விஸ்வநாதர் திருக்கோயில், சாத்தூர்

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சாத்தூர், விருதுநகர் மாவட்டம்.

+91 4562- 299 800, 94865 11699

காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். வெள்ளியன்று மதியம் 12.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விஸ்வநாதர்
அம்மன் விசாலாட்சி
தல விருட்சம் உருத்ராட்ச மரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சாத்தூர்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன், இவ்விடத்தில் ஒரு விநாயகர் கோயில் இருந்தது. பிற்காலத்தில், பக்தர்கள் இங்கு விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் பத்திரகாளியம்மனுக்கு சிலை வடித்து கோயில் எழுப்பினர். ராஜகோபுரத்திற்கு இருபுறமும் சூரியன், சந்திரன் இருவரும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் காட்சி தரும்படி உருவாக்கப்பட்டனர். காலையில் சூரியனுக்கும், மாலையில் சந்திரனுக்கும் பூஜை நடத்தும் வழக்கம் உருவானது.

உலகை சமப்படுத்த தென்திசைக்கு வந்ததன் அடிப்படையில், இங்கு தெற்கு நோக்கிய அகத்தியர் சன்னதி உள்ளது. பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு விசேஷ பூஜை உண்டு. தை கடைசி வெள்ளியன்று இராகு காலத்தில், இங்குள்ள துர்க்கைக்கு சுமங்கலி பூஜை நடக்கும். அன்று பெண்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள் கிழங்கு, வளையல் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை பிரசாதமாகத் தருவர். ஆஞ்சநேயருக்கு தனிச்சன்னதி உள்ளது. சிவன் சன்னதிக்கு இடப்புறம் பத்திரகாளியம்மனுக்கு தனிக்கோயில் உள்ளது.

இங்கு சிறிய நாகர் சிலை ஒன்றுள்ளது. திருமண தோஷத்தால் பாதிக்கப்பட்டோர், கோயில் முகப்பில் நாகருக்கு பாலபிஷேகம் செய்து வணங்குகின்றனர். சரஸ்வதி பூஜையன்று இங்குள்ள சரஸ்வதி சன்னதியில் சகலகலாவல்லிமாலை பாராயணத்துடன் விசேஷ பூஜையும், மாணவர்களின் கல்வி சிறக்க வருடத்தில் ஓர்நாள் ஸ்ரீவித்யா ஹோமமும் நடக்கும். அன்று சரஸ்வதிதேவி கோயிலுக்குள் வலம் வருவாள். பின், மாணவர்களுக்கு எழுது பொருட்களைத் தருவர்.

மார்கழி திருவாதிரை விழாவின்போது விஸ்வநாதர் சன்னதி நேரே நடராஜரையும், அவருக்கு எதிரே ஒரு கண்ணாடியையும் வைத்து விடுவர். அன்று காலையில் சிவன், நடராஜர் மற்றும் அவர் முன்புள்ள கண்ணாடி பிம்பத்திற்கு ஒரே சமயத்தில் தீபாராதனை நடக்கும். சிவன் ரூபம் (வடிவம்), அரூபம் (வடிவமில்லாதது), அருவுருவம் (முழுமையான வடிவம் இல்லாத நிலை) என மூன்று நிலைகளில் அருள்பாலிப்பதை உணர்த்தும் விதமாக இந்த பூஜை நடக்கும். கோயில் முகப்பில் அஷ்டலட்சுமிகளுக்கும் சுதை சிற்பம் உள்ளது. உருத்ராட்ச மரம் இத்தலத்தின் விருட்சமாகும்.

திருவிழா:

மார்கழி திருவாதிரை, பவுர்ணமி

கோரிக்கைகள்:

திருமண தோஷத்தால் பாதிக்கப்பட்டோர், கோயில் முகப்பில் நாகருக்கு பாலபிஷேகம் செய்து வணங்குகின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *