அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், சுண்டக்காமுத்தூர்
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், சுண்டக்காமுத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்.
*********************************************************************************************************
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
ஊர்: – சுண்டக்காமுத்தூர்
மாநிலம்: – தமிழ்நாடு
சுமார் 200 வருடங்களுக்கு முன்பு, இந்தப் பகுதியில் சுண்டைக்காய் விளைச்சல் அமோகமாக இருக்கும். இதனால் சுண்டைக்காய்முத்தூர் என்றே ஊரின் பெயரும் அமைந்தது. ஒருநாள், சுண்டைக்காய் பயிரிட்ட நிலத்தில் ஏதோவொன்று தட்டுப்பட, அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து நிலத்தை தோண்டினர். அப்போது, பூமியில் இருந்து அம்மனின் விக்ரகம் தென்பட்டது. அப்போது அங்கிருந்த பெண்,”நான் செல்லாண்டி ஆத்தா வந்திருக்கேன். இங்கேயே குடியிருக்கப் போகிறேன்” என அருள் வந்து ஆடினாள். இதையடுத்து அம்மன் விக்ரகத்தை அருகிலேயே பிரதிட்டை செய்து, சிறிய கோயில் எழுப்பி வழிபடத் துவங்கினர்.
கோயில் பிரகாரத்தில் கருப்பணசாமியும் அவரது வாகனமான குதிரையும் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் விளைநிலத்திலிருந்து வந்து காடு மேடுகளை செழிக்கச் செய்வதால் இந்த முறை என்ன பயிரிட வேண்டும் என அம்மனிடம் உத்தரவு கேட்கும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது. என்னென்ன விதைக்க வேண்டும் என்பதை தனித்தனி சீட்டுகளில் எழுதி, அம்மனுக்கு முன்னே போடுவார்களாம். பிறகு, அங்கிருப்பவர்களில் எவர் மீதாவது அம்மன் அருள் இறங்கும். அவர் எடுத்து தரும் சீட்டில் என்ன உள்ளதோ, அதையே அந்த வருடம் பயிரிடுவர். இதனால் விளைச்சல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், உறையூர்
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், உறையூர்– 620 003. திருச்சி மாவட்டம்.
*****************************************************************
+91- 99767 17317(மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிப்பொறுப்பு ஏற்பதற்கு முன்பு அவர்களுக்குள் நாட்டை பிரித்துக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. தங்கள் மூவருக்கும் பொதுவான ஒருவரை வைத்து எல்லையைப் பிரித்துக் கொள்ள விரும்பினர். எனவே, அம்பிகையை வேண்டித் தவமிருந்தனர்.
அம்பிகை, அவர்களுக்கு காட்சி தந்தார். மூவேந்தர்களும் தாங்கள் ஆட்சி செய்ய வேண்டிய பகுதியை நிர்ணயம் செய்து தரும்படி வேண்டினர். அம்பிகை நாட்டை மூன்றாகப் பங்கிட்டு எல்லை வகுத்து தனித்தனியே பிரித்துக் கொடுத்தாள். அந்நாடுகள் அவர்களது பெயரிலேயே அழைக்கப்பட்டது. அப்போது மூவேந்தர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் அமர்ந்தருளும்படி அம்பிகையிடம் வேண்டிக்கொண்டனர்.
அம்பிகையும் அவ்வாறே அருள் செய்தார். அப்போது சோழ மன்னன், தனக்கு பிரித்துக் கொடுத்திருக்கும் நாடு எப்போதும் செழிப்பாக இருக்க அருள வேண்டும் என வேண்டினான்.
அவனது கோரிக்கையை ஏற்ற அம்பிகை, காவிரி நதியால் அவனது நாடு எப்போதும் செழிப்புற்றிருக்கும் படி அருளினாள். சோழ மன்னனுக்கு அருள் செய்த அம்பிகை, இத்தலத்தில் “செல்லாண்டியம்மனாக” அருளுகிறாள்.