Category Archives: திருநெல்வேலி

மதுநாதசுவாமி திருக்கோயில், இலத்தூர்

அருள்மிகு இலத்தூர் மதுநாதசுவாமி திருக்கோயில், இலத்தூர், திருநெல்வேலி மாவட்டம்

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மதுநாதசுவாமி
தல விருட்சம் புளியமரம்
தீர்த்தம் அனுமன் ஆறு
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் இலைத்தூர்
ஊர் இலத்தூர்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

உலக முதல்வனான சிவபெருமானுக்கும், பார்வதிக்கும், திருக்கைலாயத்தில் திருமணம் நடந்தது. அந்த சமயத்தில், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்ததால், பூமி நிலை குலைந்தது. இதையறிந்த சிவபெருமான் குள்ள முனிவரான அகத்தியரைத் தென்திசைக்குச் சென்று பூமியை சமப்படுத்த வேண்டினார். அகத்தியர் தென்திசை நோக்கி வந்த போது அனுமன் ஆறும் குறுக்கிட்டது. அந்த ஆற்றில் நீராடி மணலால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார். அப்போது, இலிங்கம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த புளியமரத்திலிருந்து தேன் வடிந்தது.

அகத்தியர் மரத்தின் உச்சியைப் பார்த்தபோது தேன்கூடு ஒன்றைக் கண்டார். சற்று நேரத்தில் இலிங்கத்தின் மீது தேன் கொட்ட ஆரம்பித்தது. இதன்பிறகு மணல் இலிங்கம் இறுகி கல் இலிங்கம் போல் மாறி விட்டது. அதத்தியர் அந்த காட்சியைக் கண்டு மதுநாதா என அழைத்தார். தேனுக்கு மது என்ற பெயரும் உண்டு. தமிழ் வளர்த்த அகத்தியர் உருவாக்கி வழிப்பட்ட இலிங்கம் உடைய கோயிலே மதுநாதசுவாமி கோயில் ஆகும். புளியமரத்தின் இலையின் தூரிலிருந்து தேன் வடிந்ததால் இவ்வூர் இலைத்தூர் என்றாகி காலப்போக்கில் இலத்தூர் ஆனது.

கோத பரமேஸ்வரர் திருக்கோயில், குன்னத்தூர்

அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில், குன்னத்தூர், திருநெல்வேலி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கோதபரமேஸ்வரர்(கைலாசநாதர்)
அம்மன் சிவகாமி அம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் குன்னத்தூர்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

ஒரு காலத்தில் குன்னத்தூரை ஆண்ட அரசனுக்குச் சொந்தமான தோட்டத்தில் ஒரு அதிசய மரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு ஆண்டில் ஒரு பூ பூத்து ஒரு பழம் மட்டுமே பழுக்கும். அந்த அதிசயக் கனியை அரசன் மட்டுமே உண்ணுவான். ஒரு முறை அந்த மரத்தின் பக்கமாக தண்ணீர் எடுத்து சென்ற ஒரு பெண்ணின் குடத்தில் மரத்தில் பழுத்திருந்த பழம் விழுந்து விட்டது.

இதை அறியாத பெண் வீட்டிற்கு சென்று விட்டாள். மரத்தில் பழத்தை காணாத அரசன் காவலர்களை அனுப்பி வீடு வீடாக பழத்தை தேடச்சொன்னான். இதற்குள் குடத்திலிருந்த தண்ணீரை எடுக்கும் போது அதற்குள் பழம் இருப்பதைக்கண்டு, அந்தப்பழத்தை அரசனிடம் கொண்டு போய் கொடுத்தாள்.