Monthly Archives: December 2011

அருள்மிகு பிரமபுரீசுவரர் திருக்கோயில், அம்பல்

அருள்மிகு பிரமபுரீசுவரர் திருக்கோயில், அம்பல், வழி பூந்தோட்டம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.

+91 4366 238 973 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரம்மபுரீஸ்வரர், அம்பரீசர், மாரபுரீசுவரர்
அம்மன் சுகந்த குந்தளாம்பிகை, பூங்குழலம்மை, வண்டமர் பூங்குழலி, வம்பவனப் பூங்குழலி
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் பிரமதீர்த்தம், இந்திர தீர்த்தம், அன்னமாம் பொய்கை, சூலதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அம்பர்பெருந்திருக்கோயில், பிரமபுரி, புன்னாகவனம்
ஊர் அம்பர், அம்பல்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

திருமால், பிரமன் ஆகிய இருவருமே தாமே பிரமம் என தம்முள் மாறுபட்டபோது இருவரிடையே அழல் உருவாய் ஓங்கி நின்றான் இறைவன். இந்த அனல் பிழம்பின் அடியையோ, முடியையோ காண்பவரே உலகின் முழுமுதல்வர் என்று கூறிய இறைவனது உரையின்படி, திருமால் பன்றி உருவம் கொண்டு அடியைக் காண புறப்பட்டுத் தேடி, தன் இயலாமையை இறைவனிடம் தெரிவித்து நின்றார். பிரம்மன் அன்னமாய் பறந்துசென்று முடியைக் காணாமலே கண்டதாகப் பொய்யுரை கூறி நின்றார். பெருமன் பிரமனை அன்னமாகும்படி சபித்தார். பிரமன் பிழைபொறுக்க இறைவனை வேண்டினான். பெருமான் புன்னாகவனம் என்னும் இத்தலத்தை அடைந்து தவம் செய்யுமாறு கூறினார். பிரமனும் அவ்வாறே இத்தலத்தை அடைந்து பொய்கை ஒன்றை உண்டாக்கி, அதன் நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு அன்ன உருவம் நீங்கிப் பழைய உருவம் பெற்று, படைப்புத் தொழிலை மேற்கொண்டார். பிரம்மனுக்கு இறைவன் காட்சி வழங்கிய ஐதீக விழா ஆண்டுதோறும் மாசி மகத்தன்று நடக்கிறது.

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், கொட்டாரம்

அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், கொட்டாரம், நெடுங்காடு வழி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.

+91- 4368 – 261 447 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐராவதீஸ்வரர்
அம்மன் வண்டமர் பூங்குழலி , சுகந்தகுந்தளாம்பிகை
தல விருட்சம் பாரிஜாதம்
தீர்த்தம் வாஞ்சியாறு, சூரிய தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கோட்டாறு
ஊர் திருக்கொட்டாரம்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்

ஐராவதம் சொர்க்கலோகத்தில் இந்திரனுக்கு வாகனமாக உள்ள யானை. வெண்மை நிறமும் நான்கு கொம்புகளும் உடையது. ஒரு முறை துர்வாச முனிவர் காசியில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு இறைவனுக்கு சாத்திய தாமரை மலர் ஒன்றை யானைமீது அமர்ந்து பவனிவரும் இந்திரன் கையில் கொடுத்தார். செல்வச் செருக்கால் இந்திரன் அம்மலரை ஒரு கையால் வாங்கி யானை மீது வைத்தான். யானை அம்மலரை தன் துதிக்கையால் கீழே தள்ளிக் காலால் தேய்த்தது. துர்வாசர் இந்திரனையும் யானையையும் சபித்தார். அவர் சாபப்படி ஐராவதம் காட்டானையாகி நூறு ஆண்டுள் பல தலங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு, மதுரையில் இறைவன் அருளால் பழைய வடிவம் பெற்றது என்பது திருவிளையாடற்புராண வரலாறு. ஐராவதம் காட்டானையாய் வழிபட்ட தலங்களில் திருக்கோட்டாறும் ஒன்று.

சுபமகரிஷி என்பவர் நாள்தோறும் வந்து இப்பெருமானைத் தரிசித்து வந்தார். ஒருநாள் அவர் வருவதற்கு நேரமானதால் கோயில் கதவு சார்த்தப்பட்டது. அதைக் கண்ட சுபர்தேனீ வடிவம் கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டார். அதுமுதல் அங்கேயே தங்கிவிட்டார். அக்காலந் தொடங்கி மூலவர் சந்நிதியில் தேன்கூடு இருந்து வருகிறது. தரிசிக்கச் செல்வோர் அக்கூட்டைத் தொடாது எட்டி நின்று பார்த்துவிட்டு வரவேண்டும். ஆண்டுக்கொரு முறை இக்கூட்டிலிருந்து தேனையெடுத்துச் சுவாமிக்குச் சார்த்துகிறார்களாம். மீண்டும் கூடு கட்டப்படுகின்றதாம். இம் மகரிஷியின் சுபமக ரிஷியின் உருவமே வெளிச் சுற்றில் பின்றத்தில் உள்ளது. முன் மண்டபத்திற்கு அருகில் குமாரபுவனேசுவரர் கோவிலுள்ளது. மேற்கு நோக்கிய பெரிய சிவலிங்கம் இங்குள்ளது. இதை அகத்தியரும் சுகமகரிஷியும் சேர்ந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். கோடு கரை. வாஞ்சியாற்றின் கரையில் விளங்குவதால் இத்தலம் கோட்டாறு எனப்பட்டது. வெள்ளையானை தன் கோட்டினால் மேகத்தை இடித்து மழையை ஆறுபோலச் சொரிவித்து வழிபட்டதால் கோட்டாறு எனவும் பெயர் வந்திருக்கலாம். அகத்தியர், சுபகமுனிவர், குமாரபுவனதேவர், முதலியோர் வழிபட்டு அருள்பெற்ற சிறப்புடையது இத்தலம். மூன்று நிலை இராஜகோபுரத்துடன் நாற்புறமும் மதில் சூழ அழகுற விளங்குகிறது. உள்ளே கொடிமரமும், துவார கணபதி சிலையும் உள்ளன. கொடி மரத்தின் வடபுறம் அகத்திய இலிங்கம் கொண்ட தனிச் சன்னதி மேற்குமுகம் கொண்டு திகழ்கிறது.