Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், உறையூர்

அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், உறையூர்– 620 003. திருச்சி மாவட்டம்.
*****************************************************************
+91- 99767 17317(மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிப்பொறுப்பு ஏற்பதற்கு முன்பு அவர்களுக்குள் நாட்டை பிரித்துக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. தங்கள் மூவருக்கும் பொதுவான ஒருவரை வைத்து எல்லையைப் பிரித்துக் கொள்ள விரும்பினர். எனவே, அம்பிகையை வேண்டித் தவமிருந்தனர்.

அம்பிகை, அவர்களுக்கு காட்சி தந்தார். மூவேந்தர்களும் தாங்கள் ஆட்சி செய்ய வேண்டிய பகுதியை நிர்ணயம் செய்து தரும்படி வேண்டினர். அம்பிகை நாட்டை மூன்றாகப் பங்கிட்டு எல்லை வகுத்து தனித்தனியே பிரித்துக் கொடுத்தாள். அந்நாடுகள் அவர்களது பெயரிலேயே அழைக்கப்பட்டது. அப்போது மூவேந்தர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் அமர்ந்தருளும்படி அம்பிகையிடம் வேண்டிக்கொண்டனர்.

அம்பிகையும் அவ்வாறே அருள் செய்தார். அப்போது சோழ மன்னன், தனக்கு பிரித்துக் கொடுத்திருக்கும் நாடு எப்போதும் செழிப்பாக இருக்க அருள வேண்டும் என வேண்டினான்.

அவனது கோரிக்கையை ஏற்ற அம்பிகை, காவிரி நதியால் அவனது நாடு எப்போதும் செழிப்புற்றிருக்கும் படி அருளினாள். சோழ மன்னனுக்கு அருள் செய்த அம்பிகை, இத்தலத்தில் செல்லாண்டியம்மனாகஅருளுகிறாள்.

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி – 638 451, சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்.
*****************************************************************

+91-4295-243366, 243442 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்

தல விருட்சம்: – வேங்கைமரம்

தீர்த்தம்: – தெப்பக்கிணறு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – மண்ணாரி

ஊர்: – பண்ணாரி

மாவட்டம்: – ஈரோடு

மாநிலம்: – தமிழ்நாடு

சுமார் 300 வருடங்களுக்கு முன்பு இச்சுற்று வட்டார மக்கள் ஆடு மாடுகளை மேய்க்க இந்த வனப்பகுதிக்கு வருவது வழக்கம்.

ஒருநாள் காராம் பசு ஒன்று தினந்தோறும் பட்டியை (மாடுகள் கூட்டம்) விட்டுவிட்டு தனியே சென்று வருவதை மேய்க்கிறவன் கவனித்து விட்டான். பிறகு அப்பசுவை பின்தொடர்ந்து சென்று பார்க்கையில் அப்பசு தன் மடியிலூறும் பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் அடர்ந்த புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிச்சையாக பொழிவதை பார்த்தான்.

இதை ஊர் மக்களிடம் தெரிவிக்க, அவர்கள் வந்து அந்த குறிப்பிட்ட இடத்தை சுத்தம் செய்கையில் அடர்ந்த புற்கள் சூழ்ந்த ஒரு புற்றும் அதனருகில் சுயம்புலிங்கத் திருவுருவமும் வேங்கை மரத்தடியில் இருப்பதைக் கண்டார்கள்.

அப்போது அங்கிருந்தவருக்கு அருள் வந்து, “கேரளாவிலிருந்து பொதிமாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன். எழில் மிகுந்த இவ்விடத்தில் நான் தங்கி விட்டேன். என்னை இனிமேல் பண்ணாரி மாரியம்மன் என போற்றி வழிபடுங்கள்என்று அருள் வாக்கு கூறினார். இதையடுத்து பண்ணாரி மாரியம்மனுக்குக் குடில் அமைத்து மக்கள் வழிபட்டனர்.