Category Archives: முருகன் ஆலயங்கள்

அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், அலவாய்ப்பட்டி

அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், அலவாய்ப்பட்டி, ராசிபுரம், நாமக்கல் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

(நன்றி – தினமலர்)

மூலவர்

பாலசுப்ரமணியசுவாமி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அலவாய்ப்பட்டி

மாவட்டம்

நாமக்கல்

மாநிலம்

தமிழ்நாடு

ஒருகாலத்தில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தவித்து மருகிய பக்தர் ஒருவர் பழநி முருகனை தரிசிக்க சென்றார். பக்தரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, அலவாய் மலையைக் குறிப்பிட்டுச் சொல்லி, தான் அங்கு எழுந்தருளி இருப்பதாகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வசதியாக மலையில் படிக்கட்டுகள் அமைத்துக் கொடுக்கும் படியும் கூறியதோடு, இந்தப் பணி முடியும் வேளையில், உனக்கு குழந்தைப் பிறக்கும் என்று அருளினாராம். அதன்படி, அந்தப் பக்தர் இத்தலம் வந்து கந்தனைத் தரிசித்து, அன்பர்களின் வசதிக்காக மலையில் படிக்கட்டுகள் அமைத்து கொடுத்தார். அந்தப் திருப்பணி முடிவுறும் நேரத்தில் அவருக்குக் குழந்தை பிறந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாகவும் சொல்வர். முருகப்பெருமான் கந்தசஷ்டி தினத்தில் சூரனை வதம் செய்து ஆட்கொண்டார். முருகனின் அருள்பெற்ற சூரபத்மன் தெற்கு திசையில் இருப்பதாக ஐதீகம். அவனுக்கு அருள்பாலிக்கும் விதமாக ஆஞ்சநேயர், இந்த மலையில் தெற்குப் பார்த்தபடி காட்சி தருகிறார். இவரை வணங்கினால், சனி தோஷங்கள் யாவும் விலகும் என்பது நம்பிக்கை. கொங்கணச் சித்தர் நீண்டகாலம் தங்கி வழிபட்டதால், இந்த மலை, “கொங்கண மலைஎன அழைக்கப்பட்டு, தற்போது அலவாய் மலைஎனப்படுகிறது. முருகப்பெருமானின் சந்நிதிக்கு முன்பாக, மயிலும் நந்தியும் ஒருங்கே அமைந்திருப்பது சிறப்பு. இங்கேயுள்ள சுனை நீர் வற்றவே வற்றாதாம்.

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆண்டார்குப்பம்

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆண்டார்குப்பம், திருவள்ளூர் மாவட்டம்.

+91- 44 – 2797 4193, 99629 60112 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பால சுப்பிரமணியர்
உற்சவர் சுப்பிரமணியர்
அம்மன் விசாலாட்சி
தீர்த்தம் வேலாயுத தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ஆண்டார்குப்பம்
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

பாடியவர் அருணகிரியார்

கைலாயம் சென்ற பிரம்மா, அங்கிருந்த முருகனைக் கவனிக்காமல் சென்றார். பிரம்மாவை அழைத்த முருகன், “நீங்கள் யார்?” எனக்கேட்டார். “நான்தான் படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாஎன அகங்காரத்துடன் கூறினார். அவரது அகந்தையை ஒழிக்க முருகன், எதன் அடிப்படையில் படைப்புத்தொழில் செய்கிறீர்கள் எனக்கேட்டார். அவர் ஓம்என்று சொல்லி அதற்கு பொருள் தெரியாமல் விழிக்க, முருகன் அவரைச் சிறை வைத்தார். பொதுவாக, பிறரிடம் கேள்வி கேட்பவர்கள், மேலான பொறுப்பில் உள்ளவராகவோ அல்லது அவரை விடவும் பெரியவராகவோதான் தான் இருக்க முடியும். இங்கு பிரணவத்தின் வடிவமான முருகன், பிரம்மாவை விடவும் உயர்ந்தவராக இருக்கிறார். எனவே பிரம்மாவிடம் அதிகாரத்துடன், தனது இரண்டு கரங்களையும் இடுப்பில் வைத்து கேள்வி கேட்டார். இந்த அமைப்பிலேயே இத்தலத்தில் அருள்புரிகிறார். முருகனை இத்தகைய வடிவில் காண்பது மிக அபூர்வம்.


பிற்காலத்தில் இந்த முருகனை, ஆண்டிகள் சிலர் வழிபட்டு வந்தனர். அப்போது தலயாத்திரை சென்ற பக்தர் ஒருவர், இங்கு தங்கினார். மாலையில் தீர்த்த நீராடிவிட்டு முருகனை வழிபட வேண்டுமென நினைத்து, ஆண்டிகளிடம் நீராடும் இடம் எங்கிருக்கிறது?” எனக் கேட்டார். அவர்கள் அப்படி தீர்த்தம் எதுவும் இல்லை என்றனர். அப்போது ஆண்டிக்கோலத்தில் சிறுவன் ஒருவன் அங்கு வந்தான். பக்தரிடம் தான் தெப்பத்திற்கு அழைத்துச் செல்வதாக சொல்லியவன், தான் வைத்திருந்த வேலால் ஓரிடத்தில் குத்தினான். அங்கு நீர் பொங்கியது. ஆச்சர்யத்துடன் அதில் நீராடிய பக்தருக்கு, சிறுவன் முருகனாகக் காட்சி கொடுத்தார். இவரே இத்தலத்தில் பாலசுப்பிரமணியராக அருளுகிறார்.