அருள்மிகு சனீஸ்வரர் கோயில், கல்பட்டு

அருள்மிகு சனீஸ்வரர் கோயில், கல்பட்டு, விழுப்புரம் மாவட்டம்.

+91- 4146 – 264 366, 97868 65634 , 94451 14881

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சனீஸ்வரர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கல்பட்டு
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு

சனீஸ்வரருக்கு ஒரு கால் ஊனம் என்பது அறிந்த விஷயம். தனக்கு கிடைக்காத சாகாவரம் தனக்கு பிறக்கப்போகும் மகன் இந்திரஜித்திற்காவது கிடைக்க வேண்டும் என இராவணன் விரும்புகிறான். இதற்காக கடும் தவம் செய்கிறான். தேவர்கள் கவலை கொள்கின்றனர். கிரகங்களெல்லாம் இராவணனுக்கு அடிமைப்பட்டு கிடக்கின்றன. இந்நிலையில், சனியின் பார்வை குழந்தையின் மீது பட வழியே இல்லாமல் போகிறது. நாரதர் சனீஸ்வரனிடம், “எப்பாடு பட்டேனும் குழந்தையை ஒருமுறை பார்த்து விடுஎன்கிறார். அதன்படி, குழந்தை பிறக்கவும் சனீஸ்வரன் பார்த்து விடுகிறார். பாடுபட்டு செய்த தவம் வீணாகி விட்டதே என்ற ஆத்திரத்தில் சனியின் காலில் அடித்து காலை ஒடித்தான் இராவணன். இதன்பிறகு சனி நொண்டிக்கொண்டே நடக்க வேண்டியதாயிற்று. அவரது கால் கட்டையானது என்றும் சொல்வர். இதன்படி சனீஸ்வரரின் ஒரு கால் காக வாகனத்தில் இருப்பது போல சிலை வடிக்கப்பட்டுள்ளது.

பிரும்மானந்த சுவாமியால் கட்டப்பட்டுள்ள இக்கோயில் ஒரு பிரார்த்தனைத் தலமாகும். சனீஸ்வரன் சன்னதி முன்பு அமர்ந்து அமைதியாக பிரார்த்தனை செய்து வர வேண்டும். நுழைவிடத்தில் உள்ள பிரணவ கணபதி சிலை இங்குள்ள ஒரு குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகும். தேசிங்குராஜா வணங்கிய கணபதியாக இது கருதப்படுகிறது. கோயிலுக்குள் இருக்கும் விநாயகர் வலம்புரி விநாயகர் ஆவார்.

அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர்

அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர், தேனி மாவட்டம்.

+91- 97895 27068, 94420 22281 (மாற்றங்களுகுட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சனீஸ்வரன்
தல விருட்சம் விடத்தை
தல புஷ்பம் கருங்குவளை
தல இலை வன்னிஇலை
வாகனம் காகம்
தானியம் எள்
பழமை 1000 வருடங்களுக்கு முன்பு
புராணப் பெயர் செண்பகநல்லூர்
ஊர் குச்சனூர்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

தினகரன் என்ற மன்னன் குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் வேண்டினான். அப்போது அசரீரி ஒன்று உன் வீட்டுக்கு ஒரு பிராமணச் சிறுவன் வருவான். அவன் வந்த பிறகு உனக்கு குழந்தை பிறக்கும் என்றது. அதுபடியே வந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயரிட்டு வளர்த்தான். அரசிக்கும் குழந்தை பிறந்து சதாகன் என்ற பெயருடன் வளர்ந்தான். புத்திசாலியான வளர்ப்பு மகன் சந்திரவதனனுக்கே முடி சூட்டப்பட்டது. இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்கு சென்று இரும்பால் சனியின் உருவத்தை படைத்து வழிபட்டான். “வளர்ப்பு மகனான எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு துன்பம் தராதே அத்துன்பத்தை எனக்கு கொடுஎன்று வேண்டினான். சனீஸ்வர பவகவான் அவனது நியாயத்தை உணர்ந்து ஏழரை நாழிகை மட்டும் அவனை பிடித்துக்கொள்வதாகக் கூறி பல கஷ்டங்களைக் கொடுத்தார். பின்பு அவன் முன் தோன்றி உன்னைப்போன்ற நியாயஸ்தர்களைப் பிடிக்க மாட்டேன் என்றும் இப்போது உன்னை பிடித்தற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை என்று கூறி மறைந்தார். பிறகு சந்திரவதனன் இவ்வூரில் குச்சுப்புல்லால் கூறை வேய்ந்து கோயில் எழுப்பினான் என வரலாறு கூறகிறது. இதுவே குச்சனூர் என பெயர் வழங்க காரணமாயிற்று.

சனிபகவானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்து நீங்கினதாக வரலாறு பெற்ற தலம். சனிபகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஒரே தலம். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுதல் மிகவும் சிறப்பு.