Monthly Archives: February 2012

அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில், ஏரிக்குப்பம்

அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில், ஏரிக்குப்பம், களம்பூர் போஸ்ட், திருவண்ணாமலை மாவட்டம்.

+91 4173 – 229 273, 93602 23428

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் காலை 6 – இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் எந்திர சனீஸ்வரர்
தீர்த்தம் பாஸ்கர தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ஏரிக்குப்பம்
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவானை, சிலை வடிவில் தரிசித்திருப்பீர்கள். வேலூர் அருகிலுள்ள ஏரிக்குப்பத்தில் இவர் யந்திரம் பொறித்த, சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். பல்லாண்டுகளுக்கு முன், இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவர் இங்கு சனீஸ்வரருக்கு கோயில் எழுப்ப விரும்பினார். சனீஸ்வரர், ஈஸ்வர பட்டம் பெற்றவர், என்பதன் அடிப்படையில் எந்திரங்களை பிரதிஷ்டை செய்து, சிவலிங்கத்தின் பாண வடிவிலேயே சிலை அமைத்து, கோயில் எழுப்பினார். பல்லாண்டுகளுக்குப்பின் கோயில் அழிந்து, சுவாமி சிலை மட்டும் திறந்தவெளியில் இருந்தது. பின், பக்தர்கள் இங்கு சுவாமி இருந்த இடத்தில் கோயில் எழுப்பினர். எந்திரங்களுடன் இருப்பதால் இவருக்கு எந்திர சனீஸ்வரர் என்றே பெயர் ஏற்பட்டது.

மூலஸ்தானத்தில் தாமரை பீடத்தின் மீது, இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் அமைந்த சிவலிங்க அமைப்பில் சனீஸ்வரர் காட்சியளிக்கிறார். சிலையின் உச்சியில் சிவனைப் போலவே சூரியன், சந்திரன் உள்ளனர். நடுவே காகம் இருக்கிறது. இலிங்க பாணத்தின் மத்தியில் அறுகோண அமைப்பிலுள்ள ஷட்கோண எந்திரம்உள்ளது. இச்சிலையில் நமசிவாய என்னும் சிவமந்திரம், பீஜாட்சர மந்திரம், லட்சுமிகடாட்ச மந்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில், திருச்சிற்றம்பலம்

அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில், திருச்சிற்றம்பலம், பட்டுக்கோட்டை தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 98943 24430 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் எமதர்மர்
தீத்தம் எமதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருச்சிற்றம்பலம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

ஒருசமயம் தேவர்கள், சிவபெருமானை வேண்டச்சென்ற போது, அவர் நிஷ்டையில் இருந்தார். எனவே, மன்மதனை வரவழைத்து அவன் மூலமாக சிவனின் தவத்தை கலைத்தனர். இதனால் கோபம் கொண்ட சிவன், மன்மதனை அழித்தார். பின் இரதிதேவியின் வேண்டுதலுக்காக இத்தலத்திற்கு அருகிலுள்ள ஓர் தலத்தில் உயிர்பித்தார். அப்போது எமதர்மன், சிவனிடம் தனக்கு அழிக்கும் பணி கொடுத்திருக்கும்போது, அதனை செய்ய தனக்கு உத்தரவிடும்படி வேண்டினார். சிவனும் அவருக்கு அருள்புரிந்தார். இதன் அடிப்படையில் பிற்காலத்தில் இவ்விடத்தில் எமதர்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. இவருக்கு அருள்செய்த சிவனுக்கு இங்கிருந்து சற்று தூரத்தில் தனிக்கோயில் இருக்கிறது. இக்கோயிலில் எமதர்மன் தனிக்கோயில் மூர்த்தியாக, முறுக்கிய மீசையுடன் எருமை மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். நீல நிற ஆடை அணிந்தபடி காட்சி தரும் இவர் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம். கைகளில் பாசக்கயிறு, ஓலைச்சுவடி மற்றும் கதை வைத்திருக்கிறார். இவருக்கு கீழே சித்திரகுப்தனும், எமதூதரும் இருக்கின்றனர். இவருக்கு பச்சரிசி சாதம் மற்றும் கனிகள் நைவேத்யம் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. அருகில் பாம்பாட்டி சித்தர், பூரணா, புஷ்கலாவுடன் அய்யனார் ஆகியோரும் இருக்கின்றனர். ஆடி மாதத்தில் நடக்கும் விழாவின்போது, பத்து நாளும் இவருக்கு இராஜஅலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவர் வேட்டைக்குச் செல்வதாக ஐதீகம். இவரது உக்கிரத்தை குறைப்பதற்காக நேரே இராஜகணபதியும், அவருக்கு பின்புறத்தில் பால தண்டாயுதபாணியும் இருக்கின்றனர். எமன், தர்மத்தின் வடிவமாக இருப்பவர். சிறிதாக தவறு செய்தாலும், அவர்களை உடனே தண்டித்துவிடுவார்.