திருப்பாதங்கள் இவ்வூரில் பட்டுப் புனிதமாக விளங்கியதாலேயே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இத்தலம், இயற்கையின் சீற்றத்தால் தற்போது வறட்சி மிகுந்த குக்கிராமமாகத் உள்ளது.

இருகாலூர், சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னர் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில் அவரது ஆட்சிப்பகுதியாக இருந்தது. ஒரு சமயம் ஆந்திர மாநிலத்திலிருந்து ஸ்ரீ ரங்கநாதரைத் தரிசிக்க, கிருஷ்ணதேவராயர் தனது ராணியுடனும், சேனை பரிவாரங்களுடனும் இந்தத் தலத்திற்கு வந்து தங்கியதாகவும், அப்போது மன்னருக்குக் கால்களில் ஊறல் போன்ற ஒருவித சருமநோய் இருப்பதையும், அந்த அரிப்பினால் மன்னர் மிகுந்த சிரமப்படுவதையும் கண்ட இக்கிராம பெரியவர்கள், “அரசே! இப்பூந்தோட்டத்தின் நடுவே முத்தாவதாரமாகக் கல்லிலே பிரபாவளியுடன் விளங்கி அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு அழகுராயப் பெருமானை மனமுருக வேண்டி, இந்த தல விருட்சமான பூவரசன் மரத்துப் பூவை இந்த பூமியின் மண்ணோடு (சாம்பலை) நன்கு அரைத்துப் பூசினால் உங்கள் நோய் விரைவில் குணமாகிவிடும் என்று அரசரிடம் கூற, அவரும் பெருமானை மனமுருக வேண்டி, பின் மேற்கண்ட மருத்துவத்தைச் செய்ய, அவருக்கு இரண்டு நாட்களில் நோய் குணமாயிற்று.

பின்பு தமது இருப்பிடம் திரும்பிய மன்னர், தமது அமைச்சர்களில் ஒருவரான மாதவைய்யாவிடம், இப்பெருமானுக்கு நன்றி செலுத்தும் வகையில், “பூஜை செய்ய அர்ச்சகர் ஒருவரையும் உற்சவமூர்த்தியாக உலோகச் சிலைகளையும் அன்பளிப்பாகக் கொடுத்துவிடுங்கள்எனக் கூற, அவரும் அவ்வாறே செய்துள்ளார்.

இத்திருக்கோயில் அர்ச்சகப் பெருமக்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமமான உண்டேபள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் ஆவார். சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவ வம்சத்தாரின் (ஸ்தலத்தார்) வாரிசுகளில் ஒருவரான வெங்கடகுமாரன் என்பவரிடம், ஸ்ரீபாமா, ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் உற்சவ சிலைகளையும் சீதனமாகக் கொடுத்து,”இருகாலூரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ அழகுராயப் பெருமானுக்குப் பூஜா கைங்கரியங்கள் செய்து வாருங்கள்என அழைத்துக்கொண்டு வந்துவிட்டதாகவும் இத்தல வரலாறு கூறுகிறது.

இதற்குச் சான்றாக, உற்சவர் (சிலை) ஸ்ரீகிருஷ்ணரின் ஆதாரபீடத்தில்,”இந்த மாதவப் பெருமாளை உண்டேபள்ளி புஜ்ஜி வெங்கடகுமாருடுகு (சீதனமாக) பிரபாவதி மன்மத சம்வச்சரம், பாரத்பதி (புரட்டாசி) மாதம் சுக்கில பட்ச தினம் மாதவய்யா இச்சினதிஎனத் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதை இன்றும் காணலாம். மேலே குறிப்பிட்டுள்ள வெங்கடகுமாருடு என்பவரின் வாரிசுகள்தான் இத்திருக்கோயிலுக்கு இன்றும் திருவாராதனம் செய்து வருகின்றனர்.

மைசூர் மன்னர் ராஜராஜ கிருஷ்ணசாம்ராஜ உடையார் அவர்கள், அவரது பரிவாரங்களுடன் மைசூரிலிருந்து திருச்செங்கோடு சென்று அர்த்தநாரீஸ்வரரைத் தரிசித்துவிட்டு, காரமடை தேர்த்திருவிழாவிற்குச் செல்லும்போது இந்தக் கிராம வழியாகத்தான் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி வரும்போதெல்லாம் இங்கு தங்கி ஸ்ரீஅழகுராயப் பெருமானை வழிபட்டுச் செல்வாராம். இத்திருக்கோயிலில், ஸ்ரீரங்கம் பெரியகோயிலின் ஆகம முறையான பாஞ்சராத்திர ஆகமப்படியும், ஸ்ரீவைணவ தென்கலைச் சம்பிரதாயப்படியும் பூஜா கைங்காரியங்கள் நடைபெற்று வருகின்றன.

இத்திருக்கோயிலுக்கு இடப்பக்கம் வடகிழக்கில் பிரம்மதீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்தால்தான் எம்பெருமானுக்குத் தினசரி திருமஞ்சனம் செய்யப்படுகின்றது. இவ்வூரிலிருந்து வடக்கே சுமார் 12 கி.மீ. தூரத்தில் பவானி நதி ஜீவநதியாக ஓடுகிறது. இந்நதியிலிருந்து சிறப்பு உற்சவக் காலங்களில் தீர்த்தம் கொண்டுவரப்பட்டு எம்பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

தல விருட்சமாகப் பூவரசமரத்தை முன்னோர் வைத்துப் போற்றி வந்தனர். இப்போதும் பூவரசமரமே தல விருட்சமாக இருந்து வருகிறது.

கர்ப்பக்கிரகத்தில் முத்தாவதாரமாக ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீஅழகுராயப் பெருமான் கிழக்கு முகமாக, கரிகாற்சோழன் காலத்தில் உண்டாக்கப்பட்ட கல்லிலான பிரபாவளியுடன் (சங்கு, சக்கரம், ஆதிசேஷன்) உள்ள நிலையில் காட்சி தருகிறார்.

ஸ்ரீஅழகுராயப் பெருமான் (மூலவர்), வலப் புறத்தில் ஸ்ரீநம்மாழ்வாருடனும் இடப்புறத்தில் கோதை நாச்சியாரின் (ஸ்ரீ ஆண்டாள்) தந்தையுமாகிய ஸ்ரீபெரியாழ்வாருடனும் அமர்ந்த திருக்கோலத்தில் வணங்கும் நிலையில் கிழக்கு நோக்கி அருள்பாலித்துக் கொண்டுள்ளார்.

இத்திருக்கோயிலின் மிகவும் சிறப்பு அம்சமாக விளங்குவது, சிறிய திருவடிகள் என வைணவர்களால் அழைக்கப்படும் அஞ்சனை மைந்தன் ஸ்ரீஆஞ்சநேயர், உற்சவர் ஆதிசேஷனுடன் கூடிய சுதர்சனத்தின் (சக்கரம்) நடுவில் வலக்கை ஆசீர்வதித்தபடியும், இடக்கை இடது தொடையிலும் சௌகந்திகா மலரைப் பற்றிக்கொண்டு கையூன்றியும், வால் வலமிருந்து இடம் சென்று, பின் வலப் பக்கம் திரும்பியநிலையிலும், வாலின் நுனிபாகத்தில் மணியுடனும், வடக்கு முகமாக இருந்து அருள்பாலிக்கின்றார். இருகால்களிலும் பாதக் கொறடுடன் இருக்கின்றார். மேலும் அவரது இருகால்களின் பாதங்களின் நடுவே மயில் ராவணனைச் சம்ஹாரம் செய்தபின்,”அரக்கர்களை அழித்துவிட்டேன். இனி நீங்கள் சகல சௌபாக்கியங்களுடன் வாழுங்கள்என்று கூறுவதுபோல் ஆசீர்வதித்து அருள்பாலிக்கும் அம்சமாக உள்ளார். இந்த ஆஞ்சநேயருக்கு மார்கழி மாதம் அனுமந்த ஜெயந்தியன்று சிறப்புத் திருமஞ்சனம் செய்து கொண்டாடுகின்றனர். மாலையில் உற்சவர் திருவீதி உலா வருகின்றார்.

புரட்டாசி மாதம் 1, 3, 5வது வாரங்கள் மற்றும் விஜயதசமியன்றும் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறும். மற்றும் கார்த்திகை தீபம், மார்கழி மாதம் 30 தினங்களும், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி போன்ற திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

இத்துணை சிறப்புவாய்ந்த இத்திருக்கோயில் வளாகத்தில் புதிதாக விநாயகர், ஆஞ்சநேயர், ஆண்டாள் ஆகிய சந்நிதிகள் திருப்பணி நடைபெற்று வருகின்றது.

வழிகாட்டி :

அவிநாசியிலிருந்து சேவூர் வழியாக கோபி செல்லும் வழியில் நம்பியூர் உள்ளது. நம்பியூரிலிருந்து மேற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், புஞ்சைப் புளியம்பட்டியிலிருந்து கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும் இருகாலூர் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *