அருள்மிகு சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் திருக்கோயில், உடுமலைப்பேட்டை

அருள்மிகு சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4252 – 224 755 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சீனிவாசர்
உற்சவர் வரதராஜப்பெருமாள்
தீர்த்தம் சஞ்சீவி தீர்த்தம்
ஆகமம் பாஞ்சராத்ரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் உடுமலைப்பேட்டை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு, குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த பெருமாள் பக்தர் ஒருவர், குழந்தை வேண்டி திருப்பதி வெங்கடேசரை தொடர்ந்து வணங்கி வந்தார். ஓர்நாள், ஆஞ்சநேயரிடம் முறையிட்ட அவர், “எனக்கு குழந்தை வரம் அருள, பெருமாளிடம் பரிந்துரைக்கமாட்டாயாஎன்று கூறி வேண்டினார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், “அரசமரங்கள் நிறைந்த வனத்தின் நடுவே உள்ள புற்றின் அருகில் பெருமாள் சிலை கவனிப்பாரற்று கிடக்கிறது. அச்சிலையை எடுத்து கோயில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும்என்றார். அதன்படி பக்தர், பெருமாளைக் கண்டெடுத்து கோயில் கட்டினார். குழந்தை வரமும் கிடைத்தது. பின்னர் தனக்கு அருளிய ஆஞ்சநேயரையும் பெருமாளின் அருகிலேயே வைத்தார்.

வடக்கு நோக்கிய தலம் என்பதால் செல்வச்சிறப்பு வேண்டுவோர் இத்தலத்தில் வழிபடலாம். ஆஞ்சநேயரும், பெருமாளும் இணைந்துள்ளதால், சீனிவாச ஆஞ்சநேயப்பெருமாள் என்று மூலவருக்கு பெயர் சூட்டப்பட்டது. மேலும் மத்வாச்சாரியார், இராகவேந்தர் ஆகியோரும் பெருமாள் அருகில் உள்ளனர். மூலவர், மகாலட்சுமியை தனது மார்பில் தாங்கியவர் என்பதால் இங்கு தாயாருக்கு தனிச்சன்னதி இல்லை. பிரசாதமாக அட்சதை வழங்கப்படுவது சிறப்பு.

அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில், உக்கடம்

அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில், உக்கடம், லட்சுமி நரசிம்மர் கோயில் அருகில் கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கரிவரதராஜப் பெருமாள்
தாயார் பூமி நாயகி, நீளா நாயகி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் உக்கடம்
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

பல நூறு ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னன் ஒருவன் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தான். ஒரு முறை அவன் கொங்கு தேசம் எனப்படும் இப்பகுதிக்கு வந்தபோது காஞ்சி வரதராஜப் பெருமாளைத் தரிசனம் செய்ய விரும்பினான். அதன் அடிப்படையில் இங்கு ஒரு கோயில் கட்டி, பெருமாளைப் பிரதிஷ்டை செய்து கரிவரதராஜப் பெருமாள் என திருநாமம் சூட்டி வழிபட்டான்.

கொங்கு நாட்டிலுள்ள பெருமாள் கோயில்களில் இக்கோயிலுக்குள்ள தனிச்சிறப்பு, உத்ராயணம், தட்சிணாயணம் என சொல்லப்படும் இரட்டை நுழைவு வாயில்கள் அமைந்திருப்பதுதான். பொதுவாகப் பெருமாள் கோயில்களில் வடக்கு முகமாக சொர்க்கவாயில் அமைந்திருப்பது வழக்கம். ஆனால் இக்கோயிலில் தெற்குமுகமாகவும் வடக்கு முகமாகவும் இரண்டு சொர்க்க வாயில்கள் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. தற்போது பாதுகாப்பு கருதி தெற்கு வாயில் மூடப்பட்டுள்ளது.