Monthly Archives: December 2011

அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில், அகஸ்தியம்பள்ளி

அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில், அகஸ்தியம்பள்ளி, (வழி) வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91-4369 – 250 012 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அகத்தீஸ்வரர்
அம்மன் மங்கை நாயகி, பாகம்பிரியாள்
தல விருட்சம் வன்னி, அகத்தி
தீர்த்தம் அகத்திய தீர்த்தம், அக்னிதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அகஸ்தியான்பள்ளி
ஊர் அகஸ்தியன் பள்ளி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் திரண்டிருந்தனர். இதனால் வடதிசையிலிருந்த கைலாயம் தாழ்ந்தது. தென்திசை உயர்ந்தது. இதை சமப்படுத்த, சிவபெருமான் அகத்தியரை அழைத்து, தென்திசைக்கு செல்லும்படி உத்தரவிட்டார். சிவனின் ஆணைப்படி அகத்தியர் தென்திசைக்கு சென்றார். செல்லும் வழிகளில் சிவலிங்கப் பிரதிஷ்டைசெய்து வழிபாடு நடத்தினார். அகத்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்தில் அகத்தியருக்கு சிவன் திருமணக்காட்சி தந்து அருளினார். இதனால் இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர்ஆனார். அகத்தியர் திருவுருவம் கோவிலில் உள்ளது. குலசேகர பாண்டியனுக்கு இருந்த வியாதிபோக்க இத்தலத்தில் உற்சவம் நடத்தி நீங்கப் பெற்றதாக வரலாறு. எமன் வழிபட்ட சிறப்புடையது.

இராஜகோபுரம் மூன்று நிலைகளை உடையது. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். அம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் சுவாமியைப் பார்த்தவாறு அகத்தியர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே திசை பார்த்து உள்ளன. இராசராசன் மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு உள்ளன. சுவாமி சன்னதியில் உள்ள குளம் அக்னி புஷ்கரணி எனப்படுகிறது. மக்கள் இக்கோயிலை அகஸ்தியர் கோயில் என்றே கூறுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையின் பெயர்ப்பலகையும் அகஸ்தியர் கோயில் என்றே எழுதப்பட்டுள்ளது.

அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்

அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்(திருமறைக்காடு), நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4369 -250 238 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்)
அம்மன் வேதநாயகி, யாழைப் பழித்த மொழியாள், வீணாவாத விதூஷணி
தல விருட்சம் வன்னிமரம், புன்னைமரம்
தீர்த்தம் வேததீர்த்தம், மணிகர்ணிகை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமறைக்காடு
ஊர் வேதாரண்யம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர்

வடமொழி வேதங்கள் ரிக், யசூர், சாம, அதர்வணம் என்ற நான்கும் மனித உருக்கொண்டு, இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி, அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலர் எடுத்து இத்தலத்து இறைவனைப் போற்றி வழிபாடுகள் செய்தன. கலியுகம் பிறந்தவுடன், “இனி நல்லவற்றுக்கு காலம் இல்லை. இனி நாங்கள் இருப்பது நல்லதல்லஎன்று இறைவனிடம் கூறிவிட்டு இத்தலத்தின் பிரதான வாயிலை அடைத்து விட்டுச் சென்று விட்டன. இன்றும் இத்தலத்தை சுற்றிலும் மரம், செடி, கொடி என்று வனமாக இருந்து இறைவனை வழிபாடு செய்து வருவதாகக் கருதப்படுகிறது. பிரதான வாயில் அடைக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பக்கத்திலுள்ள திட்டி வாயில் வழியாக வந்து இறைவனை வழிபட்டு வந்தனர். பின்னர் இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரப்பதிகம் பாடி கதவை திறந்தனர் என்பதும், வேதங்களே இறைவனை வணங்கியதால் வேதாரண்யம்என்று பெயர் வந்தது என்பதும் தலவரலாற்றுச் செய்தி.

சைவ சமயத்தின் முக்கிய நாயன்மார்களில் இருவரான அப்பரும் ஞானசம்பந்தரும் சிவதலம் தோறும் சென்று எம்பெருமானை போற்றிப் பதிகம் பாடி வருகையில் இந்த திருமறைக்காட்டிற்கும் வந்தனர். அப்போது வேதங்களே வழிபட்ட இத்தலத்து மறைக்காட்டீசுவரரை வழிபட எண்ணி கோயிலுக்கு செல்கையில் கோயிலின் பிரதான வாயிற் கதவு மூடப்பட்டிருந்தது. இறைவனை எல்லோரும் பக்கத்து வாயில் வழியாகவே சென்று வழிபட்டவண்ணம் இருந்தனர். இதைப்பார்த்த அப்பரும் சம்பந்தரும் இறைவனை வணங்க இப்படியொரு சிக்கல் இருப்பது ஏன் என்று வினவினர். வேதங்கள் பூஜித்து வந்து வரம்பெற்றுப் பின்னர் திருக்கதவைத் தாழிட்டுவிட்டுச் சென்ற விபரம் அறிந்தனர். உடனே ஞானசம்பந்தர் அப்பரிடம் மிக்க பழமை மிக்க வேதங்களே வழிபட்ட இத்திருக்கோயில் கதவை திறந்து இறைவனை நேராக தரிசிக்க திருப்பதிகம் பாடியருளுமாறு வேண்டிக் கொண்டார். அதைக்கேட்ட அப்பர் மிகுந்த ஆராமையோடும் பண்ணினேர்மொழியென்று மொத்தம் 10 திருப்பாசுரம் பாடியவுடன் கதவு திறந்து கொண்டது. உள்ளே சென்று ஆனந்தப்பரவசத்துடன் மறைக்காட்டீசரை வணங்கிவிட்டு வெளியே வந்தபோது அப்பர், “சம்பந்தரே! இந்த கதவு எப்போதும் மூடவும் திறக்கவும் பதிகம் பாடும்என்று கேட்டுக்கொள்ள ஞானசம்பந்தர் சதுரம் மறைஎன்று ஒரே ஒரு திருப்பதிகம் பாடியவுடன் கதவு மூடிக்கொண்டது. இறைவனின் இந்த கருணையை எண்ணி இருவரும் பரவசம் எய்தினர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கதை நிகழ்ந்த கோயில் இது.