அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம்

அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்), தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 4362-260 553 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர்
உற்சவர் கிருதபுரீஸ்வரர்
அம்மன் பாலாம்பிகை, இளமங்கையம்மை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் காவிரிதீர்த்தம்
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநெய்த்தானம்
ஊர் தில்லைஸ்தானம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பசு ஒன்று தினமும் தன் பாலைக் குறிப்பிட்ட இடத்தில் சொரிவதை வழக்கமாக கொண்டிருந்தது. தினமும் இப்படி செய்ததால் வெயிலுக்கும், மழைக்கும் பால் முழுவதும் நெய்யாக மாறியது. ஒரு நாள் மாடு மேய்க்கும் இடையன் மறைந்திருந்து பார்க்க, பசு மறைந்து விட்டது. காமதேனுவே பசுவாக வந்து பால்சொரிந்த விஷயம் இவனுக்குத் தெரியவில்லை. இடையன் கூறியதைக்கேட்ட மக்கள், நெய் இருந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது, அங்கே சிவலிங்கம் இருந்தது. மன்னனுக்கும் இந்த செய்தி பரவியது. சிவபக்தனான அவன் சிவனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து, தினமும் நெய்யினால் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தான். இன்றும் இந்த சிவனுக்கு நெய்யினால் அபிஷேகம் நடக்கிறது. எனவே இறைவன் நெய்யாடியப்பர் (திருநெய்த்தானனார்)” ஆனார்.

இத்தலத்தில் நடந்த இன்னொரு வரலாறும் உண்டு. ஒரு சிவனடியார் தினமும் இறைவனுக்கு நெய் விளக்கு போட்டுவிட்டுத் திரும்பும் போது, பிரகாரத்தில் உள்ள கீரைகளை பறித்து கொண்டு போவதை வழக்கமாக கொண்டிருந்தார். வயதான காலத்தில் அவர் சிவனிடம், “இறைவா! நான் தினமும் உனக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்கிறேன். இப்போது எனக்கு வயதாகிவிட்டது. எனக்கு அருள்புரிந்து காக்க வேண்டும்என வேண்டினார். இறைவன் அசரீரியாக,”நீ எனக்கு நெய் விளக்கு போட்டதற்குக் கைமாறாக, கோயில் பிரகாரத்திலிருந்த கீரையை பறித்து சென்றாய். ஆகவே உனக்கு வேறு எப்படி அருள்புரிய முடியும்என்றார். இவ்வாறு தல வரலாறு கூறுகிறது. இதிலிருந்து அறியப்படும் நீதி என்னவெனில் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது.

அம்மன் பாலாம்பிகை என்றும் இளமையாகவே காட்சி தருகிறாள். எத்தலத்து அம்மனையும் பாடாத திருநாவுக்கரசர், இத்தல அம்மனின் அழகில் மயங்கி,”ஏந்திளமங்கையும் நீயும் நெய்த்தானத் திருந்ததுவேஎனப் பாடுகிறார்.

ஆண்டிற்கு 3 முறை திருவையாறிலிருந்து ஐயாறப்பர் இங்கு வருகிறார். சப்தஸ்தானத்தில் இத்தலம் ஏழாவது. திருவிழா காலத்தில் ஏழூர் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் சிறப்புடைய தலம். சுந்தர் வைப்புத்தலமாக பாடியுள்ளார். அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தல முருகனை புகழ்ந்துள்ளார். ஒட்டக்கூத்தரும், புகழேந்தியாரும் பாடியுள்ளனர்.

காமதேனு, காசியபரிஷி, சரஸ்வதி ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்துள்ளனர். நர்த்தன கணபதி இங்கு சிறப்பு. தெட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பல்லவ மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர். இலங்கையை ஆண்ட மன்னர்கள் தங்கள் குலதெய்வமாக நெய்யாடியப்பரைப் பூஜித்துள்ளனர்.

சாலையிலிருந்து பார்த்தாலே தெரிகிறது கோயில். அழகிய கிழக்கு நோக்கிய கோயில். 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது.

ராஜகோபுரம் தாண்டி உள்நுழைந்தவுடன் வலப்பக்கம் அம்மன் கோயில் மண்டபத்துடன் தனிக்கோயிலாக உள்ளது. அம்மன் பெயர் பாலாம்பிகை. தமிழில் இளமங்கையம்மை. தெற்கு நோக்கிய சன்னிதி. அழகிய மூர்த்தம். இடக்கரத்தில் சங்கும், கீழ் இடக்கரத்தால் தொடையைத் தொட்டுக்கொண்டு காட்சியளிக்கிறார். வலக்கரத்தில் சக்கரத்துடன் எல்லோருக்கும் எல்லாம் வல்ல அபயமளிக்கும் அன்னை நீண்ட ஆயுளையும், மோட்சத்தையும் தரச் சித்தமாயிருக்கிறாள்.

பலிபீடம் தாண்டி உட்சென்றால் உள்பிரகாரத்தில் வினாயகர், முருகன் சன்னிதிகள் தனிக்கோயிலாக உள்ளன. இலிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா ஆகியோர் கோஷ்ட மூர்த்தங்கள். வலம் முடித்து வந்தால் நேரே உள்ளே தெரிவது மூலவர். அவரைப் பார்க்குமுன் முன்னே அழகிய இரு துவாரபாலகர்கள். 5 அடி உயரம் கொண்ட சிற்பங்கள். மிக அழகிய முத்திரைகள் தாங்கிக் காட்சி தருகின்றனர்.

மூலவர், நடுத்தர உயரம் கொண்ட திருமேனி. பெயருக்கேற்றவாறு பசு நெய்யினால் அபிஷேகம் நடைபெறுகிறது. வெளவால்களின் தொல்லை மிகுதியாக உள்ளது. கருவறை விமானம் ஏகதள அமைப்புடையது.

கோயிலின் உள்ளே மகாவிஷ்ணுவுக்கு தனி சன்னிதியுண்டு. கிடைத்த கல்வெட்டுக்களைப் பார்க்கும்போது சோழர் அல்லது பல்லவர் காலத்து பங்களிப்புக்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சிவனுக்கு நெய்யால் அபிஷேகம் ஆன பின்பு வெந்நீர் அபிஷேகம் நடப்பது தலத்தின் சிறப்பு.

தேவாரப்பதிகம்:

பறையும்பழி பாவம் படுதுயரம் பலதீரும் பிறையும் புனல்அரவும் படுசடை எம்பெருமானூர் அறையும் புனல் வருகாவிரி அலைசேர் வடகரைமேல் நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானம் எனீரே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 52வது தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை

கோரிக்கைகள்:

கோயில் சொத்து, அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாத எண்ணத்தை பெற இங்கு வேண்டுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

வழிகாட்டி:

திருவையாற்றுக்கு மேற்கே 2 கீ மீ தொலைவில் அமைந்துள்ள தலம். காவிரிக்கரையினிலேயே அமைந்துள்ளது. தஞ்சையிலிருந்தும், திருவையாற்றிலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *