Category Archives: விருதுநகர்

அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்‌கோயில், திருவண்ணாமலை

அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்‌கோயில், திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ஸ்ரீநிவாசப்பெருமாள்

தீர்த்தம்

கோனேரிதீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

திருமலை

ஊர்

திருவண்ணாமலை

மாவட்டம்

விருதுநகர்

மாநிலம்

தமிழ்நாடு

இத்தலம் தென்திருப்பதி என்றழைக்கப்படுகிறது. திருப்பதி வேங்கடாசலபதியே வேட்டைக்கு வந்ததாகவும் பக்தர்களைக் காக்கவேண்டி இம்மலையில் திருக்கோயில் கொண்டதாயும் புராணம் கூறுகின்றது. மிகவும் வரப்பிரஸாதியாய்க் கருதப்படுகிறார். ஆதிசேஷனே ஒரு பர்வத வடிவமாகத் தோற்றமளிக்கிறார். அதில் பக்தர்களை காக்கும் பொருட்டு திருவேங்கடமுடயனாகத் தானே தோன்றி நிற்கிறார். சகல ஜனங்களுக்கு அவரவர் விரும்பும் பலன்களைக் கொடுத்துக் கொடுத்து எழுந்தருளி உள்ளார். அம்மலையின் அடிவாரத்தில் தாமரை முதலிய மலர்கள் நிறைந்த பம்பை என்கிற புண்ணிய தீர்த்தமும் உள்ளது. அது சகல பாவத்தையும் போக்கி சகல விருப்பத்தையும் கொடுக்க வல்ல மகிமையுடையது. அதை கோனேரி தீர்த்தம் என்றும் அழைப்பார்கள். திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு நேர்த்திக்கடன் செலுத்தலாம். மலை மீது அமைந்துள்ள கோயிலின் அழகு தோற்றம் காண்போரை வியக்க வைக்கும் அழகுடையது. கோயிலுக்‌கு முன்பாக உள்ள தடாகம் அற்புதமாக உள்ளது.

அருள்மிகு நீர் காத்த ஐய்யனார் திருக்கோயில், இராஜபாளையம்

அருள்மிகு நீர் காத்த ஐய்யனார் திருக்கோயில், இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.

காலை 6 மணி முதல், மாலை மணி 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நீர்காத்த அய்யனார்
அம்மன் பூர்ணா, புஷ்கலா
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் இராஜபாளையம்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

வெகு காலத்திற்கு முன்பே தமிழகத்தில் அய்யனார் வழிபாடு இருந்து வந்தாலும், கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் அய்யனாருக்கு கோயில் அமைக்க முதலாம் ராஜராஜ சோழன் ஏற்பாடு செய்திருக்கிறான். இதன்பின்னர் தான் தமிழகத்தில் மற்ற பகுதிகளில் அய்யனார் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இராஜபாளையம் நீர்காத்த அய்யனார் கோயிலும் அந்த காலக்கட்டத்தில் கட்டப்பட்டது தான்.

பராக்கிரம பாண்டியன் என்பவனது ஆட்சியில் நாட்டின் மேற்குப்பகுதியான இந்த அய்யனார் கோயில் பகுதியை கேரள பந்தள தேச மன்னன் ஆக்கிரமிப்பு செய்தான். அவனை விரட்டியடிக்க பாண்டிய மன்னன், சின்னையா தேவன் என்பவனது தலைமையில் ஒரு படையை அனுப்பி வைத்தான். அந்த வீரர்கள் மதுரையிலிருந்து கிளம்பி ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் வழியாக மேற்கு தொடர்ச்சி மலை சென்று பந்தள மன்னனின் படைகளை விரட்டி அடித்தனர். இதன்பின் பாண்டிய மன்னனின் படைவீரர்கள் தங்களது நாடு திரும்ப அய்யனார் கோயில் அருகே உள்ள ஆற்றின் வழியாக வரும்போது, திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் சிக்கி கொண்ட பாண்டிய படை வீரர்கள் தங்களை காத்து அருளும்படி அய்யனாரை வேண்டிக் கொண்டனர். அப்போது ஆற்றின் கரையில் இருந்த ஒரு பெரிய மரம் திடீரென கீழே விழுந்து ஆற்றை கடக்க உதவும் பாலம் போல இருந்தது. பாண்டியன் படைவீரர்களும் அந்த ஆற்றின் குறுக்கே விழுந்த மரத்தின் மேல் நடந்து உயிர் தப்பினர். இவ்வாறு நீரை காத்து பாண்டியன் படையை காத்ததால் இந்த அய்யனார் நீர் காத்த அய்யனார் என அழைக்கப்பட்டார்.