Monthly Archives: February 2012

அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் (பேயாழ்வார்) திருக்கோயில், மயிலாப்பூர்

அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் (பேயாழ்வார்) திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை மாவட்டம்.

+91-44 2464 3873, 2494 3873, 94440 35591 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆதிகேசவப்பெருமாள்
உற்சவர் ஆதிகேசவர்
தாயார் மயூரவல்லி
தல விருட்சம் அரசு
தீர்த்தம் சந்திர புஷ்கரிணி (சர்வ தீர்த்தம்)
ஆகமம் வைகானசம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மயூரபுரி
ஊர் மயிலாப்பூர்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

திரேதாயுகத்தில் இத்தலத்தில் உள்ள கைரவிணி புஷ்கரிணியின் கரையில் மகரிஷிகள் யாகம் நடத்தினர். மது என்ற அசுரன், யாகம் நடக்க விடாமல் தொந்தரவு செய்தான். இதனால், மகரிஷிகள், அசுரனை அழித்து யாகம் நடத்திட அருளும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினர். அவர்களுக்கு காட்சி தந்த மகாவிஷ்ணு, அசுரனை அழிப்பதாக ஒப்புக்கொண்டார். மேலும், யாகத்தை தொடர்ந்து நடத்தும்படி கூறினார். அதன்படி மகரிஷிகள், யாகத்தை தொடர்ந்தனர். அசுரன் அங்கு வந்தான். அப்போது, மகாவிஷ்ணு யாகத்தில் இருந்து தோன்றி, அசுரனை அழித்தார். பின்பு, மகரிஷிகளின் வேண்டுதலுக்காக இத்தலத்தில் எழுந்தருளினார். இவரே இத்தலத்தில், “ஆதி கேசவப்பெருமாள்என்ற பெயரில் அருளுகிறார்.

முதலாழ்வார்கள் மூவரில் ஒருவரான, பேயாழ்வார் அவதரித்த தலம் இது. திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான நந்தகம் என்னும் வாள், மகாலட்சுமியிடம் தனக்கு உபதேசம் செய்யும்படி வேண்டியது. ஒப்புக்கொண்ட மகாலட்சுமி, அந்த வாளைப் பூலோகத்தில் பிறந்து மகாவிஷ்ணுவை வணங்கும்படியும், அதன்பின் தான் உபதேசம் செய்வதாகவும் கூறினாள். அதன்படி நந்தகம் (வாள்), இங்குள்ள மணி கைரவிணி தீர்த்தத்தில் மலர்ந்த அல்லி மலரில் அவதரித்தது. இவர் மகதாஹ்வயர்என்று பெயர் பெற்றார். இத்தலத்தில் பெருமாளுக்குத் தினசரி பூமாலை அணிவித்து சேவை செய்த இவருக்கு, மகாலட்சுமி உபதேசம் செய்தாள். பெருமாள் மீது அதீதமாக பக்தி கொண்டதால் இவர், “பேயாழ்வார்என்று பெயர் பெற்றார்.

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பூந்தமல்லி

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பூந்தமல்லி, சென்னை, சென்னை மாவட்டம்.

+91 44 – 2627 2066 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வரதராஜப்பெருமாள்
தாயார் புஷ்பவல்லி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் பூந்தமல்லி
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

1009ம் ஆண்டில் இங்கு வசித்த வீரராகவர்கமலாயர் தம்பதியின் மகனாக அவதரித்தவர் திருக்கச்சி நம்பி. இவர் தினமும் காஞ்சிபுரம் சென்று, வரதராஜரை வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நந்தவனம் அமைத்து, அங்கு பூத்த மலர்களைத் தொடுத்து மாலையாக்கி சுவாமிக்கு அணிவித்து வந்தார். மேலும், சுவாமிக்கு ஆலவட்ட சேவையும் (விசிறுதல்) செய்வார். வயதான காலத்தில் தள்ளாடியபடியே காஞ்சிபுரம் கிளம்பினார். தன் பக்தனின் சிரமம் கண்ட வரதராஜர், பூந்தமல்லிக்கே வந்து அவருக்கு காட்சி தந்தார். அவர் காட்சி கொடுத்த இடத்தில் பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.

வரதராஜப்பெருமாள் புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின்தலையில் சூரியனுடன் இருக்கிறார். எனவே, இது சூரியத்தலமாக கருதப்படுகிறது. ஜோதிடரீதியாக சூரியதசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளோர், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், வரதராஜருக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.