Monthly Archives: December 2011

அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், பெரும்புலியூர்

அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், பெரும்புலியூர், திருநெய்த்தானம் போஸ்ட், திருவையாறு வழி, தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 94434 47826,+91- 94427 29856 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 10 மணி முதல் இரவு 11 மணி மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வியாக்ரபுரீஸ்வரர், புலியூர் நாதர்
அம்மன் சவுந்தரநாயகி, அழகம்மை
தல விருட்சம் சரக்கொன்றை
தீர்த்தம் காவிரிதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பெரும்புலியூர்
ஊர் பெரும்புலியூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். மரங்களில் ஏறி, பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து சிவபூஜை செய்ய நகங்களில் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வியாக்ரம்புலி; பாதர்கால்களை உடையவர்) என்று பெயர் வந்தது. நடராஜரின் சன்னதிகளில் ஒரு புறம் இவரும், மற்றொரு புறம் பதஞ்சலி மகரிஷியும் உள்ளனர். புலிக்கால் முனிவராகிய இவர் வழிபட்ட தலங்கள் திருப்பாதிரிப்புலியூர், பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), எருக்கத்தம் புலியூர், ஓமாம்புலியூர், பெரும்புலியூர் ஆகியன. பஞ்ச புலியூர்த்தலங்களில் இதுவும் ஒன்று.நான்கு அடுக்குகளால் ஆன தாமரை மலரின் மேல் சுவாமியின் கருவறை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் இத்தல முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார். புதர் மண்டிக்கிடந்த இத்தலத்தை மதுரை சுந்தர சுவாமிகள் வெளிஉலகிற்கு தெரியப்படுத்தினார்.
இலிங்கோத்பவர் அருகில் அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். 3 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு பார்த்த கோயில். பிரகாரத்தில் சித்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், தெட்சிணாமூர்த்தி, நால்வர், அர்த்தநாரீஸ்வரர், சண்டிகேஸ்வரர், நவகிரகம், சோமாஸ்கந்தர், வாராகி, பைரவர், சூரியன், சந்திரன், நந்தி, நடராஜர் சன்னதிகள் உள்ளன. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். ஆனால் இங்கு நவகிரகங்கள் சூரியனைப்பார்த்தபடி உள்ளது சிறப்பாகும்.

அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம்

அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்), தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 4362-260 553 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர்
உற்சவர் கிருதபுரீஸ்வரர்
அம்மன் பாலாம்பிகை, இளமங்கையம்மை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் காவிரிதீர்த்தம்
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநெய்த்தானம்
ஊர் தில்லைஸ்தானம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பசு ஒன்று தினமும் தன் பாலைக் குறிப்பிட்ட இடத்தில் சொரிவதை வழக்கமாக கொண்டிருந்தது. தினமும் இப்படி செய்ததால் வெயிலுக்கும், மழைக்கும் பால் முழுவதும் நெய்யாக மாறியது. ஒரு நாள் மாடு மேய்க்கும் இடையன் மறைந்திருந்து பார்க்க, பசு மறைந்து விட்டது. காமதேனுவே பசுவாக வந்து பால்சொரிந்த விஷயம் இவனுக்குத் தெரியவில்லை. இடையன் கூறியதைக்கேட்ட மக்கள், நெய் இருந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது, அங்கே சிவலிங்கம் இருந்தது. மன்னனுக்கும் இந்த செய்தி பரவியது. சிவபக்தனான அவன் சிவனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து, தினமும் நெய்யினால் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தான். இன்றும் இந்த சிவனுக்கு நெய்யினால் அபிஷேகம் நடக்கிறது. எனவே இறைவன் நெய்யாடியப்பர் (திருநெய்த்தானனார்)” ஆனார்.

இத்தலத்தில் நடந்த இன்னொரு வரலாறும் உண்டு. ஒரு சிவனடியார் தினமும் இறைவனுக்கு நெய் விளக்கு போட்டுவிட்டுத் திரும்பும் போது, பிரகாரத்தில் உள்ள கீரைகளை பறித்து கொண்டு போவதை வழக்கமாக கொண்டிருந்தார். வயதான காலத்தில் அவர் சிவனிடம், “இறைவா! நான் தினமும் உனக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்கிறேன். இப்போது எனக்கு வயதாகிவிட்டது. எனக்கு அருள்புரிந்து காக்க வேண்டும்என வேண்டினார். இறைவன் அசரீரியாக,”நீ எனக்கு நெய் விளக்கு போட்டதற்குக் கைமாறாக, கோயில் பிரகாரத்திலிருந்த கீரையை பறித்து சென்றாய். ஆகவே உனக்கு வேறு எப்படி அருள்புரிய முடியும்என்றார். இவ்வாறு தல வரலாறு கூறுகிறது. இதிலிருந்து அறியப்படும் நீதி என்னவெனில் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது.