Category Archives: விருதுநகர்

அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி

அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி, விருதுநகர் மாவட்டம்.

+91-4566-282 644 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருமேனிநாதர், சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோலநாதர், கல்யாணசுந்தரர், புவனேஸ்வரர், பூமீஸ்வரர்
அம்மன் துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை
தல விருட்சம் அரசு, புன்னை
தீர்த்தம் பாகவரிநதி (குண்டாறு), கவ்வைக்கடல் (சந்நிதிக்கு எதிரில் உள்ளது.) “ஒலிப்புணரிஎன்றும் பெயர்.
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்சுழியல்
ஊர் திருச்சுழி
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

சிவபெருமான் பிரளய வெள்ளத்தைச் சுழித்து பூமிக்குள் புகச்செய்த இடம் என்பதால் இத்தலம் சுழியல்என வழங்கப்படுகிறது என்பது தல புராணத்தில் கூறப்படும் பெயர்க் காரணமாகும்.

சிவபெருமான் திருக்கயிலை மலையைக் காட்டிலும் சிறப்புடையது என்று கருதி இத்திருச்சுழியலில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோர் இத்தலத்திற்கு வந்துள்ளனர். சுந்தரர் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டுத் திருமடத்தில் தங்கியிருந்துபோது இறைவன் அவரது கனவில் கையில் பொற்செண்டும், திருமுடியில் சுழியுமும் கொண்டு காளைப் பருவத்தினராய்க் காட்சிதந்தார் என்பது வரலாறு. திருமணக் கோலத்தில் இறைவன் விளங்குவதால் மக்கள் பலரும் கோயிலில் திருமணம் செய்து கொள்வதைச் சிறப்பாகக் கொண்டு திருமணம் புரிந்து கொள்கின்றனர். சிவராத்திரியன்று திருச்சுழியில் உள்ள சிவனை ஒரு வில்வ இலை கொண்டு அர்ச்சித்தால் அனைத்துத் தலங்களிலும் உறையும் இறைவனை ஆயிரம் வில்வ இலைகளால் அர்ச்சித்த பயனைத் தரும். திருச்சுழியல் நினைத்தாலும், பேசினாலும், கண்டாலும் சிவபதம் தரவல்ல தலம். அறிந்தோ, அறியாமலோ, மறந்தோ, மறவாமலோ செய்த பாவம் திருச்சுழியலை அடைந்தால் புயல் காற்றில் அகப்பட்ட பஞ்சு போல் ஆகிவிடும். இத்தலத்தில் செய்யும் தானதருமங்கள், வேள்விகள் ஆகியவற்றின் பயன் ஏனைய தலங்களிற் செய்யும் பயனைவிட மிகுதியாகும். இத்தலத்தின் வேறு பெயர்கள்: வயலூர், முத்திபுரம், ஆவர்த்தபுரம், சூலபுரம், அரசவனம், சுழிகை, சுழிகாபுரி.

விஸ்வநாதர் திருக்கோயில், சாத்தூர்

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சாத்தூர், விருதுநகர் மாவட்டம்.

+91 4562- 299 800, 94865 11699

காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். வெள்ளியன்று மதியம் 12.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விஸ்வநாதர்
அம்மன் விசாலாட்சி
தல விருட்சம் உருத்ராட்ச மரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சாத்தூர்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன், இவ்விடத்தில் ஒரு விநாயகர் கோயில் இருந்தது. பிற்காலத்தில், பக்தர்கள் இங்கு விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் பத்திரகாளியம்மனுக்கு சிலை வடித்து கோயில் எழுப்பினர். ராஜகோபுரத்திற்கு இருபுறமும் சூரியன், சந்திரன் இருவரும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் காட்சி தரும்படி உருவாக்கப்பட்டனர். காலையில் சூரியனுக்கும், மாலையில் சந்திரனுக்கும் பூஜை நடத்தும் வழக்கம் உருவானது.

உலகை சமப்படுத்த தென்திசைக்கு வந்ததன் அடிப்படையில், இங்கு தெற்கு நோக்கிய அகத்தியர் சன்னதி உள்ளது. பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு விசேஷ பூஜை உண்டு. தை கடைசி வெள்ளியன்று இராகு காலத்தில், இங்குள்ள துர்க்கைக்கு சுமங்கலி பூஜை நடக்கும். அன்று பெண்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள் கிழங்கு, வளையல் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை பிரசாதமாகத் தருவர். ஆஞ்சநேயருக்கு தனிச்சன்னதி உள்ளது. சிவன் சன்னதிக்கு இடப்புறம் பத்திரகாளியம்மனுக்கு தனிக்கோயில் உள்ளது.