அருள்மிகு கங்கையம்மன் திருக்கோயில், சந்தவாசல்

அருள்மிகு கங்கையம்மன் திருக்கோயில், சந்தவாசல் – 606 905. திருவண்ணாமலை மாவட்டம்.
**********************************************************************************************************

+91 4181 243 207, 96773 41227 (மாறங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1 மணி வரை நடை திறந்திருக்கும்.

மூலவர்: – கங்கையம்மன்

உற்சவர்: – கங்காதேவி

தல விருட்சம்: – வில்வம்

தீர்த்தம்: – பெருமாள் தீர்த்தம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – சந்தவாசல்

மாவட்டம்: – திருவண்ணாமலை

மாநிலம்: – தமிழ்நாடு

தட்ச யாகத்திற்கு பின், அம்பிகையைப் பிரிந்த சிவன் பூலோகம் வந்தார். இதனால் உக்கிரத்துடன் இருந்த சிவனின் வெம்மையை, அவரது தலையில் இருந்த கங்காதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சிவனை சாந்தப்படுத்தும்படி அவள் திருமாலை வேண்ட, அவரும் அவ்வாறே செய்தார். மேலும், அவரது உக்கிரமான பார்வையால் எரிந்த பகுதிகளைச் சுற்றிலும் ஏழு நீர் நிலைகளை உண்டாக்கி அணைத்தார். இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் இங்கு பெருமாள், கங்காதேவிக்கு கோயில் கட்டினார். காலப்போக்கில் இக்கோயில்கள் மறைந்து போனது.

தென்னாட்டுக் கோயில்களை அந்நியர்கள் ஆக்கிரமிப்பு செய்தபோது, குமார கம்பணன் என்ற வடநாட்டு சிற்றரசர் படையெடுத்து சென்று அந்நியர்களை அழித்து, கோயில்களை மீட்டார். அவர் தென்னாடு வரும் வழியில், இவ்வூரில் தங்கினார். இப்பகுதியை ஆண்ட ராசநாராயண சம்போராயர், குமார கம்பணன் படையெடுத்து வந்ததாகக் கருதி அவருடன் போரிட்டார். போரில் கம்பணன் வென்றார். தோற்ற மன்னன் ராசகம்பீர மலையில் ஒளிந்து கொண்டார். அப்போது, குமார கம்பணனின் மனைவி, இத்தலத்தின் மகிமையறிந்து கங்காதேவிக்கு கோயில் எழுப்பினாள். போரில் வென்ற குமார கம்பணர், ராசநாராயண சம்போராயரை அழைத்து, நாட்டைத் திருப்பிக்கொடுத்தார். இதனால் சேனைக்கு மீண்டான் வாசல்என்று இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டது.

அருள்மிகு கனகதுர்கா திருக்கோயில், கனகபுரி

அருள்மிகு கனகதுர்கா திருக்கோயில் கனகபுரி – 520 001. விஜயவாடா மாவட்டம். ஆந்திரா மாநிலம்
*****************************************************************************************************

+91 866 2423600 2425 744 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கனகதுர்கேசுவரி

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – பெஜ்ஜவாடா, பிஜபுரி

ஊர்: – கனகபுரி, இந்திரகிலபர்வதம்

மாவட்டம்: – விஜயவாடா

மாநிலம்: – ஆந்திரா

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. ஆதிசங்கரர் இத்தலத்திற்கு வருகை தந்து அம்பாள் சன்னதியில் ஸ்ரீசக்ரம் பிரதிட்டை செய்திருப்பது சிறப்பு. இங்குள்ள இறைவனின் பெயர் மல்லேசுவரர்.

கீலா என்ற அசுரன் துர்க்கையின் அருள் வேண்டித் தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த துர்க்கை காட்சி கொடுத்து, வேண்டும் வரம் கேள் என்றாள். அன்னையே! நீ எப்போதும் என் இதயத்திலேயே வாசம் செய்ய வேண்டும், என வரம் கேட்டான். கீலாவின் வேண்டுகோளை ஏற்ற துர்க்கை, மகனே! நீ கிருஷ்ணா நதிப்படுகையில் மலையாக உயர்ந்து நில், அரக்கர்களை அழித்த பின் நான் உன் இதயத்தில் இருப்பேன், என வரமளித்தாள்.துர்க்கையின் ஆணைப்படி, கீலா மலையாக மாறினான். அன்னை துர்கா, மகிஷாசுரன் என்ற அரக்கனை வதம் செய்தபின், கீலா மலைமீது அஷ்டகரங்களுடன் மகிஷாசுரமர்த்தினி என்ற திருநாமத்துடன் வாசம் செய்தாள். இந்த மலை மீது கோடான கோடி சூரியன்கள் பிரகாசிப்பதைப் போன்று, அன்னை துர்கா பொன்னாக ஜொலித்தாள். தங்க மழையும் பொழியச்செய்து அத்தலத்தைச் செழிப்பாக்கினாள். அன்று முதல் கனக துர்கா என்ற பெயரில் தேவர்கள் அவளைப் பூசித்து வந்தனர். இத்தலத்தின் புனிதத்தை அதிகரிக்க அசுவமேத யாகம் நடத்தப்பட்டது. பிரம்மா இத்தலத்தில், சிவலிங்கம் பிரதிட்டை செய்தார். அருச்சுனன் இத்தலத்தில் தவம் செய்து, சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தைப் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.