பிரளயநாதசுவாமி திருக்கோயில், சோழவந்தான்
அருள்மிகு பிரளயநாதசுவாமி திருக்கோயில், சோழவந்தான், மதுரை மாவட்டம்.
+91- 4542- 258 987
காலை 6 மணி முதல்11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பிரளயநாதர் | |
அம்மன் | – | பிரளயநாயகி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | சோழவந்தான் | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சில நூற்றாண்டுகளுக்கு முன், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் ஒருவர், காசியிலிருந்து ஒரு இலிங்கம் கொண்டுவந்து, வைகை ஆற்றின் கரையில் பிரதிஷ்டை செய்து வணங்கினார்.
உலகம் அழியும் காலத்தில் (பிரளயம்) ஏற்படுவது போல கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பயந்த மக்கள் சிவனைப் பிரார்த்தனை செய்தனர். சிவன் இரக்கம் கொண்டு வெள்ளத்தை நிறுத்தினார். பிரளயத்தில் காத்தருளியவர் என்பதால் இவர், “பிரளயநாதர்” என்று பெயர் பெற்றார்.
இங்குள்ள முருகப்பெருமானுக்கு, கந்த சஷ்டியின்போது, ஆறு நாட்களும் சிறப்பு பூஜை நடக்கும். சஷ்டிக்கு மறுநாள் (ஏழாம் நாள்) 40 படி அரிசியில் தயிர் சாதம் செய்து “திருப்பாவாடை தரிசனம்” என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இங்குள்ள பைரவரும் சிறப்பானவர். இவருக்கு இத்தலத்து விருட்சமான வில்வத்தின் காயை உடைத்து, அதன் ஓடுகளில் நெய் விட்டு தீபம் ஏற்றுகின்றனர். இதன் மூலம், நம் பக்கம் நியாயமிருக்கும் வழக்குகளில், வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையும், பாதுகாப்பான வாழ்வைப் பெறலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. சுவாமிக்குப் பின்புறம் மேற்கு நோக்கியுள்ள ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வெண்ணெய் சாற்றி, மறுநாள் அந்த வெண்ணெயைப் பிரசாதமாக வாங்கி அருந்தினால் தீராத வியாதியும் குணமடையும் என்பது நம்பிக்கை.
சுவாமி, அம்பாளுக்கென தனித்தனி சன்னதிகள் உள்ளன. அவ்விரு சன்னதிகளுக்கு நேரே நந்திகள் உள்ளன. மூலவர் பிரளயநாதராகவும், அம்பாள் பிரளயநாயகியாகவும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். சுவாமி சன்னதி கோஷ்டத்தின் வலப்பக்கம் தெற்கு நோக்கி தெட்சிணாமூர்த்தியும், சுவாமிக்கு பின்புறம் மேற்கு நோக்கி வலம்புரி விநாயகரும், வள்ளி, தெய்வானையுடன் முருகனும், அனுமன், இலட்சுமி ஆகியோர் தனி சன்னதிகளிலும், சுவாமிக்கு இடப்புறத்தில் விஷ்ணுதுர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். சுவாமி சன்னதி எதிரே நவக்கிரகம் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளன.
இத்தல விநாயகர் பாலகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடுகின்றனர். செவ்வாய் தோஷம்உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம்.
திருவிழா:
பிரதோஷம், சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம், நவராத்திரி, கந்தசஷ்டி போன்ற திருவிழாக்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
கோரிக்கைகள்:
இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபட இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
சுவாமிக்கு இடதுபுறத்தில், எட்டு கரங்களுடன் அருள்பாலிக்கும் விஷ்ணு துர்கைக்கு, செவ்வாய்கிழமை தோறும் இராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி, செவ்வரளிப் பூவால் அர்ச்சனை செய்தால் திருமணத் தடை மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவை நிர்வத்தியாகும் என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply