Monthly Archives: February 2012

அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், சவுகார்பேட்டை

அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், சவுகார்பேட்டை, சென்னை, சென்னை மாவட்டம்.

+91-44- 2538 2142, 2539 2869 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரசன்ன வெங்கடேசர்
உற்சவர் வெங்கடேசப்பெருமாள்
தாயார் அலர்மேலுமங்கை
தீர்த்தம் வராக புஷ்கரிணி
ஆகமம் வைகானசம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சவுகார்பேட்டை
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு லால்தாஸ் என்ற பெருமாள் பக்தர் இப்பகுதியில் வசித்து வந்தார். சந்நியாசியான இவர் தினமும் திருப்பதிப் பெருமாளை மனதில் நினைத்து வணங்கியபின்பே, பணிகளை துவக்குவார். இவ்வழியாக தலயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தன்னால் இயன்ற சேவை செய்வதையும் வழக்கமாககொண்டிருந்தார். அவருக்கு திருப்பதி சென்று பெருமாளை வணங்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால் நீண்டநாட்களாக அந்த ஆசை நிறைவேறவில்லை. நாளடைவில் அந்த ஆசையே ஏக்கமாக மாறியது. அவருக்கு அருள்புரிய எண்ணினார் திருமால். ஒருநாள் இரவில் லால்தாஸின் கனவில் தோன்றிய சுவாமி, தனக்கு அவரது இருப்பிடத்திலேயே கோயில் எழுப்பி வழிபடும்படி கூறினார். மகிழ்ந்த சந்நியாசி, கோயில் கட்ட ஆயத்தமானார். ஆனால், அவரிடம் பணமில்லை. எனவே மக்களிடம், கோயில் கட்ட உதவும்படி கேட்டார். யாரும் பணம் கொடுக்கத் தயாராக இல்லை. எனவே தனக்கு தெரிந்த வித்தையை பயன்படுத்தி செம்பை, தங்கமாக மாற்றினார். அதை விற்று கிடைத்த பணத்தில் கோயில் கட்டும் பணியை தொடங்கினார். அவரது மகிமையை அறிந்த மக்கள் கோயில் கட்ட பணம் கொடுத்தனர். அதன்பின்பு இவ்விடத்தில் திருப்பதி வெங்கடாஜலபதியைப் போலவே சுவாமி சிலை அமைத்து, கோயில் எழுப்பப்பட்டது. அலர்மேலுமங்கை தாயாருக்கும் சன்னதி அமைக்கப்பட்டது. சுவாமி, லால்தாஸின் மனதில் பிரசன்னமாக தோன்றி காட்சி கொடுத்தருளினார். பிரசன்ன வெங்கடேச பெருமாள் என்றும் பெயர் பெற்றார்.

திருப்பதியில் நடக்கும் பூஜை முறையிலேயே இங்கும் பூஜை நடக்கிறது. மூலஸ்தானத்தில் பஞ்ச பேரர்கள் என்னும் ஐந்து பெருமாள் இருக்கின்றனர். சுவாமி திருமார்பில் 108 லட்சுமி திருவுருவம் பொறித்த மாலை அணிந்திருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு பச்சைக்கற்பூரம் சார்த்தி விசேஷ பூஜை நடக்கிறது.

அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில், கோயம்பேடு

அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில், கோயம்பேடு, சென்னை, சென்னை மாவட்டம்.

+91 – 44- 2479 6237, 6569 9626 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வைகுண்டவாசர்
உற்சவர் பக்தவச்சலர்
தாயார் கனகவல்லி
தல விருட்சம் வில்வம், வேம்பு
தீர்த்தம் லவகுச தீர்த்தம்
ஆகமம் வைகானசம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் குசலவபுரி
ஊர் கோயம்பேடு
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

அயோத்தியில் இராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் அவதூறாகப் பேசினர். சீதையின் கற்பை நிரூபிக்க இராமர் அவளை வனத்திற்கு அனுப்பினார். வனத்திலிருந்து வால்மீகி முனிவர், சீதைக்கு ஆதரவு கொடுத்து, தன்னுடன் தங்க வைத்தார். கர்ப்பவதியாக இருந்த அவள், வால்மீகி ஆசிரமத்தில் லவன், குசன் என்னும் இரண்டு மகன்களை பெற்றாள். இராமன் தங்களது தந்தை என தெரியாமலேயே, லவகுசர் வளர்ந்தனர். இச்சமயத்தில் இராமன், அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அஸ்வமேதயாக குதிரை லவகுசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றை கட்டிப்போட்டுவிட்டனர். குதிரையுடன் வந்த சத்ருக்கனன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. மேலும், சத்ருக்கனனுடன் போரிட்டு வென்றதோடு, குதிரையை மீட்க வந்த இலட்சுமணரையும் வென்றனர். இதையறிந்த இராமன், வனத்திற்கு ஒரு ஒற்றனை அனுப்பி சீதையையும், வால்மீகியையும் அழைத்து வரும்படி செய்தார். அப்போது சீதாதேவி, தன் கணவரை மீண்டும் சந்திக்கப்போகும் மகிழ்ச்சியில் இங்கிருந்து கிளம்பிச்சென்றாள்.