Monthly Archives: November 2011

பரமசிவன் மலைக்கோயில், போடிநாயக்கனூர்

அருள்மிகு பரமசிவன் மலைக்கோயில், போடிநாயக்கனூர், தேனி மாவட்டம்.

+91-96008 35111

காலை 8.30 மணி முதல்12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பரமசிவன்
உற்சவர் பரமேஸ்வரன்
தல விருட்சம் வேம்பு
தீர்த்தம் விஸ்வபிராமண தீர்த்தம்
ஆகமம் சிவ ஆகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தென்காசியம்பதி, போடையநாயக்கனூர்
ஊர் போடிநாயக்கனூர்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

ஒரு முறை இப்பகுதியில் வசித்த சிவபக்தர் தனக்கு குழந்தை வரம் வேண்டி, காசி, இராமேஸ்வரம் சென்று இறைவனை வழிபட்டார். இறைவனின் அருளால் அவருக்கு பிறந்த குழந்தை, நோய்வாய்ப்பட்டு திடீரென இறந்து போனது. இதனால் இறைவனின் மீது அவருக்கு ஏற்பட்ட வெறுப்பால், பூஜைப்பொருள்களை ஆற்றில் போட முடிவு செய்து விட்டு படுக்கச்சென்றார். அன்று இரவில் அவர் கண்ட கனவில் ஊருக்கு மேற்கே உள்ள மலையில் இருந்த துறவியுடன் இறந்துபோன தனது மகன் இருந்ததைக் கண்டார். உடன், அவர் தனது மகனை அழைக்க, அவன் தந்தையிடம் வராமல் துறவியிடமே சென்று படுத்துக்கொண்டான். தனது மகனைத் தன்னிடம் அனுப்பி வைக்கும்படி துறவியிடம் தந்தை கேட்க, அவன் தனக்கு சேவை செய்ய வந்தவன் என்றும், அவனைப் போன்று இன்னொரு மகன் அவருக்குப் பிறப்பான் என்றும் கூறினார். அப்போது, “என் மகனை சேவைக்காக எடுத்துக் கொண்ட தாங்கள் யார்?” எனத் துறவியிடம் அவர் கேட்டார். அச்சமயத்தில் மேற்கே உள்ள கூவலிங்கன் மலையில் நட்சத்திர வடிவில் ஜோதி தோன்ற, துறவி வடிவில் இருந்த பரமசிவன் பார்வதி சமேதராக காட்சி தந்தார். நடந்ததைப்பற்றி அவர் மறுநாள் காலையில் ஊர் மக்களிடம் கூற, மக்கள் அனைவரும் சிவன் காட்சி தந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு இரண்டு ஜோடி பாதச்சுவடுகளும் அதைச்சுற்றி மலர்களும் இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். அதன்பின், அங்கு கோயிலை எழுப்பி, தொடர்ந்து வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முன்பு பெரிய அளவில் இருந்த இக்கோயில் காலப்போக்கில் நந்தி சிலையுடன், இலிங்கம் போன்ற தோற்றத்துடன் சிறுகல்லாக உள்ள இடமாக மட்டுமே காட்சி தருகிறது. இத்தலம்,”தென்திருவண்ணாமலைஎன்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் பரமசிவனுக்கு திருத்தலம் அமைக்க முற்பட்டனர். அப்போது, சிவன் அங்கு சுயம்பு இலிங்கமாகவும், கோயிலின் பின்புறம் அமைந்துள்ள கூவலிங்க மலையில் தினமும் மாலையில் ஜோதி வடிவிலும் காட்சி தருகிறார். இவ்விடத்தில் தினமும் உச்சிகால பூஜை நடைபெறும் நேரத்தில் இத்தலத்திற்கு வரும் வெள்ளைக் கழுகு ஒன்று சுயம்புவிற்கு மேலே மூன்று முறை சுற்றிவிட்டுச் செல்வதாக நேரில் கண்ட பக்தர்களும், பூசாரிகளும் தெரிவிக்கின்றனர்.

இத்தலத்தின் வட கிழக்கில் மரக்காலிங்கம், தென்மேற்கில் ஜோதி லிங்கம், தென்கிழக்கில் மல்லிங்கேஸ்வரர், வடமேற்கே மேலசொக்கையா என நான்கு திசைகளிலும் சுயம்பு இலிங்கங்கள் மலைகளில் அமைந்துள்ளது. அத்துடன், மலைகளே இலிங்கம் போல காட்சி தருவது சிறப்பு. இங்கு பவுர்ணமி தோறும் பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள்.

சிவனுக்கு வலது புறத்தில் லட்சுமி நரசிம்மரும், இடது புறத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகனும், மலை அடிவாரத்தில் பாலகணபதியும் தனித்தனி சன்னதிகளில் இருந்து அருள்பாலிக்கின்றனர். இத்தலவிநாயகர் செல்வவிநாயகர் என்ற திருநாமத்தடன் அருள்பாலிக்கிறார். இங்கு இவைனுக்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைக்கின்றனர்.

திருவிழா:

சித்திரையில் முதல் வாரம், கார்த்திகையில் மகாதீபம், அன்னாபிசேஷம், மகாசிவராத்திரி ஆகிய நாட்களில் திருவிழா கொண்டாடப்படுகிறது. பிரதோஷம் மற்றும் சிவனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகிறது.

கோரிக்கைகள்:

இத்தலத்தில் வேண்டிக்கொள்ள, குழந்தை இல்லாதோருக்கு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன; திருமணத்தடை நீங்குகிறது; ஐஸ்வர்யங்கள் பெருகி, தொழில் விருத்தி அடைகிறது; கால் சம்மந்தப்பட்ட நோய்கள் தீருகின்றன; தோஷங்கள் விலகுகின்றன என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

ஆண் குழந்தை வரம் பெற்றோர் பரமசிவனுக்கு நைவேத்யம் படைத்து சிறப்பு அபிசேஷம் செய்து, குழந்தைகளை கோயிலில் உள்ள ஊஞ்சலில் தாலாட்டி வழிபடுகின்றனர். தொழில் விருத்தியடைந்தோர் லட்சுமி நரசிம்மரை பிரதோஷ காலங்களில் சிறப்பு வழிபாடு செய்து, பூஜை செய்கின்றனர்.

பாபநாசநாதர் திருக்கோயில், பாபநாசம்

அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 223 268

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பாபநாசநாதர்
அம்மன் உலகம்மை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் இந்திரகீழ க்ஷேத்திரம்
ஊர் பாபநாசம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

கைலாயத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்த போது வடக்கே தாழ்ந்து, தெற்கே உயர்ந்தது. பூமியை சமப்படுத்துவதற்காக, அகத்தியரைப் பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். சித்திரை மாதப்பிறப்பன்று அவருக்கு தனது திருமணக் கோலத்தை காட்டியருளினார். கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரராக அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் சிவன் இருக்கிறார். அருகிலேயே அகத்தியரும் அவர் மனைவி, லோபாமுத்திரையும் வணங்கிய கோலத்தில் உள்ளனர்.

அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை, குருவாக ஏற்றான் இந்திரன். ஒருசமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரைக் கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மகத்தி தோஷம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம், இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை பாபநாசநாதர்என்கின்றனர். இத்தலத்திற்கு இந்திரகீழ க்ஷேத்திரம்என்ற பெயரும் இருக்கிறது.