அருள்மிகு ரகுநாத் மந்திர், திருக்கண்டங்கடிநகர்

அருள்மிகு ரகுநாத் மந்திர், திருக்கண்டங்கடிநகர், உத்ராஞ்சல்.

தேவப்ரயாக் (திருக்கண்டங் கடிநகர்) பத்ரி நாத் க்ஷேத்ர மாகாத்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவப்ரயாகில் உள்ள ரகுநாத் மந்திர் ஆழ்வார்களால் பாடப்பெற்ற திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. தேவப்ரயாகை கடல் மட்டத்திலிருந்து 1600அடி உயரத்தில், ரிஷிகேஷிலிருந்து 71கி.மீ. தூரத்தில் ரிஷீகேஷ்பத்ரிநாத் பஸ் பாதையில் உள்ளது. பத்ரிநாத் செல்லும் யாத்திரிகர்களுக்கு இமாலய க்ஷேத்ரத்தில் முதலாவது திவ்ய க்ஷேத்ரமாக விளங்குகிறது. பெரியாழ்வாரால் பாடல்பெற்ற இந்த கோயில், தீர்த்தம் இரண்டுமே மகிமை வாய்ந்தவை.

சங்கமத்திலிருந்து 104படிகள் ஏறி ரகுநாத் மந்திரை (கோயிலை) அடைகிறோம். பகவான் ஸ்ரீராமன் இங்கு தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. மகர சங்கராந்தி, வசந்த பஞ்சமி காலங்களில் இங்கு பெரிய விழா எடுக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இங்கு தரிசனம் செய்யலாம். அலக்நந்தா பாகீரதி சங்கமஸ்தானமான தேவப்ரயாகில் இருந்து தான் கங்காநதி என்று அழைக்கப்படுகிறது. தமிழில் இது திருக்கண்டம் கடிநகர் (ஸ்ரீகண்ட க்ஷேத்ரம்) என்று கூறப்படுகிறது.

கோயில் ரகுநாத் மந்திர்
மூலவர் புருஷோத்தமன், நீலமேகப் பெருமான், ஸீதாஸமேத ரகுநாத்ஜீ
தாயார் புண்டரீகவல்லி
தீர்த்தம் மங்கள தீர்த்தம், கங்கை நதி
விமானம் மங்கள விமானம்
ஊர் திருக்கண்டம் கடிநகர்(தேவப்ரயாக்)
மாநிலம் உத்ராஞ்சல்

மங்களாசாஸனம் பெரியாழ்வர் – 11பாசுரங்கள்

“வடதிசை மதுரை, சாளக்கிராமம்,

வைகுந்தம், துவாரை, அயோத்தி

இடம் உடைவதரி இடவகை உடைய

எம் புருடோத்தமன் இருக்கை.”

“கங்கையின் கரைமேல் கை தொழநின்ற

கண்டம் என்னும் கடிநகரே”

“பொங்கு ஒலி கங்கைகரை மலி கண்டத்து

உறை புருடோத்தமன்.”(பெரியாழ்வார்)

தேவப்ரயாக் வாசிகள், பெரும்பாலும் ஆறு ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆந்திராவிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என்று சொல்லுகிறார்கள்.

பண்டைய காலத்திலிருந்தே நம்நாட்டு மக்கள் பக்தியால் தூண்டப்பட்டு, பாதயாத்திரையாகவே நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று அங்கு பகவானை தரிசித்து ஆத்ம சாந்தி அடைந்துள்ளனர்.

தற்காலம் போல, போக்குவரத்து மேலும் இதர வசதிகள் இல்லாத சமயத்தில், பல இன்னல்களை சமாளித்து, புனித யாத்திரை செய்து இங்கு வந்துள்ளனர்.

அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில், திருப்புள்ள பூதங்குடி

அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில், திருப்புள்ள பூதங்குடி– 612301 தஞ்சாவூர் மாவட்டம்.+91- 94435 25365 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன்
தாயார் பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி
தல விருட்சம் புன்னை மரம்
தீர்த்தம் ஜடாயு தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பூதப்புரி
ஊர் திருப்புள்ள பூதங்குடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது கழுகுகளின் அரசனான ஜடாயு அவனிடம் போரிட்டார். அப்போது ஜடாயுவை ராவணன் வாளால் வெட்டினான். ஜடாயு ராமா, ராமாஎன முனகியபடி குற்றுயிராக கிடந்தார். அந்த வழியே வந்த இராம, இலட்சுமணர்கள் முனகல் சத்தத்தை கேட்டு அருகில் சென்று பார்த்தனர். ஜடாயு, ராவணன் சீதையை கவர்ந்து சென்ற விஷயத்தை கூறிவிட்டு உயிர் துறந்தார். இதைக்கண்டு வருந்திய இராமன் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார். ஈமக்கிரியை செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால் மானசீகமாக சீதையை மனதால் நினைத்தார். உடனே ராமனுக்கு உதவிபுரிவதற்காக சீதையின் மறு அம்சமாகிய பூமாதேவி காட்சியளித்தாள். அவளோடு இணைந்து ஜடாயுவிற்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டது.