அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், திருக்கோவிலூர்
அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், திருக்கோவிலூர் – 605757, விழுப்புரம் மாவட்டம்.
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருவிக்கிரமர் |
தாயார் | – | பூங்கோவல் நாச்சியார் |
தல விருட்சம் | – | புன்னைமரம் |
தீர்த்தம் | – | பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம்,ஸ்ரீசக்ரதீர்த்தம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருக்கோவலூர் |
ஊர் | – | திருக்கோவிலூர் |
மாவட்டம் | – | விழுப்புரம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக, அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான். அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன(குள்ள) அவதாரம் எடுத்து, யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தரவிடாது தடுக்கிறார். ஆனாலும் குருவின் பேச்சை மீறி தானம்தர மகாபலி ஒப்புக் கொள்கிறான். அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியைப் பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகாபலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை வைத்து அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொன்னார். மகாபலி கமண்டலத்தை எடுத்து நீரை ஊற்றித் தானத்தை தாரை வார்க்க முயல, சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கமண்டலத்தின் மூக்குப்பகுதியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க, விஷ்ணு தர்ப்பைப் புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார். மகாபலி கமண்டலத்தை எடுத்து மூன்றாவது அடியைத் தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது.
அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர்
அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர்– 631102, வேலூர் மாவட்டம்.
+91- 44-2232 1221, +91-4172-260 255 (மாற்றங்களுக்குட்பட்டவை)
மலைக்கோயில்களில் காலை 8 முதல் மாலை 5.30 மணிவரை தரிசனம் செய்யலாம்.
மூலவர் | யோக நரசிம்மர் (அக்காரக்கனி ) |
உற்சவர் | பக்தவத்சலம், சுதாவல்லி |
தாயார் | அமிர்தவள்ளி |
தீர்த்தம் | அமிர்த தீர்த்தம், தக்கான்குளம் |
பழமை | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | திருக்கடிகை |
ஊர் | சோளிங்கர் |
மாவட்டம் | வேலூர் |
மாநிலம் | தமிழ்நாடு |
பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். இவர்கள் இங்கு வந்து தவம் இருந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. ஒரு காலத்தில் விசுவாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு “பிரம்மரிஷி” பட்டம் பெற்றாராம். அதே போல் தங்களுக்கும் பெருமாளின் தரிசனம் உடனடியாக வேண்டும் என்ற காரணத்தினால்தான் அவர்கள் இங்கு தவமிருந்தனர். இராமாவதாரம் முடிந்ததும் இராமன் ஆஞ்சநேயரிடம், “இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதை போக்கி வை” என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்ய, அது முடியாமல் போனதால் இராமனை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து, ரிஷிகளைக் காப்பாற்றினார்.