அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில், வேப்பஞ்சேரி

அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில், வேப்பஞ்சேரி, சித்தூர் மாவட்டம். ஆந்திரா மாநிலம்.

காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் லட்சுமிநாராயணர்
தாயார் மகாலட்சுமி
தல விருட்சம் பாரிஜாதம்
தீர்த்தம் தசாவதார தீர்த்தக்குளம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வேம்பஞ்சம்ஹரி
ஊர் வேப்பஞ்சேரி
மாவட்டம் சித்தூர்
மாநிலம் ஆந்திரம்

ஆந்திர மாநிலத்தில் 750 ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சி செய்த காலத்தில் இக்கோயில் அமையப்பெற்றது. பின்னர், அடுத்தடுத்து நடந்த படையெடுப்பு காரணமாக கோயிலின் பெருமை குறைந்தது. பசு வளர்ப்பு, விவசாயம் இக்கிராமத்து மக்களின் முக்கிய தொழில். மழை பொய்த்ததால் விவசாயம் பாதித்தது; கால்நடைகள் தீவனம் இன்றி தவித்தன; பசி, பட்டினியால் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். இவைகளுக்கு காரணம் தெரியாமல் மக்கள் தவித்தனர். நாளடைவில் விடைதேடிய கிராம மக்கள் ஒன்று கூடினர்; விவாதித்தனர். வேப்பஞ்சேரியின் காக்கும் கடவுளான லட்சுமி நாராயணனுக்கு கடந்த காலங்களில் பூஜை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தனர். அப்போது, அசரீரியாக ஒலித்த குரல், “எனக்கு முன் போல் நித்ய பூஜைகளும், அபிஷேகங்களும், குறைவில்லாமல் செய்து வந்தால், என்னுடைய அருளால் இக்கிராமம் செழிக்கும், குலம் விளங்கும், மாடு, கன்று, பயிர்கள் செழிக்கும்; உங்களின் பாவங்களிலில் இருந்து விடுதலையும் கிடைக்கும்என்று கூறியது. இதைத் தொடர்ந்து இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு, நித்ய பூஜைகளும், பிரம்மோற்சவம் முதலான விழாக்களும் நடந்து வருகின்றன.

கோயிலின் கொடிமரத்தை தாண்டி உள்ளே சென்றால், அமைதி தவழும் முகத்துடன் கருடனையும், துவாரபாலகரையும் வழிபடலாம். கருவறை விமானத்தில் கலியுக கண்ணன் அமர்ந்துள்ளார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீனிவாசபெருமாள் கண்ணைக்கவரும் விதத்தில் அமர்ந்துள்ளார். சகல பாவத்தையும் போக்கும் சுதர்சன சக்கரமும் அமைந்துள்ளது.

அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில், ஏத்தாப்பூர்

அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில், ஏத்தாப்பூர் சேலம் மாவட்டம்.

+91- 4282 – 270 210

காலை 9.30 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் லட்சுமி கோபாலர்
தாயார் வேதவல்லி
தீர்த்தம் வசிஷ்ட தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் ஏத்தாப்பூர்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

பார்வதியின் தந்தை தட்சன், சிவபெருமானை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினான். தான் செல்லாத யாகத்திற்கு, பார்வதியை செல்ல வேண்டாம் என தடுத்தார் சிவன். ஆனால், தன் கணவனுக்கு மரியாதை கொடுக்காத தந்தையிடம் நியாயம் கேட்பதற்காக அம்பாள், யாகம் நடத்திய இடத்திற்கு சென்றுவிட்டாள். கோபம் கொண்ட சிவன், அம்பாளை பிரிந்து பூலோகம் வந்தார். ஒரு வில்வமரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் மூழ்கினார். கணவன் தனித்து இருந்ததை அறிந்த அம்பாள் தன் அண்ணன் மகாவிஷ்ணுவுடன் பூலோகம் வந்தாள். சிவனை வணங்கி மன்னிக்கும்படி வேண்டினாள். மகாவிஷ்ணு தன் தங்கைக்காக சிவனிடம் பரிந்து பேசி சமரசம் செய்தார். கோபம் தணிந்த சிவன், அம்பாளை மன்னித்து ஏற்றுக் கொண்டதோடு லிங்கமாகவும் எழுந்தருளினார். விஷ்ணுவும் அவருக்கு அருகிலேயே தங்கிவிட்டார். இந்நிகழ்ச்சி இத்தலத்தில் நடந்ததாக தலவரலாறு கூறுகிறது.