அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை

அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கழுகாசல மூர்த்தி (முருகன்)
அம்மன் வள்ளி, தெய்வானை
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கழுகு மலை
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

இராவணனால் ஜடாயு கொல்லப்பட்டார். இராமனால் இறுதிக் காரியங்கள் செய்யப்பட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார். இ‌தை அனுமார் மூலம் அறிந்த ஜடாயுவின் தம்பி சம்பாதி என்ற கழுகு, இராமனிடம், தன்னால் என் சகோதரனுக்கு ஈமக்கிரியை செய்ய இயலாமல் போயிற்றே; இதனால் ஏற்பட்ட பாவம் எப்‌போது தீரும்? எங்கு போய் இதைக் களைவது?” என்றார். அதற்கு இராமன், “நீ கஜமுகபர்வதத்தி்ல் உள்ள தீர்த்தத்தில் நீராடி, பூஜை செய்து வந்தால் இதற்கான விடை கிடைக்கும்என்றார். இதன்பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. சம்பாதி முனிவர் கஜமுக பர்வதத்திலேயே தங்கியிருந்தார். அப்‌போது, முருகன் சூரபத்மனை வதம் செய்வதற்காக இவ்வழியாக வந்தார்.

அந்நேரத்தில் முனிவர்களையும், மக்களையும் சூரபத்மனின் தம்பி தாரகாசூரன் துன்புறுத்திக் கொண்டிருந்தான். முருகன் தாரகாசூ‌ரனை ஐப்பசி பஞ்சமி திதியில் வதம் செய்தார். வதம் செய்த களைப்பு தீர, கஜமுக பர்வதத்தில் ஓய்வெடுத்தார். அவருக்கு தங்கும் இடம் தந்தார் சம்பாதி. அத்துடன் சூரபத்மனின் இருப்பிடத்தையும் காட்டினார். இதனால் மகிழ்ந்த முருகன் சம்பாதிக்கு முக்தி தந்தார். இதனால் சம்பாதி தன் சகோதரனுக்கு ஈமக்கிரி‌யைகள் செய்ய முடியாத பாவம் நீங்கியது. கழுகு முனிவரான சம்பாதி வசித்த கஜமுக பர்வதமே அவரது பெயரால் கழுகுமலைஎனப் பெயர் பெற்றது.

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435- 245 4421 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல்11 மணி வரை, மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுவாமிநாதர், சுப்பையா
அம்மன் வள்ளி, தெய்வானை
தல விருட்சம் நெல்லிமரம்
தீர்த்தம் வஜ்ர தீர்த்தம், குமாரதாரை, சரவண தீர்த்தம், நேத்திர குளம், பிரம்ம தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவேரகம்
ஊர் சுவாமிமலை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம்என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப்பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்லமுடியவில்லை என்பதால் அவனுடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான் குட்டினார். கீழே விழுமாறு தம் திருவடி கொண்டு உதைத்து பிரம்மனை சிறையில் அடைத்தார். பின்பு படைப்பு தொழிலை முருகனே செய்தார். பிரம்மன் சிறையில் இருப்பதை நினைத்து வருந்திய திருமால் சிவபெருமானிடம் சொல்லி விடுதலை கிடைக்க வேண்டுகிறார். சிவபெருமானும் முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும்படி கூற, “தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லைஎன்று முருகன் விடுதலை செய்தார்.

இதை பார்த்து உளம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு பிரம்மனுக்கே தெரியாத பிரணவ மந்திரத்தை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க, முருகனும் எல்லோரும் அறியக் கூறக் கூடாதே என்று சொல்லி சிவபெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார். இந்நிகழ்ச்சி நடந்த தலமே இந்த சுவாமிமலைத் திருத்தலம் என்று தல வரலாறு கூறுகிறது.