Monthly Archives: November 2011

பிரளயநாதசுவாமி திருக்கோயில், சோழவந்தான்

அருள்மிகு பிரளயநாதசுவாமி திருக்கோயில், சோழவந்தான், மதுரை மாவட்டம்.

+91- 4542- 258 987

காலை 6 மணி முதல்11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரளயநாதர்
அம்மன் பிரளயநாயகி
தல விருட்சம் வில்வம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சோழவந்தான்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

சில நூற்றாண்டுகளுக்கு முன், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் ஒருவர், காசியிலிருந்து ஒரு இலிங்கம் கொண்டுவந்து, வைகை ஆற்றின் கரையில் பிரதிஷ்டை செய்து வணங்கினார்.

உலகம் அழியும் காலத்தில் (பிரளயம்) ஏற்படுவது போல கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பயந்த மக்கள் சிவனைப் பிரார்த்தனை செய்தனர். சிவன் இரக்கம் கொண்டு வெள்ளத்தை நிறுத்தினார். பிரளயத்தில் காத்தருளியவர் என்பதால் இவர், “பிரளயநாதர்என்று பெயர் பெற்றார்.

பெரியாவுடையார் கோயில், மானூர்

அருள்மிகு பெரியாவுடையார் கோயில், மானூர், திண்டுக்கல் மாவட்டம்.

+91- 4545 – 242 551

காலை 8 மணி முதல் மாலை 6 மணி மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பெரியாவுடையார், (பிரகதீஸ்வரர்)
உற்சவர் நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர், பிரதோச தாண்டவர்
தல விருட்சம் கடம்பமரம்
தீர்த்தம் சண்முகநதி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மானூர்
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

பழனி நகரில் எழுந்தருளிய பெரியநாயகிக்கு நாயக்கர் காலத்தில் கோயில் கட்டப்பட்டது. ஆனால் சிவபெருமானோ தன்னை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட திருவிளையாடல் புரிந்தார். விராட மகாராஜாவுக்கு வேட்டையாடுவது என்றால் மிகவும் விருப்பம். ஒருநாள் சிவன் மான் உருவம் கொண்டு மன்னன் முன்பு தோன்றினார். மானின் அழகில் மயங்கிய மன்னன் அதைப்பிடிக்கத் துரத்தினான். மானும் மன்னின் பிடியில் சிக்காமல் இலிங்க வடிவில் வீற்றிருக்கும் புதர் அருகில் வந்து மறைந்து கொண்டது.

மானைக் காணாததால் கோபம் கொண்ட மன்னன் அம்பெய்தான். புதரில் உள்ளே ஒரு புற்று இருந்தது. அங்கு ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அம்பு எய்ததும், புற்றிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. பயந்து போன மன்னன் புதரை விலகி பார்த்த போது, அம்பு புதருக்குள் இருந்த புற்றுக்குள் இருந்த இலிங்கத்தின் மீது பட்டு ரத்தம் வடிந்தது. இறைவனிடம், அறியாமல் செய்த தவறுக்கு மன்னிக்கும் படி வேண்டினான் மன்னன். இறைவனும் அசரீரியாக தம்மை வெளிப்படுத்தவே இப்படி திருவிளையாடல் புரிந்தோம் என்று கூறினார். இறைவனின் கட்டளைப்படியே மன்னனும் அந்த இடத்தில் கருவறை அமைத்து பூஜை செய்து வந்தான். மன்னன், மானைத்துரத்தி வந்ததால் இந்த ஊர் மானூர் ஆனது. அம்பு பட்ட தழும்பை, இலிங்கத்தின் மேல் இப்போதும் காணலாம்.

கைலாயத்தில் ஞானப்பழம் முருகனுக்கு கிடைக்காமல் விநாயகருக்கு கிடைத்து விடுகிறது. இதனால் கோபம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விடுகிறார். முருகனைத் தேடிக்கொண்டு சிவனும் சக்தியும் பூலோகத்தில் பழனி மலைக்கு அருகில் வந்து இறங்குகிறார்கள். அப்படி இறங்கிய இடத்தின் இயற்கை எழிலை கண்ட சிவன் அங்கேயே வீற்றிருந்து அருள்பாலிக்க நினைத்துவிட்டார். ஆனால் உமையவளோ தன் மகன் முருகனைக் காண பழனிக்கே செல்ல அனுமதிக்கும்படி சிவனிடம் வேண்ட சிவனும் சம்மதிக்கிறார். பிரிய மனமில்லாமல் நாயகி விடை பெற்றதால் அன்னை பிரியா நாயகிஎன்றும், விடை கொடுக்க மனமில்லாமல் சிவன் விடை கொடுத்ததால் பிரியாவிடையார்என்றும் அழைக்கப்பட்டார்கள். இதுவே காலப்போக்கில் மருவி பெரியாவுடையார் பெரியநாயகிஆனது. பார்வதி முருகனைத் தேடி சென்று விட்டதால் இங்கு அம்மனுக்கென தனி சன்னதி எதுவும் கிடையாது. இருந்தாலும் சக்தி வேறு சிவம் வேறு என இல்லாமல் இரண்டும் ஒன்றானதால் இங்குள்ள சிவனை வழிபட்டாலே சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும்.